தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட டாப் ஹீரோக்களின் சூப்பர் ஹிட் காட்சிகள்! ஏன் தெரியுமா?

திரைக்கதை சலிக்காமல் ஓட வேண்டும் என்ற ஆசையில், ரீல் காலத்தில் ‘தியேட்டர் எடிட்டர்கள்’ கத்தரிக்கோல் பிடித்து பாடல்கள், காட்சிகளை வெட்டி ரசிகர்களுக்கேற்ற முடிவுகளை உருவாக்கிய சுவாரஸ்ய அனுபவங்கள்
Theatre operators editing films
Theatre operators editing filmsImage credit: ai
Updated on

திரைத்துறையில் எடிட்டர் மிக முக்கியமானவர். இயக்குநர் எடுத்து வந்த காட்சிகளை ஒட்டி, வெட்டி, கதை ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கக் காரணமாக இருப்பவர் அவரே.

60-களில் திரு.கே. சங்கர் மற்றும் ஏ. பீம்சிங் இருவரும் எடிட்டிங், இயக்கம் என்று இரண்டையும் சிறப்பாகச் செய்து பல வெற்றிப் படங்களைத் தந்தார்கள். பீம்சிங் அவர்களின் மகன்தான் பிரபல எடிட்டர் லெனின்.

பல ஃபிளாஷ்பேக் காட்சிகளைக் கொண்ட ஒரு படத்தில் எடிட்டரின் பங்கு அளப்பரியதாக இருக்க வேண்டும். அப்படி வந்த சிறந்த படங்கள் பாலச்சந்தரின் 'அவர்கள்' மற்றும் பாக்யராஜ் அவர்களின் 'மௌன கீதங்கள்'. சலிப்புத் தட்டாத திரைக்கதை இருந்தால் மட்டுமே தியேட்டரில் காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்படும்; இல்லையென்றால் கேண்டீன் சென்று விடுவார்கள்.

அதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது, "தியேட்டர் எடிட்டர்" என்று சொல்லப்படும் ஆபரேட்டர்கள் தேவையில்லை என்று நினைக்கும் காட்சிகளைத் தூக்கி விடுவார்கள். அப்படி நடந்த, நான் பார்த்த சில சம்பவங்களை இங்கே பதிவிடுகிறேன்:

இதையும் படியுங்கள்:
‘சினிமா எனக்கு தொழில் அல்ல, அதுதான் நான்’ - முதல் ஆஸ்கரை வென்ற ‘டாம் குரூஸ்’..!
Theatre operators editing films

கல்லுக்குள் ஈரம்:

பாரதிராஜா ஹீரோவாக நடித்த படம். கதாநாயகி அருணா. டைரக்டர் மற்றும் கேமராமேன் நிவாஸ் அவர்கள். இந்தப் படத்தில் டைரக்டராகவே பாரதிராஜா நடித்திருப்பார். ஒரு ஊருக்கு ஷூட்டிங் செல்லும் இயக்குநருக்கும், அந்த ஊரில் இருக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. அவளுக்கு ஒரு முறைப்பையன் இருக்கிறான். கிளைமாக்ஸில் காதலர்கள் இருவரும் ஒன்று சேர்வது போல காட்சி வரும் போது, அவளது முறைப்பையன் அந்த இயக்குநரைக் குத்திக் கொன்று விடுகிறான்.

படத்தின் இந்த முடிவு ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போனது. உடனே, தியேட்டர் எடிட்டர்கள் அந்தக் குத்தும் காட்சியை நீக்கி விட்டார்கள். காதலர்கள் ஒன்று சேர்வதோடு படம் டக்கென்று முடியும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் முழுவதும் இப்படி மாற்றினார்கள். அப்படியும் படம் பெரிதாக எடுபடவில்லை.

நாளை நமதே:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த 'நாளை நமதே' படத்தில் 'காதல் என்பது காவியம் ஆனால்' என்று ஒரு பாட்டு வரும். இந்தப் பாட்டு வருவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்புதான் இன்னொரு பாட்டும் வரும். அடுத்தடுத்து பாடல்கள் வந்ததால் ரசிகர்கள் தியேட்டரை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்தார்கள். இதன் காரணமாக, மறுநாளே 'காதல் என்பது காவியம் ஆனால்' பாடல் தூக்கப்பட்டது. இது நடந்தது பொள்ளாச்சி தியேட்டர்களில்!

இதையும் படியுங்கள்:
இந்த படம் நிச்சயம் உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் , சிந்திக்கவும் வைக்கும்!
Theatre operators editing films

இந்தியன்:

'இந்தியன்' படம் மிகப்பெரிய வெற்றித் படம். அந்தப் படத்தில் சுதந்திரப் போராட்டக் காட்சிகள் சுமார் இருபது நிமிடங்களுக்கு மேல் வரும். திருவாரூர் தியேட்டரில் அந்த மொத்தக் காட்சியும் வெறும் ஐந்து நிமிடத்தில் முடியும்படி எடிட் செய்யப்பட்டது.

உன்னை நினைத்து

படத்தின் நீளம் அதிகமாக இருப்பது போல் தெரிந்தால் டைரக்டர் பொதுவாகக் காமெடி காட்சிகளில்தான் கை வைப்பார். விக்ரமன் அவர்களின் 'உன்னை நினைத்து' படத்தில் இடம்பெற்ற, சார்லி நடித்த சில காமெடி காட்சிகளை இரண்டாம் நாளே இந்தத் தியேட்டர் எடிட்டர்கள் தூக்கி விட்டார்கள்; ரசிகர்களை அதிகம் ஈர்க்காத காரணத்தால் அது நீக்கப்பட்டது. தற்போது மீம்ஸ் கிரியேட்டர்களால் அந்தச் சில காட்சிகள் பல சமயம் ரீ-ரிலீஸ் ஆகிவிடுகிறது.

நினைத்தேன் வந்தாய்

இந்த எடிட்டர்கள் பல வெற்றிப் படங்களின் பாடல்கள் மற்றும் காட்சிகளில் தங்கள் கத்தரிக்கோலை வைத்து வெட்டியிருக்கிறார்கள். அதில் 'நினைத்தேன் வந்தாய்' படத்தில் இடம்பெற்ற 'உன் மார்பில் விழி மூடி தூங்குகிறேன் தினமும் கனவு' பாடலும் உண்டு.

காதல் கோட்டை

'காதல் கோட்டை' படத்தில் தேவயானி தனது தோழியோடு ஹாஸ்டலில் இருக்கும் போது நடக்கும் சில காட்சிகளையும் நீளம் கருதி எடுத்துவிட்டார்கள்.

'தூறல் நின்னு போச்சு'

படத்தில் இடம்பெற்ற 'பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்' பாடல் ஒரு தியேட்டரில் நீக்கப்பட்டது. இதில் காமெடி என்னவென்றால், அந்தத் தியேட்டருக்குப் படம் பார்க்க பாக்யராஜ் தனது உதவியாளர்களுடன் சென்றிருக்கிறார்.

சம்பந்தப்பட்ட காட்சி வந்த போது, பாடல் இல்லாமலேயே அடுத்த காட்சி வந்துவிடுகிறது! என்ன ஆயிற்று என்று புரியாமல் இடைவேளையின் போது ஆபரேட்டரிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு அவர், "சார், அந்தப் பாட்டு வரும் போது நிறையப் பேர் எழுந்து வெளியே போயிடுறாங்க, அதான் தூக்கிட்டேன்!" என்று சொன்னாராம். இதை ஒரு பேட்டியில் பாக்யராஜ் அவர்களே சொல்லியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
கடைசி நிமிடம் வரை சீட் நுனியில் உட்கார வைக்கும் படங்கள்... OTT-ல் மிஸ் பண்ணிடாதீங்க!
Theatre operators editing films

இதெல்லாம் ரீல் (Reel) இருந்த வரையில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள். இப்போது, "போதும்டா சாமி, ரீல் அறந்து போச்சு!" என்று கவுண்டமணி 'மாமன் மகள்' படத்தில் சொன்ன பஞ்ச் நிஜமாகிவிட்டது. தற்போது டிஜிட்டல் புரொஜெக்டர் மூலமாகப் படங்கள் திரையிடப்படுவதால், மாற்றங்கள் செய்ய இயக்குநருக்கு மட்டுமே ஏகபோக அதிகாரம் உள்ளது.

பழைய தியேட்டர் எடிட்டர்கள் இப்போது இல்லை. பழையவர்கள் இதைச் செய்தது ரசிகர்களை மகிழ்விக்க மட்டுமே; அனைவரும் படம் முடியும் வரையில் அமர்ந்து ரசிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில்தான்!

logo
Kalki Online
kalkionline.com