விமர்சனம்: தீயவர் குலை நடுங்க - பவர் புல் டைட்டில், பட் கதை..?
ரேட்டிங்(2.5 / 5)
கடந்த சில ஆண்டுகளாக மலையாளத்தில் பல திரில்லர் படங்கள் வந்து கேரளாவையும் தாண்டி தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களிலும் வெற்றி பெறுகின்றன. இந்த வெற்றிகள் தரும் பாதிப்பால் தமிழ் சினிமாவில் புதிதாக அறிமுகம் ஆகும் இளம் இயக்குனர்கள் பலர் த்ரில்லர் படங்களை இயக்குகிறார்கள். இந்த வரிசையில் அறிமுக இயக்குனர் தினேஷ் லக்ஷமணன் தனது முதல் படமான 'தீயவர் குலை நடுங்க' (Theeyavar Kulai Nadunga) படத்தில் த்ரில்லர் விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார்.
அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராம்குமார் சிவாஜி இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். தீயவர் குலை நடுங்க படம் பார்வையாளர்களை 'நடுங்க' வைக்கிறதா என பார்க்கலாம்.
ஈகிள் அப்பார்ட்மென்ட் என்ற குடியிருப்பில் நூற்றியம்பது வீடுகள் இருக்கின்றன. இங்கே காவிரி என்ற பதிமூன்று வயது சிறுமி மாடியில் இருந்து விழுந்து இறந்து போகிறார். இதை விபத்து என காவல் துறை முடிவு செய்கிறது. சில நாட்கள் கழித்து அதே குடியிருப்பில் வசிக்கும் ஒரு எழுத்தாளர் மர்மமான முறையில் இறந்து போகிறார்.
எழுத்தாளர் மரணத்திற்கும், சிறுமி மரணத்திற்கும் ஏதோ தொடர்பிருப்பதாக சந்தேகம் கொள்கிறார் எழுத்தாளர் மரணத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி மகுடபதி (அர்ஜுன்). மகுடபதி எழுத்தாளரின் நண்பரும் ஈகிள் பில்டர் நிறுவனருமான வரதராஜனை (ராம்குமார்) விசாரணை செய்கிறார். விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே வரதராஜனும் முகம் தெரியாத நபரால் கொல்லப்படுகிறார். அப்பார்ட்மெண்டில் உள்ள வாட்ச் மேனும், இஸ்திரி வண்டி காரரும் கொலை செய்யப்படுகிறார்கள். மகுடபதியின் சந்தேக பார்வை அந்த குடியிருப்புக்கு வந்து செல்லும் மீரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) மீது விழுகிறது. இந்த கொலைகளுக்கும் மீராவுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று சொல்கிறது இப்படம்.
ஒரு திரில்லர் படம் என்றால் கொலை செய்வது யார் என்ற உண்மை கிளைமாக்ஸில் தெரிவது தான் சுவாரசியமாக இருக்கும். இப்படத்தில் பாதி கதையிலேயே கொலை செய்வது யார் என்று சொல்லி விடுவதால் சுவாரசியம் குறைந்து விடுகிறது. இதன் பிறகாவது ஏதாவது ட்விஸ்ட் இருக்கும் என்று எதிர் பார்த்தால் இது போல் எதுவும் இல்லை என சத்தியம் செய்கிறது திரைக்கதை.
கொலைக்கான காரணம் என்று சொல்லப்படும் 'ஒரு விஷயம்' சமீப கால படங்களில் சொல்லப்படும் விஷயம் தான். கொலைகள் அடுத்தடுத்து நடக்கும் போது காரணத்தை பார்வையாளர்கள் யூகிக்கும் அளவிற்கு திரைக்கதை இருப்பது மிகப்பெரிய பலவீனம். குறைகள் இருந்தாலும் ஒரு சில பாசிடிவான விஷயங்களும் படத்தில் இருக்கிறது.
மறைந்த சிவாஜி கணேசன் அவர்கள் வில்லனாக நடித்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தை வில்லன் கேரக்டரில் நடித்திருக்கும் இவரது மகன் ராம்குமார் தனது நடிப்பில் கொண்டு வந்து இருக்கிறார். ராம்குமாரின் வாய்ஸ் மாடுலேஷன் மற்றும் சிரிப்பில் சிவாஜி கணேசன் தெரிகிறார். பலவீனமான திரைக்கதையை தனது நடிப்பால் சமன் செய்ய முயன்று இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மார்ஷல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டு தைரியமாக சண்டை போடும் போதும், நியாத்திற்காக போராடும் போதும் ஐஸ்வர்யா ராஜேஷ் சபாஷ் சொல்ல வைக்கிறார்.
'என்றும் மார்க்கண்டேயன்' என்ற பட்டத்தை தமிழ் சினிமாவில் சிவகுமாருக்கு பிறகு அர்ஜுனுக்கு தரலாம் என்று சொல்லும் அளவிற்கு இளமையுடன் இருக்கிறார் அர்ஜுன். தான் இன்னும் ஆக்ஷன் கிங் தான் என்பதை சண்டை காட்சிகள் நிரூபித்து உள்ளார் அர்ஜுன்.
நடிகர்கள் தேர்வு, ஒளிப்பதிவு, பின்னணி இசை போன்ற அம்சங்கள் சரியாக இருந்தும் கதையும், திரைக்கதையும் சரியாக இல்லாததால் 'தீயவர் குலை நடுங்க' படத்தை பார்த்து நடுக்கம் வரவில்லை, அரைத்த மாவை அரைத்த உணர்வு மட்டுமே வருகிறது. தீயவர் குலை நடுங்க - டைட்டிலில் இருக்கும் பவர் கதையில் இல்லை.

