
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு துணிவு திரைப்படம் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரது நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்த ஆண்டு திரைக்கு வரக் காத்திருக்கின்றன. திரைப்படங்களில் நடித்து முடித்த பிறகு, சில நாட்கள் இடைவெளி எடுத்துக் கொண்டு, பிடித்தமான வேலைகளில் ஈடுபடுவது இவரது வழக்கம். பிடித்தமான வேலைகளைச் செய்யும் போது தான் நமக்கான வாழ்வு பூர்த்தியடையும். அவ்வகையில் ஒவ்வொருவரும் நாம் யார் என்பதை உணர வேண்டியது அவசியமாகும். இதனை அறிந்து கொள்ள அஜித் சொல்லியிருக்கும் மிகச்சிறந்த வழி என்ன என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறது இந்தப் பதிவு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித், எந்தவித சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார். ஒரு நிகழ்ச்சிக்காவது அஜித் வரமாட்டாரா என ஏங்கும் ரசிகர்கள் ஒருபுறம்; அஜித்தை தொடர்ந்து அழைக்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள் மறுபுறம். இருப்பினும் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை அஜித் நிராகரித்து வருகிறார். நடிப்பு தவிர்த்து கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர் அஜித். அதற்கேற்ப பலமுறை கார் ரேஸிலும் கலந்து கொண்டுள்ளார்.
அஜித் தனிமையான பயணங்களையும் விரும்பக் கூடியவர். நாம் யாரென்று உணர பயணம் ஒன்றே சிறந்த வழி என என்னிடம் அஜித் கூறியதாக, நடிகர் சமுத்திரக்கனி அண்மையில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “துணிவு படத்தில் அஜித் சாருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது நீங்கள் யாரென்றே தெரியாத ஒரு இடத்திற்கு பயணம் மேற்கொள்ளுங்கள். அப்போது தான் நீங்கள் யார் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும் எனக் கூறினார். அப்படி ஒருமுறை அஜித் பயணம் மேற்கொண்ட போது, அஜித் சாருக்கு பசி எடுத்தது. அப்போது அருகிலிருந்த ஒரு கிராமத்தில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவரிடம், நடிகர் அஜித் சாப்பிட ஏதேனும் கிடைக்குமா என்று கேட்டார்.
அதற்கு அந்த ஆடு மேய்ப்பவர், ஒரு ரொட்டியில் முட்டையை வைத்து அஜித் சாருக்கு சாப்பிடக் கொடுத்தார். அதற்கு அஜித் சார் பணம் கொடுத்தும், ஆடு மேய்ப்பவர் வாங்க மறுத்து விட்டார். மொழி தெரியாத ஊரில், உணர்வுகளால் மட்டுமே நிறைந்த பயணம் அது. நீங்களும் எங்கேனும் பயணம் மேற்கொள்ளுங்கள்; இந்த உலகம் எப்படியானது? நீங்கள் யார்? இந்த உலகத்தில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என அனைத்துமே உங்களுக்குப் புரியும்” என அஜித் சொன்னதை சமுத்திரக்கனி தெரிவித்தார்.
ஒவ்வொருவரது வாழ்விலும் பயணங்கள் இன்றிமையாதவை. வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவும், வாழ்க்கையை வாழ்வதற்கும் பயணங்கள் துணை நிற்கின்றன. ஆகையால் வருடத்திற்கு ஒருமுறையேனும் பயணம் மேற்கொள்ளுங்கள். இந்தப் பயணம் உங்களை உங்களுக்கே அடையாளப்படுத்த உதவும். நடிகர் அஜித்தின் இந்த ரகசியத்தை பின்பற்றினால், நிச்சயம் பயணம் நம் வாழ்வில் சுகமான நினைவுகளைத் தரும் என்பதில் ஐயமில்லை.