ஜிங்குச்சா - 'தக் லைப்' - இது சானியா மல்ஹோத்ராவிற்கான தேடல் நேரம்!
தக் லைப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. அதில் அந்தப் படத்தின் முதல் சிங்கிளான ஜிங்குச்சா வெளியிடப்பட்டது. ஏ ஆர் ரகுமான் இசையில் கமல் ஹாசனின் பாடல் வரிகளில் வெளியான இந்தப் பாடல், உடனடியாக ரசிகர்களைக் கவர்ந்தது என்றால் மிகையாகாது. ஒரு திருமணத்தின்போது பாடப்படும் இந்தப்பாடலின் வரிகள், தனது செல்ல மகளை வெளியாட்களுக்கெல்லாம் கொடுக்காமல் நெருங்கிய நண்பனின் மகனுக்கே கட்டிக் கொடுப்பதைப் பற்றிச் சிலாகித்ததுப் போல எழுதப்பட்டுள்ளது. மணப்பெண்ணாக லப்பர் பந்து நாயகி சஞ்சனா கிரிஷ்ணமுர்த்தி.
விஷயம் அதுவல்ல. அந்தப்பாடல் ஆரம்பிக்கும்போது உள்ளே வந்து பாடல் முழுதும் ஆடி அசத்தியிருக்கும் சானியா மல்ஹோத்ரா தான். இந்தப்படத்தில் இவர் நடித்திருக்கும் விஷயமே இந்தப்பாடல் பார்த்தபிறகு தான் பலருக்கும் தெரிந்திருக்கும். அதுவும் சிம்புவுடன் இவர் போடும் ஆட்டத்தைப் பார்த்தபிறகு அவருக்கு ஜோடி இவரா இல்லை திரிஷாவா என்ற சந்தேகமும் பலருக்கு எழுந்திருக்கும்.
நடிப்பது மட்டுமன்றிப் பாலே நடனத்தை முறைப்படி கற்றவர் சானியா. தனது ஆரம்பக் காலத்தில், தான் வசித்த பகுதியில் யோகா மாஸ்டராகவும் சிலருக்கு நடனம் கற்றுக்கொடுப்பவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். இதுமட்டுமல்ல. அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த சீக்ரெட் சூப்பர்ஸ்டார் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடன இயக்குநராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார். த கிரேட் இந்தியன் கிட்சனின் ஹிந்திப்பதிப்பான மிஸ்சஸ் (Mrs) படம் தான் இவர் சமீபத்தில் நடித்து வெளியான படம்.
நல்ல திறமை, நடனம், அழகு எல்லாம் இருந்தும் இவர் தனக்கான ஓர் இடத்தை பெற பாலிவுட்டில் போராடிக்கொண்டிருக்கிறார். யார் கண்டது. மணிரத்னம், கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் எனப் பல தலைகள் இணைந்திருக்கும் தக் லைப் அவருக்கு ஒரு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுக்கக் கூடும். தமிழும், தெலுங்கு, ஹிந்தியென வெளியாகும் இந்தப்படத்தின் மூலம் அவர் தமிழிலும் ஒரு சுற்று வரக்கூடும்.
மணிரத்னம் படத்தைப் பொறுத்த வரை யார் எந்தப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது முதல் காட்சி பார்க்கும் வரை உறுதியாக யாராலும் சொல்ல முடியாது. அந்த அளவு ரகசியம் காப்பவர் அவர். அதனால் சானியா ஒரு முழுப் பாத்திரத்தில் நடித்திருக்கிறாரா அல்லது இந்தப் பாட்டுக்கு மட்டும் வந்து சொல்கிறாரா என்பதை அறிய நாம் ஜூன் ஐந்தாம் தேதிவரை காத்திருக்க வேண்டும்.
ஜிங்குச்சா பாடல் உடனடியாக ஹிட்டடித்ததற்கு அதை எழுதிய கமல்ஹாசனின் துள்ளலான வரிகள் மட்டும் காரணமல்ல. அந்தப் பாடலைப் பாடிய வைஷாலி சமந்த், சக்திஸ்ரீ கோபாலன், ஆதித்யா ஆர் கே இவர்கள் கூட்டணியும் ஒரு காரணம். க்ருதி மகேஷ் என்பவர் தான் இந்தப் பாடலுக்கான நடனத்தை அமைத்துள்ளார். முதல் பாடலிலேயே சிம்பு, கமல், என இருவரையும் ஆட வைத்துள்ளார்.
பாடல் வரிகள நல்ல துள்ளலுடன் ஒரு கொண்டாட்டப் பாடலாக எழுதியுள்ளார் கமல்.
"எங்க சுந்தரவல்லியை மேலும் சுந்தரமாக்குங்க. சக்கரக்கட்டியசேத்து பொங்கலாக்கிடுங்க. அறம் பொருள் இன்பம் மூணையும் சேர்த்து ஓட்டுங்க பந்தலுக்கு ஈசானி மூல. முழுசா பள்ளம் பறிச்சாச்சு. தூரத்து சொர்க்கத்துல நிச்சயம் செய்யாம பக்கத்து நட்புல புடிச்ச கிரகலட்சுமி" என்று போகும் இந்தப் பாடலில் மேலும்,
"பெருசுங்க சம்மதிச்சு சம்பந்தம் செய்யாட்டி பிரசவம் முடிஞ்சுதான் பல நாளா கனவில் பார்த்த காட்சியை முதலிரவில் தணிக்கையின்றி பார்க்கப் போகிறா"
என்று இளமைத் துள்ளலுடன் எழுதியிருக்கிறார் கமல் ஹாசன்.
வரும் நாட்களில் இந்தப்பாடல் தான் இளசுகளின் பாடல்களின் லிஸ்டில் முதலாவதாக இருக்கப் போகிறது.
யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் வெளியான தக் லைப் படத்தின் இந்தப்பாடல் மூலம் யாருக்குத் தேடல் அதிகமா இருந்ததோ இல்லையோ, வலைத்தளத்தில் சானியா மல்ஹோத்ரா குறித்து நெட்டிசன்கள் ஆர்வமாகத் தேடிவருகின்றனர்.