

"நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே…சங்கை அரிந்துண்டு வாழ்வோம் உம் போல் இரந்துண்டு வாழ்வதில்லை" என சாட்சாத் சிவபெருமானிடமே கம்பீரமாக எதிர்த்து வீரவசனம் பேசி மக்கள் மனதில் நக்கீரராக வாழ்ந்தவர் இயக்குனர் அருட்செல்வர் ஏ பி நாகராஜன்.
அவருடைய மிகச் சிறந்த படைப்புகளில் சில… திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், நவராத்திரி, திருவருட் செல்வர், சரஸ்வதி சபதம். இவை முக்கியமானவை. அவருடைய சொந்தத் தயாரிப்பில் வந்தவை.
திருவிளையாடல் 31.07.1965 ல் ரிலீஸ். அதே ஜூலையில் 9 ஆம் தேதி எம் ஜி ஆரின் ஆயிரத்தில் ஒருவன் ரிலீஸ். இரண்டு படங்களும் வசூலில் சக்கை போடு போட்டன.
சம்பூர்ண ராமாயணம் தமிழில் இவர் வசனம் எழுதிய படம். மூதறிஞர் இராஜாஜி சினிமா பார்த்ததில்லை. இந்தப் படத்தைப் பார்த்து சிலாகித்து பேசினார்.
சிவாஜி தான் இவருக்கு எல்லாமே. 3.11.64 ல் வெளியானது சிவாஜியின் நவராத்திரி. அது சிவாஜிக்கு 100 வது படம். ஏ பி நாகராஜன் இயக்கத்தில் வந்த வெற்றிப் படம் அது.
சவாலான பாத்திரங்களை உருவாக்கி சிவாஜியை செதுக்கினார் ஏ பி என். அதில் ஒவ்வொரு சிவாஜியும் ஒரு ரசம். ஆனந்தம், அற்புதம், கருணை, அருவருப்பு, வீரம், நகை, இப்படியாக ஒவ்வொரு சிவாஜியையும் ஒரு நாள் சாவித்திரி சந்திப்பார்.
நவராத்திரி படம் சிவாஜிக்கு ஒரு மகுடம்… நடிப்புக்கல்லூரி மாணவர்களுக்கு ஒரு என்சைக்ளோபீடியா..விக்கிபீடியா..கூகுள்.
அதே நாளில் எம் ஜி ஆரின் படகோட்டி ரிலீஸ் ஆனது. சிவாஜியின் முரடன் முத்துவும் அதே தீபாவளி 03.11.64 ரிலீஸ் பந்துலு படம். முரடன் முத்து… தோல்வி.
தன் படம் முரடன் முத்து, எம்ஜி ஆர் படகோட்டி இவற்றுடன் மோதியது சிவாஜியின் நவராத்திரி.
இதே போல் சிவாஜி படங்கள் அவர் படங்களுடனேயே மோதிக்கொண்ட நிகழ்வுகள் உண்டு. 29.10.1970 ல் எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம், மோதின. இரண்டும் வெற்றி.
சுமதி என் சுந்தரி, பிராப்தம் 14.04.71 ரிலீஸ் ஒரே நாளில். தனக்கு வில்லன் தானே என சிவாஜி படங்கள் மோதின. பிராப்தம் தோல்வி.
தன் சொந்தப் படங்களில் சில தொடர் தோல்விகளைச் சந்தித்த ஏ பி நாகராஜன் பந்துலு போல் எம் ஜி ஆரை வைத்து ஆயிரத்தில் ஒருவன் போல ஒரு ஹிட் தந்தால் நிதி நிலைமை சரியாகும் என நினைத்தார். எம் ஜி ஆரை அணுகினார். அவரும் ஒரு கதை தயாரிக்கச் சொன்னார்.
சிக்கனமாக தன் சத்யா ஸ்டுடியோவில் படபிடிப்பை வைத்துக் கொண்டார் எம் ஜி ஆர். ஆனால் முடிவெடுத்த கால கட்டம் தான் சரியில்லை. 1977 ல் எம் ஜி ஆர் அரசியல் வாழ்வில் புயல் அடித்தது எனலாம். சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய காலம்.
1972 ல் தனிக் கட்சி ஆரம்பித்து தமிழகமெங்கும் சுற்றுப் பயணம் செய்து 1977 தேர்தலை சந்திக்க பெரும் பிரயத்தனம் செய்தார்.
அந்த நேரத்தில் ஏ பி நாகராஜன் 'நவரத்தினம்' தயாரிக்க முடிவெடுத்தார். கதை ஒன்பது ரத்தினங்களாக நாயகிகளை எம் ஜி ஆர் சந்திப்பார் என எழுதி இருந்தார். முத்து, மாணிக்கம், மரகதம், வைரம், பவளம், நீலம், வைடூரியம், புஷ்பா, கோமதி இப்படியாக நாயகிகள் பெயர் இருக்கும்.
படத்தை முடித்தால் போதும் போதும் என்றாகிவிட்டது. எம் ஜி ஆருக்காக எல்லோரும் காத்திருப்பார்கள். எம் ஜி ஆரால் வர இயலாது. ஷூட்டிங் கான்சல் ஆகி விடும். அவர் அரசியல் மீட்டிங் முடித்து ஷூட்டிங் வர லேட் ஆகி விடும்.
பண விரயம் அதிகமானது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருந்த ஏ பி என் திக்குமுக்காடிப் போனார். ஒரு வழியாக எடுத்து 05.03.1977 ல் ரிலீஸ் செய்தார்.
சோதனை.. படம் சரியாகப் போகவில்லை. கல்கியில் காந்தன் அவர்கள் நெகடிவ் விமர்சனம் எழுதினார்.
இசை என்னவோ எடுபடவில்லை. (குன்னக்குடி வைத்திய நாதன்..ஏ பி என் படங்களின் ஆஸ்தான வித்வான்).
எம் ஜி ஆர் இசைக்கு எப்போதும் நேரம் ஒதுக்கி கவனிப்பார். அந்த 1977ல் அவருக்கு நேரம் இல்லை. ஜுனில் நடைபெற உள்ள சட்டமன்ற எலெக்ஷனில் அவர் பிஸியாகிவிட்டார். ஏ பி என் நெருக்கடியில் சிக்கினார். 05.04.1977 ல் மாரடைப்பால் 49 வயதில் காலமானார் எனச் சொல்கிறார்கள். காரணம் வேறு எனவும் சொல்கிறார்கள்.
அன்று அவர் பூத உடல் தாங்கிய வாகனம் எட்வர்ட் எலியட்ஸ் சாலை வழியே வந்தது.(தற்போது டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை).
முன்னால் எம் ஜி ஆர் நடந்தே வந்தார் கிருஷ்ணாம்பேட்டை இடுகாடு வரை. போலீஸ் இல்லை. ரசிகர் கூட்டம் இல்லை. இதைப் பார்த்த நான் பின்னால் சென்றேன் அங்கு.
சிவகுமார், சுருளிராஜன் எம் ஜி ஆர் இன்னும் பல பிரபலங்கள் இடுகாட்டில் இருந்தார்கள்.
அப்போது சுருளி ராஜன் கண்ணீர் ததும்ப “இப்படி உங்களை கொன்னுட்டாங்களே ஐயா” எனக் கதறினார். சுருளியை சிவகுமார் பேசாதே என சைகை காட்டித் தள்ளி அழைத்துப் போனார்.
பந்துலு (ஆயிரத்தில் ஒருவன்), ஸ்ரீதர் (உரிமைக்குரல்), ஜி என் வேலுமணி (படகோட்டி), என பலரையும் படங்கள் நடித்துக் கொடுத்து நிதி நெருக்கடியில் இருந்து மீட்ட எம் ஜி ஆரால் ஏ பி நாகராஜனை ஏன் மீட்க முடியவில்லை..?
சினிமா வெற்றி என்பது ஒரு புதிர்..
சதுரங்கம்..அது ஒரு சுழல்..மாய வலை.. வெற்றியை எது தீர்மானிக்கிறது என்பது இன்று வரை பிடிபடாத ஒரு சூட்சுமம்.
வெற்றிக்கான ரகசியம் எது என்ன என்பது இது நாள் வரை புரியவில்லை. சில சின்ன பட்ஜெட் படங்கள் பிய்த்துக் கொண்டு ஓடுவதும் (கரகாட்டக்காரன், ஒருதலை ராகம்) சில பெரிய பட்ஜெட் படங்கள் டப்பாவுக்குள் போவதும். அந்த பகவானுக்கே வெளிச்சம்.
பி.கு (10.06.1977 ல் நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் 130 இடங்கள் வென்று முதல்வரானார் எம் ஜி ஆர்.)
சினிமாவில் பிரம்மாண்ட வெற்றிகளைக் குவித்த ஒரு இயக்குனருக்கு இறுதியில் ஏற்பட்ட நிதி நெருக்கடியும், சினிமா வெற்றியின் கணிக்க முடியாத தன்மையும் வாசகர்களின் மனதில் ஆழமான சிந்தனையை விதைக்கும்.