உலகின் பழமையான மற்றும் மிகவும் பரவலாக நடைமுறையில் உள்ள சமயங்களில் ஒன்றாக இருப்பது புத்த சமயம். புத்த சமயத்தை நிறுவிய கௌதம புத்தர், நேபாளத்தின் லும்பினி எனுமிடத்தில் பிறந்திருந்தாலும், அவர் தனது வாழ்நாளின் பல ஆண்டுகள் இந்தியாவில்தான் இருந்திருக்கிறார். எனவே, இந்தியாவில் புத்தருடனும், புத்த சமயத்துடனும் தொடர்புடையதாகப் பல இடங்கள் இருக்கின்றன.
இவற்றுள் புத்தகயா, ராஜகிரகம், சாரநாத், குசிநகர், சிராவஸ்தி, சங்காசியா, நாலந்தா போன்றவை உலகம் முழுவதும் அறியப்பட்ட புனிதத்தலங்களாக இருக்கின்றன. புத்த சமயத்தினரிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், புத்தரின் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்த இத்தலங்களுக்கு உலகம் முழுவதிலுமிருந்து பயணிகள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர்.
பீகார் மாநிலத்திலுள்ள கயா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் புத்த கயா (Bodh Gaya). இதனை புத்தகயை என்றும் போத்கயா என்றும் உச்சரிக்கின்றனர். சித்தார்த்த கௌதமர் தனது இளவரச வாழ்க்கையைத் துறந்து, இங்குள்ள அரசமரத்தடியில் (போதி மரம்) தியானத்தில் அமர்ந்தார். 49 நாட்கள் தியானத்திற்குப் பின்பு புத்தர் ஞானம் பெற்றார். புத்தர் தியானம் செய்த இடத்தில் போதி மரத்தின் அடியில் ஒரு சிவப்பு கல் பலகை உள்ளது. உலகம் முழுவதுமுள்ள புத்த சமயத்தினர்களுக்கு புத்தகயா புனிதத் தலமாக இருக்கிறது. முற்காலத்தில் போதிமண்டா எனப்பட்ட இவ்விடத்தில் பிக்குகள் தங்கும் பெரிய விகாரம் ஒன்று இருந்தது.
புத்தகயாவில் உள்ள முதன்மையான துறவிமடம் போதிமண்டா விகாரையாகும். இது இப்போது மகாபோதி கோயில் என அழைக்கப்படுகிறது. கௌதம புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய முக்கியமான புனிதத் தலங்களில் புத்த கயாவே முதன்மையானது என்கின்றனர். 2002 ஆம் ஆண்டில் மகாபோதி கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலக மரபுவழிக் களமாக அறிவிக்கப்பட்டது.
பிகார் மாநிலத்தில், நாலந்தா மாவட்டத்தில் அமைந்த பண்டைய கால நகரம் ராஜகிரகம் (Rajgir), மௌரியர் காலத்திய மகத நாட்டின் தலைநகராக இருந்தது. புத்தர் இந்நகரத்தின் சிறு மலைக்குச் சென்று அடிக்கடி தியானம் செய்வார் என்றும், புத்தருக்குப் பிடித்தமான இடங்களில் ஒன்றாக இந்நகரம் இருந்ததாகவும் கருதப்படுகிறது. தன்னைச் சினம் கொண்டு கொல்ல வந்த நளகிரி எனும் யானையை கௌதம புத்தர் அமைதிப் படுத்திய இடம் என்றும் சொல்லப்படுகிறது.
புத்தர் இங்கு தனது இரண்டு முக்கியமான பரப்புரைகளை வழங்கினார். முதல் புத்தர் சபை இங்குள்ள சப்த்பர்ணி குகையில்தான் நடைபெற்றது, மேலும், புத்த சமயத்தின் இரண்டு மிக முக்கியமான சூத்திரங்களான பிரஜ்னபரமிதா மற்றும் தாமரை சூத்திரம் போன்றவை இங்கிருக்கும் கிரிதகுடா மலையில் கொடுக்கப்பட்டது என்கின்றனர். நான்கு தங்க புத்தர் சிலைகள் கொண்ட வெள்ளை சாந்தி ஸ்தூபி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். எனவே, இந்நகரம் புத்த சமயத்தினருக்கு ஒரு புனித நகரமாகும்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசிக்கு 10 கிமீ வட கிழக்கே அமைந்துள்ள ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க நகரமாக சாரநாத் (Sarnath) இருக்கிறது. கௌதம புத்தர், ஞானம் பெற்ற ஐந்து வாரங்களுக்குப் பிறகு தனது முதல் போதனையான தர்மம் என்பதை இவ்வூரில் அமைந்துள்ள மான் பூங்காவில்தான் போதித்தார். இந்த நகரத்தில் பல பழமையான புத்த சமயத் தலங்களும், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் உள்ளன. இந்நகரில் கௌதம புத்தர் ஸ்தூபிகளில் தாமேக் ஸ்தூபி, சௌகந்தி ஸ்தூபி மற்றும் அசோக தூண் ஆகியவை இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இங்கு புத்த பூர்ணிமா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சாரநாத்தில் புத்த ஸ்தூபிகள் தவிர, கோவில்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பல தொல்லியல் களங்களும் உள்ளன.
உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் கோரக்பூரிலிருந்து கிழக்கே 53 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குசிநகர், கௌதம புத்தர், எண்பதாவது வயதில் படுத்த கோலத்தில் பரி நிர்வாணம் (முக்தி) அடைந்த நகரமாகும். அப்பரிநிர்வாணக் காட்சி இந்நகரில் சிற்பமாகச் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நகரம் உலகம் முழுவதுமுள்ள புத்த சமயத்தினர்களின் புனிதத் தலமாகும். புத்தர் இறந்த பிறகு, பேரரசர் அசோகர் தனது மஹாபரிநிர்வாணத்தின் சரியான இடத்தைக் குறிக்க இங்கு ஒரு ஸ்தூபியைக் கட்டினார். மஹாபரிநிர்வாண கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த ஸ்தூபியில் 6 அடி நீளமுள்ள புத்தர் வலது பக்கத்தில் சாய்ந்திருக்கும் சிலை உள்ளது. இந்தப் புத்தர் கோவில் குசி நகரை நாட்டின் முதன்மையான புனிதத் தலமாக மாற்றியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்னோவிலிருந்து வடகிழக்கில் 170 கிலோ மீட்டர் தொலைவில், இந்திய - நேபாள நாடுகளின் எல்லைக்கு அருகில், மேற்கு ரப்தி ஆற்றின் அருகே அமைந்துள்ள சிராவஸ்தி (Shravasti) எனும் நகரம் அமைந்திருக்கிறது. கௌதம புத்தருடன் நெருங்கிய தொடர்புடையது. கௌதம புத்தர் சிராவஸ்தி நகரத்தின் ஜேடவனத்தில் இருபத்து நான்கு முறை சாதுர்மாஸ்ய விரதங்களை மேற்கொண்டார். இந்நகரத்திற்கு அருகில் சகேத்-மகேத் (Sahet-Mahet) கிராமத்தில் கௌதம புத்தர் தொடர்புடைய தொன்மை வாய்ந்த பல பௌத்த விகாரைகள் இருக்கின்றன. சிராவஸ்தி நகரில் தங்கியிருந்த காலத்தில் புத்தர் நான்கு பௌத்த தரும நிக்காயங்களை அருளிச் செய்தார்.
உத்தரப் பிரதேசத்தின், பருகாபாத் மாவட்டத்தில், சிராவஸ்தி அருகே அமைந்த பண்டைய நகரம் சங்காசியா (Sankassa). கௌதம புத்தர் சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி அபிதம்மத்தை தனது தாய் மாயாதேவிக்கு அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடமே சங்காசியா என பௌத்த சாத்திரங்கள் கூறுகின்றன. அசோகர் இவ்விடத்தில் புத்தரின் நினைவாக, யானை தூபியையும், கௌதம புத்தரின் தாய் மாயாதேவிக்கு ஒரு விகாரையையும் நிறுவினார். 1842 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் கன்னிங்காம் சங்காசியா பௌத்த விகாரத்தை அகழ்வாராய்ச்சி செய்து கண்டெடுத்தார். புத்த சமயத்தவர்களுக்கு இவ்விடம் புனிதத் தலமாக விளங்குகிறது.
பீகாரில் அமைந்துள்ள நாலந்தா, ஒரு காலத்தில் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட கல்வி மையமாக இருந்தது. இது உலகின் முதல் குடியிருப்புப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும், பண்டைய உலகின் மிகப் பெரிய கற்றல் மையமாகவும் இருந்தது. இப்பல்கலைக்கழகத்தினைப் புகழ்பெற்ற பௌத்த மடாலயப் பல்கலைக்கழகம் அல்லது மகாவிஹாரா என்றும் வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.
இந்நகரம் பல வளாகங்கள், தங்குமிடங்கள், கோவில்கள், தியான மண்டபங்கள், நூலகம் மற்றும் பிற கல்வி உள்கட்டமைப்புகளுடன் யுனெஸ்கோவின் உலக மரபு வழித் தளமாகவும் இருக்கிறது. நாலந்தா இடிபாடுகள், நாலந்தா தொல்பொருள் தளம் மற்றும் நாலந்தா பன்னாட்டுப் பல்கலைக்கழகம் போன்றவை இங்குள்ளன.