உலக்கையை பயன்படுத்தி 40 வீரர்களை கொன்ற கோட்டை காவலாளியின் மனைவி!

900 ஆண்டுகள் பழமையான 58 நுழைவு வாயில்களை கொண்ட சித்திரதுர்கா கோட்டை!
Chitradurga Fort
Chitradurga Fort Img Credit: Wikipedia
Published on

நம்மில் பலருக்கும் பழமையான சுற்றுலா தலங்களை பார்வையிடுவதில் மிகுந்த ஆர்வம் இருக்கும். அப்படி வரலாற்றுப் பிரியர்களுக்கான ஒரு இடம் தான் கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்திரதுர்கா கோட்டை. சுமார் 900 ஆண்டுகள் பழமையான 58க்கு மேற்பட்ட நுழைவாயில்களை கொண்ட இக்கோட்டை கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் சித்திர துர்கா என்ற ஊரில் அமைந்துள்ளது.

இக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள 58 வாயில்களில் 4 நுழைவு வாயில்கள் மட்டுமே கோட்டைக்குச் செல்லும் உண்மையான வழிகள் ஆகும். மற்ற அனைத்தும் எதிரிகளை திசை திருப்புவதற்காக அமைக்கப்பட்ட போலியான நுழைவு வாயில்கள். கோட்டையின் ஒவ்வொரு மதில் சுவரிலும் பாம்பு, ஆமை, மீன், லிங்கம் போன்ற பல்வேறு புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இவை ஒவ்வொன்றும் கோட்டைக்குச் செல்வதற்கான வழிகளை குறிக்கும் குறியீடுகள் ஆகும். மேலும் கோட்டையின் நுழைவு வாயிலில் கற்களால் அமைக்கப்பட்ட பிரமாண்டமான மதில் சுவர்கள் உள்ளன. இந்த மதில் சுவரில் உள்ள ஒரு கல்லின் அளவு கிட்டத்தட்ட 4 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு மதில் சுவரின் உயரமும் கிட்டத்தட்ட 40 அடி இருக்கும்.

இதையும் படியுங்கள்:
இந்திய வரலாற்றின் சக்தி வாய்ந்த டாப் 10 அரசர்கள்!
Chitradurga Fort

ஒரே கல்லினால் செய்யப்பட்ட கதவுகளை பொருத்தும் பெரிய துளைகள் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டை சுவருக்கு வெளியே மந்திரிகள், படைவீரர்கள் என தனித்தனியாக பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் ஆங்காங்கே குளமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே துப்பாக்கிகளில் பயன்படுத்தும் வெடி மருந்து கலவை தயாரிப்பதற்கென தனியாக மருந்து தயாரிக்கும் கூடம் ஒன்றும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

பெரிய கற்களில் துளைகள் இடப்பட்டு அதில் சங்கிலிகள் கோர்த்து வெடி மருந்துகளை அரைக்கும் அளவிற்கு மிகவும் தத்ரூபமாக இந்த வெடிமருந்து அரைக்கும் இடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிய கற்கள் இடையே அரைக்கப்படும் வெடி மருந்து கீழே சேகரிக்கப்படும் வகையில் நீண்ட அளவிலான தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

வீரர்கள் கண்காணிப்பதற்காகவும், இளைப்பாறுவதற்காகவும் பாறைகளுக்கு கீழே ஆங்காங்கே குகைகள் போன்று அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கோட்டையில் விழும் மழை நீர் வெளியேறுவதற்காக ஆங்காங்கே மழை நீர் வடிகால் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சாளுக்கியர்கள், ராட்டிரக்கூடர்கள், நாயக்கர்கள் என பல்வேறு மன்னர்கள் ஆட்சி புரிந்த இந்த கோட்டையில் கிட்டத்தட்ட 19 கோயில்கள் வரை இருந்ததாகவும் அவை யாவும் படையெடுப்பின் மூலம் அழிக்கப்பட்டு, தற்போது 4 கோவில்கள் மட்டுமே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றும் 5 மர்மக் குகைகள்!
Chitradurga Fort

அம்மனுக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள ஏகநாதேஸ்வரி அம்மன் கோவிலும், அதற்கு கீழே அபிஷேக நீர் எடுக்கும் புனித குளமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கோபுரம் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள இடும்பேஸ்வரர் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இடும்பேஸ்வரர் திருக்கோவில் முழுக்க முழுக்க பாறைகளை குடைந்து செதுக்கப்பட்டுள்ளது. கருவறையில் உள்ள சிவலிங்கம் பாறைக்கு அடியில் அமர்ந்திருக்கும் வகையில் பிரமாண்டமாக அமைந்துள்ளது.

இங்கு உள்ள கோவில்கள் அனைத்தும் பெரிய பாறையை மடக்கி செய்தாற்போல மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளன. இதற்கு அருகிலேயே சித்தேஸ்வரர் திருக்கோவில், அரண்மனை, சுற்று மண்டபம் ஆகியவை அமைந்துள்ளது. கோட்டையின் சுற்று மண்டபம் முழுவதும் கற்களால் கட்டப்பட்டு, கோட்டை முழுக்க முழுக்க களிமண்ணால் கட்டப்பட்டுள்ளது. கோட்டையின் பின்புறமும் பாறைகளால் சூழ்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகின் அதிசய இடங்கள் - செரிண்டிபிடி கண்டுபிடிப்பு : லஸ்காக்ஸ் குகை!
Chitradurga Fort

ஒரு முறை பாறை இடுக்கு வழியே எதிரி நாட்டு வீரர்கள் நுழைய முயன்ற போது, அங்கு காவலுக்கு நின்றிருந்த காவலாளியின் மனைவி தன்னுடைய கையில் இருந்த உலக்கையை பயன்படுத்தி 40 வீரர்களை கொன்றதாக சொல்லப்படுகிறது. ஒருவர் பின் ஒருவராக உள்ளே நுழையும் போது 40 எதிரிகளையும் உலக்கையால் அடித்து அருகில் உள்ள பள்ளத்தில் தூக்கி போட்டு மறைத்ததாகவும் சொல்லப்படுகிறது. வீரத்துக்கும் தைரியத்துக்கும் அடையாளமான அப்பெண்மணியின் வீரச்செயலை போற்றும் வகையில் இன்றும் அந்த இடம் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் அதிகமாக பார்வை இடப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com