செரிண்டிபிடி (Serendipity) என்றால் தற்செயல் கண்டுபிடிப்பு என்று பொருள். இப்படி ஏராளமான கண்டுபிடிப்புகளை வரலாறு சுட்டிக் காட்டுகிறது. விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு ஒரு புறம் இருக்க, சிறுவர்களும் கூட செரிண்டிபிடி கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
எடுத்துக்காட்டுக்கு ஒன்று - Lascaux Cave - லஸ்காக்ஸ் கேவ் என்னும் லஸ்காக்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள கற்கால குகைகளின் தொகுதி பற்றிய ஒரு கண்டுபிடிப்பாகும். அது பற்றிய சுவையான விவரத்தை இங்கு பார்ப்போம்.
பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மாண்டிக்னாக் என்ற நகரில், பக்கத்தில் இருந்த காட்டுப் பகுதியில் விளையாடுவதற்காக நான்கு சிறுவர்கள் சென்றனர்.
தேதி: 12, செப்டம்பர் 1940. கூடச் சென்ற அவர்களின் நாய் ஒரு பள்ளத்தில் விழ அங்கு சென்ற அவர்கள் ஒரு சிறிய துவாரத்தை கண்டனர். ஆவல் மீதுற, அந்த துவாரத்தைப் பெரிதாக்கினர். மார்சல் ரவிதத் என்ற பையன் முன்னே செல்ல மற்ற மூவரும் அவனைத்தொடர்ந்து பெரிய துவாரம் வழியே உள்ளே இறங்கினர். ஒரு சிறிய விளக்கை ஏற்றி அந்த குகையின் உள்ளே மறு நாளும் சென்ற அவர்கள், குகையில் வரையப்பட்டிருந்த வண்ண ஓவியங்களைப் பார்த்து மலைத்தனர். தாங்கள் கண்டுபிடித்ததை தங்கள் பள்ளியின் முன்னாள் ஆசிரியரிடம் சொல்லவே, அசந்து போன அவர் கற்கால ஓவியத்தைப் பற்றி ஆய்வு நடத்திவரும் பிரபலமான நிபுணரான அப்பே ஹென்றி ப்ரெயிலுக்கு (Henry Breuil) டெலிபோனில் குகை ஓவியங்களைப் பற்றிச் சொல்லி உடனே வருமாறு கூறினார்.
நீண்ட குகையில் சுமார் 600 சித்திரங்கள் இருந்தன. பெரும்பாலானவை மிருகங்களின் சித்திரங்கள் தாம். கிறிஸ்துவுக்கு முன் 17000 வருடங்கள் முதல் 15000 வருடங்கள் வரை உள்ள காலத்தில் இவை தீட்டப்பட்டவை என்பது ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டது. அழகிய அலங்காரங்களுடன் செதுக்கப்பட்ட இன்னும் பல குகைகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன. இன்னும் 1400 சித்திரங்கள் வேறு அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.
செய்தி காட்டுத்தீ போலப் பரவவே கூட்டம் கூட்டமாக மக்கள் திரள் அங்கு குவிந்தது. அனைவரையும் ஒழுங்குபடுத்தி சிறு சிறு குழுவாக குகைக்குள்ளே அனுப்பி வைத்தனர் அரசாங்க அதிகாரிகள். உலகப் போர் முடிந்த பிறகு அந்தப் பகுதியின் நில உரிமையாளரும் அரசாங்கமும் சேர்ந்து, உள்ளே பாதுகாப்பாகச் சென்று வர வழியை உண்டாக்கினர்.
ஆயிரக்கணக்கில் இதைப் பார்க்க பல்வேறு இடங்களிலிருந்தும் பயணிகள் வந்து குவிந்தனர். கூட்டத்தின் காரணமாக குகை ஓவியங்கள் அழிந்து போகாமல் இருக்க அதே போலவே சித்திரங்களின் நகலை எடுத்து அந்த குகைக்குப் பக்கத்திலேயே ஒரு காட்சிக் கூடத்தை ஏற்படுத்தினர். அதில் தான் இப்போதும் மக்கள் சென்று கற்கால குகை ஓவியங்களைப் பார்த்து வியக்கின்றனர். பாரம்பரியப் பண்பாட்டு இடங்களில் ஒன்றாக இதை 1976ல் யுனெஸ்கோ அறிவித்தது.
செரிண்டிபிடிக்கு சரியான உதாரணம் லஸ்காக்ஸ் குகை!