
ஜல்லிக்கட்டு தோற்றம்:
5000 வருடத்திற்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தில் கூட ஏறு தழுவுதல் போட்டி நடந்ததற்கான சான்று உள்ளது. சிந்து சமவெளி படிமத்தில் ஒரு எருது பல காளையர்களை அந்தரத்தில் பறக்க விடும் காட்சி படிமத்தினை நாம் பார்த்திருக்கலாம்.
ஜல்லிக்கட்டு என்ற பெயர் பிற்காலத்தில் தோன்றியது. சங்க காலத்தில் ஏறு தழுவுதல் என்ற பெயரில் தான் காளைகளை தழுவும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தன்னை தழுவ வரும் ஆண்களை கொம்பால் முட்டி தூக்கி அந்தரத்தில் பறக்க விடும் முரட்டுக்காளையை அடக்குவதை கொல்லேறு தழுவுதல் என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஆநிரை மேய்த்தலை தொழிலாக கொண்டவர்கள் முல்லைத் திணையை சேர்ந்த ஆயர் மக்கள். முல்லைத் திணையில் ஆநிரைகளுக்கு பசுமையான மேய்ச்சல் இடங்கள் இருந்ததால், ஆயர்கள் இந்த பகுதிகளில் தங்கள் வசிப்பிடங்களை அமைத்தனர். மந்தையை விட்டு செல்லும் மாடுகளை பிடிக்கவும், பருவ காலத்தில் அடங்காமல் திமிரும் காளைகளை கட்டுப்படுத்தவும் ஆண்களுக்கு பயிற்சி தரப்பட்டது. அக்காலத்தில் காட்டு மாடுகளையும் பிடித்து வீட்டு மாடுகளாகவும் பழக்கி வைக்க வீரமிக்கவர்கள் தேவைப்பட்டார்கள்.
முல்லை நில மக்கள் ஊர் எல்லைகளில் இருந்ததால், அவர்கள் முதலில் எதிரிகள் மற்றும் வன விலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாகினர். இதனால் ஆயர்மகள்கள் தன்னை மணம் புரிபவன் வீரம் செரிந்தவனாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். சங்ககாலத்து ஆயர்குலப் பெண்கள் ஒவ்வொருவரும் சிறு வயதிலிருந்தே காளையை பரிவுடன் வளர்த்து, அதற்கு தாமே உணவு ஊட்டி, அலங்காரம் செய்து, அதற்கு பெயர் வைத்து, உடன்பிறப்பு போல தங்கள் செல்லும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு சுற்றித் திரிந்தனர்.
ஆயர்குலப் பெண்கள் தம்மை பின் தொடரும் ஆணை, தம்மை மணக்க விருப்பம் இருந்தால் தன் காளையை தழுவுமாறு உசுப்பேற்றி விடுவார்கள்.
தனது காளையை தழுவி அடக்குபவனையே ஆயர்மகள் மணக்க தயாராக இருந்தாள். காளை தழுவாத ஆணை அடுத்த பிறவியில் கூட ஆயர்மகள் நோக்கமாட்டாள் என்று இலக்கியம் கூறுகிறது.
தொழுவில் பாயும் காளையை அடக்கும் ஆண்மகன் அதன் இரு கொம்புகளையும் பிடித்து, அதன் நடுவில் அவன் முகம் பார்த்து, காளையின் திமிலை அவன் தழுவும் போது, தன்னை தழுவியது போல நாணி அவனிடம் மனதை பறி கொடுக்கிறாள் ஆயர்மகள்.
அந்த காலத்தின் எளிய மக்களின் சுயம்வரமாக ஏறு தழுவுதல் போட்டி தொழுவில் நடைபெற்றது. கடவுள் ஶ்ரீ கிருஷ்ணர் கூட ஏறுதழுவியே நப்பின்னையை மணம் செய்துள்ளார்.
ஜல்லிக்கட்டு பெயர் காரணம்:
ஏறு தழுவுதல் விளையாட்டு பிற்காலத்தில் காட்சிப் போட்டியாக மாறியுள்ளது. போர்குடி மக்கள் பெண்களை மணக்கவும், சில நேரங்களில் பரிசுப் பொருட்களை பெறவும் ஏறு தழுவுதல் போட்டி நடைபெற்றது. 15 ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டை நாட்டை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் தங்கள் நாட்டு காசாக அம்மன் சல்லிக் காசை பயன்படுத்தினர். பிரகாதாம்பள் அம்மன் உருவம் பொறித்த இந்த சல்லிக் காசுகள் கொண்ட முடிப்பை காளையின் கொம்பின் கட்டி விடுவார்கள். காளையை அடக்கி கொம்பில் உள்ள சல்லிக்காசு கட்டை எடுப்பதால் அதற்கு சல்லிக்கட்டு என்ற பெயர் வந்தது. பின்னர் அது மருவி ஜல்லிக்கட்டு என்றானது.
ஜல்லிக்கட்டு வீரனுக்கு கோயில்:
மதுரைக்கு அருகே உள்ள சொரிக்காம்பட்டியில் ஜல்லிக்கட்டு வீரன் கோயில் உள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன் சொரிக்காம்பட்டியில் வாழ்ந்த கருத்தமாயத் தேவரின் மகனான அழகுத் தேவர் சுற்று வட்டாரங்களில் பெரும் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு வீரனாக இருந்தார். இவரின் புகழினால் பொறாமை கொண்டு எதிரிகள் சூழ்ச்சியின் மூலம் அவருக்கு போட்டியில் காயம் ஏற்படும்படி செய்துவிட்டனர். பின்னர் தவறான மருத்துவரை அனுப்பி, தவறான வைத்திய முறையில் கொன்று விட்டனர். தன் இறப்பை முன்பே உணர்ந்த அழகுத் தேவர் தனக்கு சிலை வைக்க சொல்லி, தன் தந்தையிடம் கேட்டுள்ளார். அதன்படி இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு செல்லும் பலரும் இந்தக் கோயிலுக்கு வந்து அழகுத்தேவரை வழிபட்டு செல்கின்றனர். இங்கு வழிபட்டால் ஜல்லிக்கட்டில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகின்றனர்.
ஜல்லிக்கட்டு தடையும் நீக்கமும்:
சில வெளிநாட்டு அமைப்புகள் காளைகள் துன்புறுத்தப் படுவதாகக் கூறி வழக்கு தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டை இந்தியாவில் தடை செய்தனர். 2017 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி தன்னெழுச்சியாக ஆண்களும் பெண்களும் மெரினா கடற்கரையில் கூடி அறப்பொராட்டம் தொடங்கினர். எந்த ஒரு தலைவரும் இல்லாமல் தன்னெழுச்சியாக மக்கள் கூடிய இந்தியாவின் முதல் போராட்டம் இது தான்.
பல நாள் தொடர்ந்த போராட்டம் தமிழகம் முழுக்க பரவியது. பின்னர் ஜன.23 ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடை நீக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் தென் மாவட்டங்களில் ஜல்லிக் கட்டு போட்டி நடத்தப்பட்டது. ஜல்லிக் கட்டு போட்டி நடந்தால் தான் மண் குளிர மழை பொழியும், விவசாயம் செழிக்கும் என்பது தென் மாவட்ட மக்களின் நம்பிக்கை. இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் தவம் போல இதை மேற்கொள்கின்றனர்.
புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுகள்:
ஜல்லிக்கட்டு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அலங்காநல்லூர் தான்.அடுத்ததாக அவனியாபுரம் , பாலமேடு , பேரையூர் , நார்த்தாமலை மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக பல ஊர்களில் நடைபெறுகிறது. வட தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது இல்லை .
காளை வளர்க்கும் பிரபலங்கள்:
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் பல வருடங்களாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து போட்டிக்கு அனுப்புகிறார். பாகுபலி, பேட்டைக் காளி, புலி போன்ற பெயர்களில் பத்துக்கும் மேற்பட்ட காளைகளை மிகவும் வசதியான முறையில் வளர்த்து வருகிறார். இவரது காளைகள் ஏசி கேரவனில் தான் போட்டி நடைபெறும் இடத்திற்கு வருகின்றன. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெள்ளைக் கொம்பன், கருப்புக் கொம்பன், சின்னக் கொம்பன் என்ற பெயர்களில் காளைகளை வளர்த்து போட்டிக்கு அனுப்புகிறார்.
இந்த ஆண்டின் (2025) முதல் ஜல்லிக்கட்டு:
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கியது. புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஜனவரி 14-ஆம் தேதியும், பாலமேடு ஜல்லிக்கட்டு 15 ஆம் தேதியும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 16 ஆம் தேதியும் நடைபெறும். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 12,632 காளைகளின் உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர், போட்டியில் பங்கேற்க 5,347 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தனியாகவும், பிடிபடாத காளை வளர்ப்பவர் களுக்கு தனியாகவும் கார்கள், பைக்குகள், சைக்கிள்கள், பீரோ, பாத்திரங்கள், புடவைகள், தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள், ரொக்க பணம் ஆகியவை பரிசாக வழங்கப்படுகிறது.