கிரீஸ் தேசத்தின் வடக்கே தெஸாலி (THESSALY) சமவெளியில் பிரம்மாண்டமான 24 பாறைகள் தரையிலிருந்து செங்குத்தாக எழுந்து நிற்கும் காட்சி உலகினரை அதிசயிக்க வைக்கும் காட்சியாகும்.
மழையாலும் காற்றாலும் காலம் காலமாகத் தொடர்ந்து அழகுறச் செதுக்கப்பட்ட இவற்றை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
உயர்ந்து நிற்கும் இந்தப் பாறைகள் மெடியோரா பாறைகள் என்று அழைக்கப்படுகின்றன!
மெடியோரா என்ற இந்தப் பகுதியில் துறவிகள் தங்கள் வழிபாடுகளையும் பிரார்த்தனைகளையும் இடைவிடாது செய்து வந்தனர். பாறைகளைக் குடைந்தும் செதுக்கியும் தங்கள் மடாலயங்களை அவர்கள் இந்தப் பகுதியில் அமைத்துக் கொண்டனர்.
1800 அடி உயரத்தில் பாறைகளில் உள்ள இந்த மடாலயங்கள் வரலாற்றுச் சிறப்பைக் கொண்டவை. முக்கிய திருவிழா நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அனைத்து துறவிகளும் பக்தர்களும் ஒருங்கிணைந்து பிரார்த்தனை செய்வது இங்கு வழக்கமானது!
இது ஏதன்ஸ் நகரத்தின் வடமேற்கே 234 மைல் தூரத்தில் உள்ளது.
மலைப்பாறை உயரத்தில் உள்ள மடாலயத்திற்குச் செல்ல நம்ப முடியாத அளவிலான பெரிய ஏணி ஒன்று இருந்தது. தங்களுக்கு அயலாரால் ஆபத்து வரும் என்று பயந்த காலத்தில் இந்த ஏணி அப்புறப்படுத்தப்பட்டு விடும்! பெரிய மெடிரான் என்று கிரேக்க மொழியில் அழைக்கப்பட்ட இதற்கு ‘வானத்தில் உயரத்தில் உள்ளது’ என்று அர்த்தமாகும்.
மணல்பாறைகளாலும் கருங்கற்களாலும் சேர்ந்து உருவான கடினமான இந்தப் பாறைகள் ஆறு கோடி வருடங்களுக்கு முன்னர் உருவாகி இருக்க வேண்டும் என்பது புவியியல் வல்லுநர்களின் கணிப்பு.
கிரேக்க வரலாற்று ஆசிரியரான ஹெரரெடோடஸ் கடல், நிலத்தில் புகுந்து அமைக்கப்பட்ட பகுதி தெஸ்ஸாலி என்று அங்கிருந்த பூர்வ குடியினர் நம்பியதாக தனது ஐந்தாம் நூற்றாண்டில் எழுதிய குறிப்புகளில் குறிப்பிடுகிறார்!
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ராபர்ட் கர்ஸான் என்ற ஐரோப்பிய பயணி இங்கு வந்து மடாலயங்களையும் வனப்பகுதியையும் பாறைகளையும் பார்த்து அசந்து போனார்.
'பிரளயத்திலும், பூகம்பத்திலும் தப்பிப் பிழைத்து ஓரமாக வந்து ஒதுங்கிய பாறைகளோ இவை' என்று அவர் வியந்தார்.
1896ம் ஆண்டு இங்கு வந்த ஒரு ரஷ்ய யாத்ரீகர் உச்சியை அடைய கயிறில் ஏற முயன்றார். அங்கும் இங்கும் கயிறு ஆட ஒரு வழியாக உச்சியை அடைந்த கதையை மிக மோசமான அனுபவம் என்று வர்ணிக்கிறார்! “பயந்து நடுநடுங்கிப் போன நான் எனது கண்களை மூடிக் கொண்டேன்” என்று அவர் விவரித்தார்.
1517ல் தியோபனஸ் மற்றும் நெக்டோரியோஸ் என்ற இரு சகோதரர்களால் கட்டப்பட்ட வர்லாம் மடாலயம் மிகவும் பிரசித்தி பெற்ற மடாலயம் ஆகும். பாறையைக் குடைந்து 195 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏறி மடாலயத்தை அடையலாம். நன்கு பராமரிக்கப்பட்டு வரும் இதில் ஆனந்தமாக வழிபாடு நடத்த இன்றும் ஏராளமானோர் வருகின்றனர்.
13 முதல் 16ம் நூற்றாண்டு முடிய 24 மடாலயங்கள் இங்கு அமைக்கப்பட்டன. இவற்றில் ஐந்து மட்டுமே இன்றும் நன்கு இயங்குகின்றன!
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த அதிசய இடம் பற்றிக் கேள்விப்பட்ட உல்லாசப் பயணிகள் பெரும் எண்ணிக்கையில் வந்து குவிய ஆரம்பித்தனர்.
தனிமையை விரும்பி இங்கு வந்த துறவிகள் இதனால் நொந்து போய் இங்கிருந்து செல்ல ஆரம்பித்தனர்.
அதி உயரத்தில் வித்தியாசமான இடத்தில் வழிபாடு நடத்தப்படும் மெடியோரா உலகின் அதிசயமான இடம் தான்!