

ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களைக் கடந்து வண்ணத்துப்பூச்சிகள் மேற்கொள்ளும் வியக்கத்தக்க வலசைப் பயணம்! 'பட்டாம்பூச்சிகளின் தேன் நிலவு' என்று அழைக்கப்படும் இந்த மர்மமான மற்றும் கண்கவர் வலசைப் பயணத்தின் ரகசியங்கள் என்ன? வாருங்கள், இந்தப் பயணத்தின் சுவாரஸ்யமான பக்கங்களை நோக்கி ஆழ்ந்து பயணிப்போம்!
தென்னிந்தியாவில் கிழக்கு-மேற்கு திசையில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான பட்டாம்பூச்சிகள் ஒன்று கூடுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகளை அடைந்த பிறகு, பட்டாம்பூச்சிகள் முதலில் தீவிரமாக உணவு உட்கொள்கின்றன. பின்னர், மனித ஆதிக்கம் நிறைந்த பகுதிகளைத் தவிர்த்து, பசுமை மாறா மற்றும் ஆற்றங்கரை காடுகள் போன்ற நிழலான காடுகளில் அவை பெரிய கூட்டங்களாக ஒன்று கூடுகின்றன. இப்படி இடம் பெயரும் (வலசை போகும்) நிகழ்வை 'பட்டாம்பூச்சிகளின் தேன் நிலவு' என்கிறார்கள்.
பருவமழையின் தீவிரத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, உணவு, தங்குமிடம், பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த வலைசை நடைபெறுகிறது. பட்டாம்பூச்சி வலசையானது ஆண்டுக்கு இரு முறை நடைபெறுகிறது.
ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் துவங்கி, ஜூன் மாதம் முதல் வாரம் தென்மேற்குப் பருவமழைக்கு முன்பும், தென்மேற்குப் பருவமழை முடிந்த பிறகும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து மீண்டும் ஒரு வலசையும் நடைபெறும்.
பட்டாம்பூச்சிகள் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய அங்கம். அதை உணர்த்தும் விதமாக இந்த காலகட்டத்தில் தான் இடம் பெயரும் (வலசை போகும்) பட்டாம்பூச்சிகளை கணக்கெடுப்பது, புகைப்படப் போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் தங்களின் பகுதியில் உள்ள பட்டாம்பூச்சிகளை கணக்கிட்டு iNaturalist போன்ற செயலிகள் மூலம் பதிவேற்றம் செய்வது என்று பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும்.
இந்தியாவில் 1300க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் உள்ளன. இது உலகின் மொத்த இனங்களில் 10 சதவீதம். மேற்குத் தொடர்ச்சி மலைகள், வடகிழக்கு இந்தியா, கிழக்கு இமயமலைப் பகுதிகள் ஆகியவை அரிய வகை, உள்ளூர் இன பட்டாம்பூச்சிகளை காணும் இடங்களாக உள்ளன. குறிப்பாக அருணாச்சல், சிக்கிம், மணிப்பூர், மேகாலயாவில் 700 இனங்களும், தமிழகத்தில் 300 க்கும் மேற்பட்ட இனங்களும் உள்ளன.
வர்ணம் பூசப்பட்ட பெண் வண்ணத்துப்பூச்சி (Painted Lady Butterfly), என்பது உலகிலேயே மிக பரவலாகக் காணப்படும் மற்றும் அதிக தூரம் வலசை போகும் ஒரு அரிய வண்ணத்துப்பூச்சி இனமாகும். தமிழில் இது 'ஓவிய அழகி' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த வண்ணத்துப்பூச்சிகள் நடுத்தர அளவிலானவை. இவற்றின் இறக்கைகளின் மேற்பகுதி ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறப் பின்னணியில், கருப்பு மற்றும் வெள்ளை நிறப் புள்ளிகளுடன் மிக அழகாகக் காட்சியளிக்கும். இறக்கைகளை மூடியிருக்கும் போது, அவற்றின் அடிப்பகுதியில் சிறிய கண்கள் போன்ற வடிவங்கள் (Eyespots) தென்படும்.
இவை மிக வேகமாகவும் உயரமாகவும் பறக்கக்கூடியவை. மணிக்கு சுமார் 20 மைல் (32 கி.மீ) வேகத்தில் பறக்கும் திறன்கொண்டவை. அண்டார்டிகா மற்றும் தென் அமெரிக்காவைத் தவிர உலகிலுள்ள அனைத்துக் கண்டங்களிலும் இவை பரவிக் காணப்படுகின்றன.
இவை உலகிலேயே மிக நீண்ட தூரம் (சுமார் 15,000 கி.மீ வரை) இடம்பெயரக்கூடிய (வலசை போதல் - Butterfly Migration) பூச்சியினங்களில் ஒன்றாகும். வட ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு இடம்பெயரும் பட்டாம்பூச்சிக் கூட்டங்களில் மில்லியன் கணக்கான பட்டாம்பூச்சிகள் இவை தான்.
வசந்த காலத்தில், பெயிண்டட் லேடி பட்டாம்பூச்சிகள் இடம்பெயரும்போது தாழ்வாக, பொதுவாக தரையிலிருந்து 6 முதல் 12 அடி உயரத்தில் மட்டுமே பறக்கும்.
தமிழ்நாட்டில் இதைக் காண்பது அரிது என்றாலும், சமீபத்திய ஆண்டுகளில் கோயம்புத்தூர், சென்னை, நீலகிரி, ஏற்காடு மற்றும் சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற உயரமானப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் இவை, தட்பவெப்ப நிலை மாற்றங்களின் போது சமவெளிப் பகுதிகளுக்கும் வருகின்றன.
தமிழ்நாட்டில், பருவமழைக் காலத்தில் நான்கு வகை பட்டாம்பூச்சிகள் மட்டுமே அதிக அளவில் வலசை மேற்கொள்கின்றன. 'மில்க்வீட்' (Milkweed) வகை செடிகளில் முட்டையிடும் டைனேனே (Danainae) குடும்பத்தில் இடம்பெற்றுள்ள நான்கு வகை பட்டாம்பூச்சிகள் இந்த நீண்டதூர வலசையை மேற்கொள்கின்றன. முறையே, ப்ளூ டைகர் (Blue Tiger), டார்க் ப்ளூ டைகர் (Dark Blue Tiger), டபுள் பிராண்டட் க்ரோஸ் (Double Branded Crows) மற்றும் காமன் க்ரோஸ் (Common Crows) பட்டாம்பூச்சிகள்தான் அவை.
இந்த பட்டாம்பூச்சிகள் 200 முதல் 400 கிலோமீட்டர் வரை கிழக்கு சமவெளி பகுதியிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு பயணம் மேற்கொள்கின்றன. இவை தொடர்ச்சியாக பறப்பது இல்லை. இடையில் தங்கி ஒய்வு எடுத்துக் கொண்டு பயணிக்கின்றன. பொதுவாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும்.
இந்த காலகட்டத்தில் உலகெங்கும் பட்டாம்பூச்சிகள் வலசை போகின்றன. மொனார்ச் பட்டாம்பூச்சிகள் ஒரு அற்புதமான வலசைப் பயணத்தை மேற்கொள்கின்றன. அவை வடகிழக்கு அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு கனடாவிலிருந்து மத்திய மெக்சிகோவில் உள்ள மலைக் காடுகளுக்கு 1,200 முதல் 2,800 மைல்கள் அல்லது அதற்கும் மேலாகப் பயணிக்கின்றன. அங்கு, நவம்பர் தொடக்கத்திலிருந்து மார்ச் நடுப்பகுதி வரை குளிர்கால உறக்கத்திற்குத் தேவையான சரியான காலநிலை நிலவுகின்றன. அதனை அனுபவிக்க மொனார்ச் வகை பட்டம் பூச்சிகள் செல்கின்றன.
இயற்கை மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய அங்கமான பட்டாம்பூச்சிகளின் வலசைப் பயணத்தை அறிந்துகொள்வதன் மூலம், நமது சுற்றுச்சூழல் அமைப்பின் மீது ஆழமான விழிப்புணர்வும் இயற்கையை பாதுகாக்க வேண்டிய பொறுப்புணர்வும் உங்களுக்குக் கிடைக்கும்.