

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த மனித குலம் நாகரீக வளர்ச்சியடைந்தபோது, அவர்களுக்கு வர்த்தகம், மருத்துவம் மற்றும் சமையல் போன்ற பல வகையான செயல்பாடுகளில் ஸ்பைஸஸ் (Spices) உடனிருந்துள்ளன. பணம், காசு போன்றவை கண்டுபிடிக்கப்படாத, அதாவது பண்டமாற்று முறை வழக்கில் இருந்த காலத்தில், பணத்திற்குப் பதில் ஸ்பைஸஸ்களைக் கொடுத்தே வர்த்தகப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அரச குடும்பத்தில் போர் வீரர்களுக்கு ஊதியமாக கொடுக்கப்பட்டதும் ஸ்பைஸஸ்களே. எனவே, ஸ்பைஸஸ்களை மக்கள் ஒரு காலத்தில் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்துள்ளனர். எகிப்து, துருக்கி, இந்தியா, சீனா மற்றும் மெசப்பொட்டோமியா போன்ற நாடுகளில் 5000 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே ஸ்பைஸஸ் (Spices) பயன்பாட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது.
அவ்வாறான ஸ்பைஸஸ்களில் கருப்பு மிளகு, சீரகம் மற்றும் மஞ்சள் ஆகிய மூன்றும், சமையலில் சுவைக்காகவும், உடல் நலக் கோளாறுகளை நீக்க உதவும் மருந்துகளின் தயாரிப்பிலும், வணிகவியல் செயல்பாடுகளிலும் உலகளவில் பயன்படுத்தப்பட்டு கலாச்சார மேம்பாட்டிற்கு சிறந்த முறையில் உதவி புரிந்துள்ளன. இந்த மூன்றினைப் பற்றிய கூடுதல் விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
1. சீரகம்:
மனிதர்கள் உபயோகித்து வந்த மிகப் பழமை வாய்ந்த ஸ்பைஸஸ்களில் ஒன்று சீரகம். இதன் பிறப்பிடம் இன்றைய ஈராக் எனப்படும் மத்திய கிழக்கு நாடு என ஆவணங்கள் கூறுகின்றன. பண்டைய எகிப்திய அரசர்களின் கல்லறைகளில் இந்த சிறிய விதைகள் காணப்பட்டதாக தொல்லியல் ஆராய்ச்சிக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. சுமார் 3500 BCE காலத்தில் எகிப்தியர் சமூகத்தினரிடையே இருந்து வந்த சீரகத்தின் முக்கியத்துவம் இதன் மூலம் அறியப்படுகிறது. நாளடைவில், ஜீரண கோளாறுகளை நீக்க உதவும் இதன் பண்பு மற்றும் இதன் பிற சிறப்புகளையும் அறிந்து, ரோம், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலும் சீரகம் அதிகளவு பயன்பாட்டிற்கு வந்து விட்டது.
2. கருப்பு மிளகு:
மற்றொரு பழமையான மசாலாப் பொருள் இது. இந்தியாவின் மலபார் கடற்பகுதிகளின் அருகில், சுமார் 2000 BCE காலக் கட்டத்திலிருந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.
சமையலில் ஒரு சுவையூட்டியாக இருப்பது மட்டுமின்றி, வர்த்தக ரீதியாக இந்தியாவுடன், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மத்தியதரைக் கடற்பகுதி மக்களின் கலாச்சாரப் பண்பாடுகளை இணைக்கும் ஒரு விலைமதிப்பற்ற பொருளாகவும் இருந்து வந்துள்ளது. இதன் கடுமையான வாசனையும் காரமான சுவையும் ஜீரணக் கோளாறு மற்றும் மூச்சுப் பிரச்சனைகளை நீக்க உதவுகின்றன. உணவுப் பொருட்கள் சில காலம் வரை கெடாமல் பாதுகாக்கவும் மிளகு உதவி புரியும்.
3. மஞ்சள்:
சுமார் 3000 BCE காலத்தில், சிந்து சமவெளி நாகரீகம் வளர்ச்சியடைய ஆரம்பித்த போதிலிருந்தே மஞ்சள், பாரம்பரிய சடங்குகள், மருத்துவ தயாரிப்புகள் மற்றும் சமையல் போன்றவற்றில் பங்கேற்று வந்துள்ளதாக தொல்லியல் ஆராய்ச்சி கூறுகிறது. இதன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்களுக்காக, நோய்களை குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்துகளின் தயாரிப்பில் இது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
சாரக சம்ஹிதா (Charaka Samhita) மற்றும் சுஷ்ருத (Sushruta) சம்ஹிதா ஆகிய பழங்காலப் புத்தகங்களிலும், இதன் நோய்களை குணப்படுத்தவும் மற்றும் சரும பாதுகாப்புக்கு உதவும் குணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)