

உடல் எடை குறைக்க உதவும் புரதம் நிறைந்த ஏழு வகையான காலை உணவு செய்முறைகளை விரிவாகப் பார்க்கலாம்.
1. பாசிப்பயறு இட்லி
இரண்டு டம்ளர் பாசிப்பருப்பு மற்றும் அரை டம்ளர் உளுத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாக நன்றாகக் கழுவி 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். முதலில் உளுத்தம் பருப்பை கிரைண்டரில் நன்றாக அரைத்து எடுத்த பிறகு பாசிப்பருப்பை அரைக்க வேண்டும். இரண்டையும் உப்பு போட்டு கலந்து 5 மணி நேரம் புளிக்க வைத்து பிறகு இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கலாம். இந்தக் கலவையில் தயாரான இட்லி மிக மிக மிருதுவாக இருக்கும்
2. கம்பு, பாசிப்பயறு தோசை
ஒரு பங்கு கம்பு அரிசி, அரை பங்கு பாசிப்பயறு எடுத்து நன்றாகக் கழுவி எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதில் நறுக்கிய சிறு துண்டு இஞ்சி மற்றும் இரண்டு பச்சை மிளகாய்களைச் சேர்த்து நைஸாக அரைக்கவும். இந்த மாவில் உடனடியாக தோசை சுடலாம். புளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
3. குதிரைவாலி தயிர் சாதம்
ஒரு டம்ளர் குதிரைவாலி அரிசியை நன்றாகக் கழுவி 30 நிமிடங்கள் ஊற விடவும். அரிசியில் நான்கு டம்ளர் தண்ணீர் கலந்து, குக்கரில் மூன்று விசில் விட்டு வேக வைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கால் ஸ்பூன் உளுந்து, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய கேரட், கொத்தமல்லி தழை சேர்த்து தாளிக்க வேண்டும். கடைசியாக தயிர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, மசித்து வைத்த குதிரைவாலி அரிசியுடன் இந்தக் கலவையைச் சேர்த்தால் சுவையான தயிர் சாதம் தயார்.
4. ராகி ரொட்டி
ஒரு டம்ளர் ராகி மாவுடன், துருவிய ஒரு பெரிய கேரட், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் ஊற்றி மாவை கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். சிறிதளவு மாவை எடுத்து பட்டர் பேப்பரில் ரொட்டி போலத் தட்டிக்கொள்ள வேண்டும். தோசைக்கல்லைச் சூடாக்கி, எண்ணெய் தெளித்து, தட்டிய ராகி ரொட்டியை கல்லில் போட்டு, மிதமான தீயில் சுட்டு எடுக்கவேண்டும்.
5 சாமை அரிசி கிச்சடி
1:1 என்ற விகிதத்தில் சாமை அரிசி, பாசிப்பருப்பு எடுத்து, இரண்டையும் நன்றாகக் கழுவி 30 நிமிடங்கள் ஊறவிடவும். குக்கரில் நெய் ஊற்றி, சீரகம், தட்டிய 3 பூண்டு பற்கள் சேர்த்து, நறுக்கி வைத்த கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி மற்றும் விருப்பப்பட்டால் சிறிய உருளைக்கிழங்கு சேர்க்க வேண்டும். மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு சேர்த்து, அரிசி-பருப்பு கலவைக்கு ஏற்றவாறு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து, மூன்று விசில் விட்டு இறக்கவும்.
6. கொண்டைக்கடலை கட்லட்
ஒரு கப் கொண்டை கடலையை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் தேவையான உப்பு சேர்த்து வேக வைக்கவும். அதில் பாதியளவை எடுத்து மசித்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கரம்மசாலா, சிறிது மிளகாய் பொடி சேர்த்துப் பிசைந்து கட்லெட் வடிவத்தில் உருவாக்கவும். தவாவில் சிறிதளவு எண்ணெய் தெளித்து கட்லெட்டுகளை மிதமான தீயில் வைத்து இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்
7. பார்லி தோசை
ஒரு டம்ளர் பார்லி அரிசி, கால் டம்ளர் உளுத்தம் பருப்பு, கால் டம்ளர் அவல், மற்றும் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 8 மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைக்க வேண்டும். மாவு 4 மணி நேரம் புளித்த பிறகு மென்மையான தோசையாக சுட்டு எடுக்கலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)