

மழை குளிர் காலங்களில் வீட்டின் தரையினை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வெளியே சென்று வந்ததனால் ஏற்படும் அழுக்கு கறைகள் தரையில் படிந்துவிடும். அதைப் போக்க வீட்டை டெட்டால் (Dettol) கொண்டு துடைக்க வேண்டும். எலுமிச்சைசாறால் துடைத்தால் கறை போய் விடும். வீட்டை துடைக்கும் மாப்பையும் (Mop) டெட்டால் நீரில் அலசி காய வைத்தால் கிருமிகள் ஒட்டாது.
குளிர்காலத்தில் காய்ச்சல் வந்து விட்டால் மிளகுத்தூளை நீரில் கலந்து கொதிக்க வைத்து கஷாயமாக கொடுத்தால் காய்ச்சலின் தீவிரம் குறையும்.
இருமலுடன் கூடிய ஜலதோஷம் இருந்தால் இரண்டு அல்லது மூன்று மிளகை சர்க்கரையுடன் சேர்த்து மென்று மெதுவாக தொண்டையில் படும்படி விழுங்கினாலே சரியாகிவிடும்.
மழை காலத்தில் வீட்டில் ஈக்கள் தொல்லை இருக்கும். சிறிது வசம்பை அரைத்து அதை தண்ணீரில் கரைத்து வீடு முழுவதும் துடைத்துவிட்டால் ஈக்கள் ஓடிவிடும்.
குளிர்காலத்தில் இன்ஃபெக்ஷன் காரணமாக அரிப்பு ஏற்படும். அதற்கு குளிக்கும் நீரில் வேப்பம்பொடி ஒரு ஸ்பூன், மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் கலந்து குளிக்க வேண்டும்.
குளிர்காலத்தில் முடி வறட்சி காரணமாக பொடுகு பிரச்சனையை ஏற்படும். அந்த பொடுகானது கைகளில் எல்லாம் செதில் செதுவாக உதிர்ந்து இருக்கும். இதை தவிர்க்க வாரம் ஒரு முறை கற்றாழை ஜெல்லை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கரைத்து தலையில் நன்றாக தடவி ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து பிறகு அலசினால் வரட்டுத்தன்மை நீங்குவதுடன் பொடுகும் கட்டுப்படும்.
சித்தரத்தை, அதிமதுரம் அரிசி, திப்பிலி, மிளகு, சுக்கு இந்த ஐந்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு பொடி செய்து, அந்த பொடியை இரண்டு டம்ளர் நீரில் நான்கு ஸ்பூன் போட்டு காய்ச்ச வேண்டும். அரை டம்ளராக அது வற்றியவுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குளிர்கால ஜலதோஷம் பறந்தே போய்விடும்.
மழைக்காலத்தில் மாலை வேளையில் தணலில் நிறைய சாம்பிராணி போடுங்கள். அந்த புகை வீட்டில் உள்ள கிருமிகளை ஒழிப்பதோடு, நாம் சுவாசிக்கும் போது நமக்கும் குளிர்ந்த காற்றால் ஏற்படும் காது அடைப்பு போன்ற தொல்லைகளையும் நீக்கும். ஒரிஜினல் சாம்பிராணிக்குத்தான் இந்த பலன் கிடைக்கும்; ரெடிமேட் சாம்பிராணிக்கு கிடைக்காது .
மழைக்காலத்தில் வீட்டின் முகப்பில் இரண்டு அகல் விளக்கில் தீபம் ஏற்றினால், கிருமிகளை அழித்து விடுவதோடு, நம் வீட்டில் உள்ளவர்களுக்கு தீங்கு வராமல் தடுக்கும்.
குளிர்காலத்தில் குடிக்கும் தண்ணீரில் ஒரு துண்டு இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் எந்த நோயும் வராது. அதேபோல், நீரை நன்றாக கொதிக்க வைத்து துளசியை நன்றாக கழுவி விட்டு போட்டு பருகினாலும் எந்த நோயும் வராது. கேன் நீரானாலும் கொதிக்க வைத்து ஆற வைத்து தான் பருக வேண்டும்.
மழைக்காலத்தில் எக்காரணம் கொண்டும் மீதமான சாப்பாட்டை ப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்த கூடாது. அந்தந்த நேரத்தில் சமையல் செய்து சூடான சாப்பாடு தான் சாப்பிடுவது நல்லது; உடல் நலக் கோளாறு வராது.
மழைக்காலத்தில் மழையில் நனைந்து விட்டீர்களா.? வீட்டிற்கு வந்ததும் ஈர உடையை மாற்றி விட்டு முதல் வேலையாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து, அதை கீழே இறக்கி அந்த கொதிநீரில் ஒரு கைப்பிடி வேப்பிலை, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தலையில் ஒரு துண்டால் மூடி, முகத்தை காட்டி ஆவி பிடியுங்கள். மழையில் நனைந்ததால் வரும் ஜலதோஷம் வராது; கைவசம் வேப்பிலை இல்லையென்றால் ஒரு விரலளவு விக்ஸ் போட்டு ஆவி பிடியுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)