
ஏப்ரான் எப்படி கவசமாக செயல்படும்? மில்லியன் டாலர் கேள்வி. ஆனால், அதுதான் உண்மை. பார்க்கலாமா? ஏப்ரான் எனும் கவசம், உள்ளே அணிந்திருக்கும் நல்ல ஆடைகளின் முன் புறத்தை கவசம் போல் பாதுகாக்கும். துணியால் தயாரிக்கப்பட்ட ஏப்ரானை, கழுத்தில் மாட்டிக்கொண்டு, நாடாவினால் இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும்.
பெரிய உணவகங்கள், மருத்துவ மனைகள், தொழிற்சாலைகளில் பணிப்புரியும் பல ஊழியர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள், வீட்டு பெண்மணிகள் என அநேகர் அணியும் "ஏப்ரான்", அவர்கள் அணிந்திருக்கும் நல்ல ஆடைகளை அழுக்கு, கறை, தண்ணீர், எண்ணெய், தூசி போன்றவைகளிலிருந்து பாதுகாக்கும் கவசமாகும்.
மேலும், ஏப்ரானில் சிறு டவல், கைக்குட்டை, கருவிகள் போன்றவைகளை வைத்துக்கொள்வதற்கு வசதியாக பையும் உண்டு.
ஆரம்பத்தில் செஃப் ஆக செயல்பட்ட, பிரெஞ்சுக் காரர்கள்தான் ஏப்ரானை உபயோகிக்க தொடங்கினர். 17 ஆம் நூற்றாண்டில், பிரெஞ்சு வார்த்தையான 'மேப்ரான்', காலப் போக்கில் 'ஏப்ரானாக' மாறி, 18ஆம் நூற்றாண்டில் மெதுவாக பிற நாடுகளுக்கு சென்றது. இன்றைய கால கட்டத்தில் பலரும், பலவகையில் ஏப்ரானை உபயோகிக்கின்றனர்.
முழு உடலையும் மறைக்கும் வண்ணம் இருந்த ஏப்ரான், அவரவர் வேலைகளுக்கேற்ப, மெல்ல-மெல்ல பார்பிக்யூ முறையில் மாற்றங்கள் பெற்றன.
பல்வேறு வகை ஏப்ரான்கள்
1. சமையலறை ஏப்ரான்கள்
கிச்சனில் சமையல் செய்கையில், ஆடைகளில் கறைகள் படாமல் கவசம் மாதிரி பாதுகாக்கிறது.
2. தோட்டம் மற்றும் பண்ணை ஏப்ரான்கள்
தோட்ட வேலை, செடிகள் பராமரிப்பு வேலை போன்றவைகளைச் செய்பவர்கள் அணியும் ஏப்ரான் அவர்களது ஆடைகளை, மண், குப்பை ஆகியவைகளிலிருந்து பாதுகாக்கின்ற கவசமாகும்.
3. விருந்தோம்பல் ஏப்ரான்
பெரிய உணவகங்களில் பணி புரிபவர்கள், கேட்டரிங் செய்பவர்கள், பரிமாறுகின்றவர்கள் பயன்படுத்துவது. அணிந்திருக்கும் ஆடைகள் மீது சாப்பாட்டு ஐட்டம் விழாமல் பாதுகாக்கும் கவச ஏப்ரான்.
4. வேலை ஏப்ரான்
பல்வகை தொழிற்சாலைகளில் மற்றும் வெவ்வேறு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்றவாறு வெல்டர் ஏப்ரான், கெமிஸ்ட் ஏப்ரான், காஃப்லர் ஏப்ரான், மருத்துவர் ஏப்ரான் போன்றவை கவசம் போல செயல்படுகின்றன.
வித-விதமான ஏப்ரான்
1. முழு ஏப்ரான்
உடலின் முன் பகுதியை மட்டும் மூடும். சமையல் செய்பவர்களுக்கு ஏற்றது.
2. இடுப்பு ஏப்ரான்
இடுப்பிலிருந்து கீழ் பகுதி வரை இருக்கும் இத்தகைய ஏப்ரானை வெயிட்டர்கள் அணிவதுண்டு.
3. கவச ஏப்ரான்
உடலின் முன் மற்றும் பின் பக்கங்களை பாதுகாக்கும் வகையிலிருக்கும். தோல் மற்றும் முரட்டுத்துணிகள் கொண்டு தைக்கப்பட்டிருக்கும். கடின வேலைகளில் ஈடுபடுபவர்களுக்களுக்கு உதவும்.
4. குழந்தை ஏப்ரான்
சிறு குழந்தைகளுக்கு உணவு கொடுக்கையில் அவர்களது உடையில் உணவு சிந்தாமல் கவசமென பாதுகாக்கும் குழந்தை ஏப்ரான். (பெரிய பள்ளிகளில் கூட, மாணாக்கர்கள் தங்களது யூனிபாஃர்ம் அசுத்தப்படாமல் இருக்க, சாப்பிடும் வேளையில் கவசம் போல ஏப்ரான் அணிவது வழக்கம்.)
ஏப்ரான் வாங்குகையில்,
1) எந்த செயலுக்காக வாங்குகிறோம் ?
2) எத்தகைய ஏப்ரான் பொருந்தும் ?
3) அளவு மற்றும் வடிவமைப்பு சரியாக உள்ளதா?
4) நிறம்.
5) அலங்கார ஏப்ரான் தேவையா?
போன்றவைகளையெல்லாம் கவனித்து வாங்குவது அவசியம்.
பருத்தி, துணி, தோல், பாலியஸ்டர், பிளாஸ்டிக் போன்ற பல்வேறு பொருட்களால் செய்யப்படுகிறது ஏப்ரான். மேலங்கி, உடுப்பு காப்புத்துணி, காப்புடை, கவசம் என பல பெயர்களால் அழைக்கப்படும் பெருமையைப் பெற்றுள்ளது ஏப்ரான்.
உபரி தகவல்கள்
மிசிசிப்பியின் "ஐகா" விலுள்ள "ஏப்ரான் அருங்காட்சியகம்" , அமெரிக்காவின் ஏப்ரான்கள் மற்றும் அவைகளின் கதைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே மியூஸியமாகும்.
நகைச்சுவை வெளிப்பாடுகள், வடிவமைப்புக்கள், நிறுவனத்தின் லோகோ போன்ற பலவற்றை நவீன கால ஏப்ரான்கள் வெளிப்படுத்துகின்றன.
இவ்வளவு விபரங்களையும், பெருமைகளையும் தன்னுள்ளே கொண்டு கவசம் போல உதவும் ஏப்ரானுக்கு ஒரு " ஓ" போடலாமா..?