அசாமில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய கூம்பு வடிவத் தொப்பியினை ’ஜாபி’ (Jaapi) என்கின்றனர். இந்தத் தொப்பிகளும் மற்ற ஆசியக் கூம்புத் தொப்பிகளைப் போன்றதுதான். ஜாபி என்ற வார்த்தை ஜாப் என்பதிலிருந்து வந்தது. அதாவது, 'டக்கு இலைகளின் கட்டு' என்பது இதன் பொருளாகும். கடந்த காலத்தில், சாதாரண ஜாபி அசாமில் சாதாரண மக்களாலும், விவசாயிகளாலும் சூரிய ஒளியின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டது. அதே வேளையில், அரசர் மற்றும் நிலப்பிரபுக்கள் தகுதியின் அடையாளமாக அலங்கரிக்கப்பட்ட ஜாபிகளை அணிந்தனர்.
முதலில் ஜாபி என்பது மழை அல்லது வெயிலிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக விவசாயிகளால் தலைக்கவசமாகப் பயன்படுத்தப்பட்டது. விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்ட போடோ - கச்சாரிகள் பெரும்பாலும் நெல் வயல்களில் ஜாபியினைப் பயன்படுத்துகின்றனர். இதே போன்ற தலைக்கவசங்கள் கிழக்கு ஆசியா முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. அலங்கார சொருடோய் ஜாபிகள் நெசவுகளில் ஒருங்கிணைக்கப்பட்ட சிக்கலான துணி வடிவமைப்புகளுடன், முதன்மையாகச் சிவப்பு, வெள்ளை, பச்சை, நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் தயாரிக்கப்படுகின்றன.
ஜாபியினை 6 வகைகளாகப் பிரிக்கின்றனர்.
1. சொருடோய் ஜாபி - பெண்களால், குறிப்பாக மணப்பெண்களால் பயன்படுத்தப்படுகிறது.
2. போர்டோய் ஜாபி - பழங்காலத்திலிருந்தே (கம்ருபா) அரச குடும்பத்தால் பயன்படுத்தப்படுகிறது.
3. பனிடோய் / ஹலுவா ஜாபி - விவசாயிகளால் வயல்களில் பயன்படுத்தப்படுகிறது.
4. கராக்கிய ஜாபி - கால்நடை மேய்ப்பவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
5. பிதா ஜாபி - சில நேரங்களில் சாகுபடியின் போது தலைக்கவசமாகப் பயன்படுத்தப்படுகிறது.
6. துப்பி / வருண் ஜாபி - மழையின் போது பாதுகாப்பு தொப்பிகளாகப் பயன்படுத்தப்படுகிறது.
இடைக்கால சுடியா மன்னர்கள் ஜாபியை ஒரு கலாச்சார அடையாளமாகப் பயன்படுத்தினர். 1523 ஆம் ஆண்டு உடன்படிக்கைக்கான முயற்சியில் அகோம் மன்னர் சுஹுங்முங்கிற்கு தங்கம் மற்றும் வெள்ளி நூற் வேலைப்பாடுடைய ஜாபிகளை பரிசாக அளித்தார். 1524 ஆம் ஆண்டில் சாடியாவை இணைத்த பிறகு, அஹோம் மன்னருக்கு ஏராளமான பொக்கிசங்கள் கிடைத்தன. இதில் ஜாபிகளும் அடங்கும். 1525 ஆம் ஆண்டில், அஹோம் மன்னர், தற்போதைய மேல் மியான்மரில் (புராஞ்சிசில் நோரா என்று அழைக்கப்படுகிறார்) ஷான் மாநிலமான மோங்காங் தலைவரான புக்லோயிமுங்குடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, சூட்டியா மன்னரிடமிருந்து பெறப்பட்ட சில வெள்ளி ஜாபிகளையும் மற்ற பொருட்களையும் பரிசாக வழங்கினார்.
அஹோம் ஆட்சியின் போது, ஜாபி-ஹாஜியா கேல் (ஜாபிகளை உருவாக்கும் சங்கத்தினர்) சூடியாசால் ஏகபோகமாக இருந்தது. இது அவர்கள் ஜாபிகளை நெசவு செய்வதில் வல்லுநர்கள் என்பதைக் குறிக்கிறது. இது தவிர, மத்திய அசாமின் பரோ-புயான்களும் ஜாபிகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சத்சாரி புரஞ்சியின் படி, அஹோம் மன்னர்கள் டோங்காலி, ஹசோதி மற்றும் டோகோ-பாட்டியா ஜபியை பரோ-புயான்களிடமிருந்து ஏற்றுக் கொண்டனர் என்று இதன் வரலாறும் சற்று நீளமாகவே இருக்கிறது.
தற்போது, ஜாபி அசாமின் சின்னமாக உள்ளது. இது பிஹு நடனத்தின் பாணியில் அணியப்படுகிறது. விழாக்களில் மரியாதைக்குரிய அடையாளமாகக் கருதப்படுகிறது. மேலும், வீட்டைச் சுற்றி அலங்காரப் பொருளாக, குறிப்பாக சுவர்களில் வரவேற்பு அடையாளமாக வைக்கப்படுகிறது. பிஷ்ணு பிரசாத் ரபா, போடோ சமூகத்தின் கோஃப்ரி சிப்னாய் மவ்சானையின் ஜெயமதி திரைப்படத்தின் மூலம் அசாமியக் கலாச்சாரத்தில் ஜாபி நடனத்தைச் சேர்த்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.