
1903 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் உடலியங்கியல் துறையைச் சேர்ந்த வில்லியம் பேலிஸ் என்பவர் 60 மருத்துவ மாணவர்களைப் பார்வையாளர்களாகக் கொண்ட வகுப்பில், ஒரு பழுப்பு நிற டெரியர் நாயைச் சட்டவிரோதமான முறையில் உடற்கூறாய்வு செய்ததாக புகார் எழுந்தது. அந்த நாய்க்குப் போதுமான அளவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்தது என்று பேலிஸ் மற்றும் அவருடன் உதவிக்கு இருந்தவர்கள் கூறினர். ஆனால், அந்த நாய்க்கு மயக்க மருந்து கொடுக்கப்படவில்லை என்றும், அந்த நாயின் உடலை அறுக்கும் போது, அந்த நாய் நனவுடன் வலியால் துடித்துக் கொண்டு இருந்தது என்றும், அதை மாறுவேடத்தில் கண்காணித்ததாக ஸ்வீடன் நாட்டு ஆர்வலர்கள் கூறினர். அதனைத் தொடர்ந்து, தேசிய உடற்கூறாய்வு எதிர்ப்பு சங்கம் இந்நிகழ்வினை கொடூரமானது மற்றும் சட்ட விரோதமானது என்று குறிப்பிட்டு அந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தது.
ஹார்மோன்களைக் கண்டறிவதற்கு வழிவகுத்த அறிவியல் ஆராய்ச்சிகளை நாய்கள் மீது செய்த பேலிஸ், இவற்றைத் தனது நற்பெயருக்கு உண்டான களங்கமாகக் கருதி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்து அவ்வழக்கில் வெற்றி பெற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், உடற்கூறாய்வு எதிப்பு ஆர்வலர்கள் ஒன்று திரண்டு 1906 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 15 அன்று, பேட்டர்ஸீயில் உள்ள லாட்ச்மியர் பொழுதுபோக்குத் திடலில் பாதிக்கப்பட்ட பழுப்பு நாயின் நினைவாக வெண்கலச் சிலை ஒன்றை நிறுவினர். அந்த நினைவுச் சின்னத்தின் கீழாக, "இங்கிலாந்தின் மக்களே, இன்னும் எத்தனை காலம் தான் இப்படி?" என்ற பொறிக்கப்பட்ட ஒரு அறிவிப்புப் பலகையும் நிறுவப்பட்டது.
அந்தப் பலகையைக் கண்டு ஆத்திரமடைந்த மருத்துவ மாணவர்கள் அந்த நினைவுச்சின்னத்தை தொடர்ச்சியாக சேதப்படுத்த முற்பட்டனர். உடற்கூறாய்வு எதிப்பு ஆர்வலர்கள், அந்த நினைவுச் சின்னத்திற்கு, நாய் எதிர்ப்பாளர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டி கோரிக்கை வைத்தனர். அதன் பிறகு, அந்த நாய் சிலைக்கு 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதனால் கோபமடைந்த நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள், 1907 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாளன்று, பழுப்பு நாயின் கொடும்பாவி உருவங்களை உருவாக்கி, அதனைக் குச்சிகளில் செருகி, அவற்றை அசைத்தபடியே மத்திய இலண்டன் வழியாக பேரணி ஒன்றை நடத்தினர்.
அந்தப் பேரணியில் சென்ற மாணவர்கள் வழியில் பெண்ணிய ஆர்வலர்கள், தொழிற்சங்கவாதிகள், 300 காவல்துறை அதிகாரிகள் எனப் பலருடனும் மோதலில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்சனை, பின்னாளில் 'பழுப்பு நாய்க் கலவரங்கள்' என அழைக்கப்பட்டது.
1910 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தப் பிரச்சனை தொடர்ந்ததுடன், அவ்வப்போது பல போராட்டங்களை உருவாக்கியது. இந்தப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய பேட்டர்ஸீ நகரசபை, 120 காவல்துறை அதிகாரிகளின் துணையோடு நான்கு தொழிலாளர்களை அனுப்பி, இரவோடு இரவாகச் சிலையை அகற்ற ஏற்பாடு செய்தது. அதன் பிறகு, அந்த நாய்ச் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டுமென்று கோரி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டு நகரசபைக்கு மனு அளித்தனர். ஆனால், நகரசபை நிருவாகம், அந்த வெண்கலச் சிலையை உருக்கி விட்டதால், அதனை மீண்டும் அவ்விடத்தில் வைக்க இயலாது என்று தெரிவித்து விட்டது.
ஆனால், உடற்கூறாய்வு எதிர்ப்பு குழுக்கள் தொடர்ந்து அந்த நாயின் சிலையை அதே இடத்தில் வைக்க வேண்டுமென்று பல்வேறு வழிகளில் தொடர்ந்து போராடி வந்தனர். கடைசியாக, 75 ஆண்டுகளுக்குப் பிறகு, 1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆ,ம் நாளன்று பேட்டர்ஸீ பூங்காவில் பழுப்பு நாயின் புதிய சிலை ஒன்று நிறுவப்பட்டது. பழுப்பு நிற நாயின் புதிய நினைவுச் சின்னத்தை நடிகை ஜெரால்டின் ஜேம்ஸ் என்பவர் திறந்து வைத்தார்.
பழுப்பு நாயின் உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்ட, ‘லிட்டில் பிரவுன் டாக்’ என்ற நாவலின் ஆசிரியர் பவுலா எஸ்.ஓவன் என்பவர், 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 1906 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிறுவிய பழுப்பு நாயின் வெண்கலைச் சிலை திறக்கப்பட்ட 115 ஆவது ஆண்டு நினைவு நாளில் மீண்டும் அசல் சிலையினை மீண்டும் வடிவமைத்து, அதனை நிறுவ வேண்டுமென்று ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்து உள்ளார்.
அவரின் முயற்சி வெற்றியடையுமா? என்று தெரியவில்லை. இருப்பினும், இங்கிலாந்தையே இரண்டாக்கிய பழுப்பு நாயின் சிலை பிரச்சனை, இங்கிலாந்தின் உடற்கூறாய்வு எதிர்ப்புக் குழு மற்றும் விலங்கு நலக் குழு உள்ளிட்ட சில குழுக்களின் 75 ஆண்டு கால தொடர் முயற்சியையும், வெற்றியையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.