
பாலைவன ஒட்டகத் திருவிழா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜனவரி மாதத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானீர் பகுதியிலும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சால்மர் பகுதிகளிலும் இத்திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
இந்தியாவிலேயே ஒட்டகப்பண்ணை ராஜஸ்தானில் உள்ள பிகானீரில் தான் உள்ளது. இந்த பிகானீர் ஒட்டகத் திருவிழா சில வருடங்களுக்கு முன்பாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பொழுது இந்த விழா மக்களின் அமோக ஆதரவைப் பெற்றதால் இன்றும் மிகவும் சிறப்பு பெற்று அனைவரின் பார்வைக்கும் விருந்தளிப்பதாக உள்ளதுடன் அதைப் பார்ப்பவர்கள் தொன்மையான திருவிழா என்று நம்பும்படி இருக்கிறது.
இந்த திருவிழாவை ராஜஸ்தானில் உள்ள சுற்றுலாத்துறை ஏற்று நடத்துகிறது. இந்த விழாவின் முக்கியமான பங்கேற்பாளர்கள் என்று பார்த்தால் பாலைவன கப்பல்கள் என்று கூறப்படும் ஒட்டகங்கள்தான். இதன் சிறப்பு என்னவென்றால் ஒட்டகங்கள் இடையே ஓட்டப்பந்தயம் உண்டு! பயிற்சி அளிக்கப்பட்ட ஒட்டகங்கள் நடனம் ஆடுவதும் உண்டு. ஒட்டகங்களுக்கு இடையே அழகு போட்டியும் நடத்தப்படுகிறது.
மாலை வேளைக்குப் பிறகு தீ மூட்டப்பட்டு அதைச் சுற்றிலும் ராஜஸ்தான் பழங்குடியினர் ஆடுவது அழகான கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. ஒட்டகங்களுக்குப் பலவிதமான நகைகள் அன்று பூட்டப்படுகிறது. அருகில் உள்ள ஜீனாக்கர் கோட்டை பின்னணியில் ஒட்டகங்கள் அணிவகுக்கும் அழகே அழகு.
பாலைவனப் பகுதிகளில் நீண்ட பயணம் செய்வதற்கு ஒட்டகங்களின் பயன்பாடு அதிகம். மணற்பகுதிகளில் தண்ணீர் கிடைப்பது அரிது. ஆனால், ஒட்டகங்கள் தண்ணீரை உடலில் சேமித்துக் கொள்ளும் வடிவமைப்பும், உடல் அமைப்பும் கொண்டதால் இவைகளே பிரதான பாலைவன வாகனமாக இருக்கின்றன.
ராஜஸ்தான் மாநில ஓவியர்கள் தங்களின் படைப்புகளை பிறரது பார்வைக்கு வைத்திருப்பார்கள். பட்டாசுகளும் வானவேடிக்கையிலும் நிறைந்த விழாவாக இந்த ஒட்டகத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
மேலும் பாலைவனத்திருவிழா ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மீரில் ஜனவரி/ பிப்ரவரி மாதங்களில் கொண்டாடப்படுகிறது. ராஜஸ்தானில் உள்ள தார்பாலைவனம் மற்றும் ஜெய்சால்மீர் நகரில் அருகில் உள்ள பாலைவனப் பகுதியில் இந்த பாலைவனத் திருவிழா விசேஷமாக மிகவும் ஸ்பெஷல் ஆகக் கொண்டாடப்படுகிறது. இந்த பாலைவனத் திருவிழா, சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் திருவிழா என்றால் மிகையாகாது.
கண்களை கவரும் ராஜஸ்தான் பழங்குடி இனத்தவரின் உடைகளும், நகைகளும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. ஆண்களும் பெண்களுமாக வண்ண வண்ண உடைகளில் காதல், வீரம், சோகம் ஆகிய உணர்வுகள் பொங்கும்படி நடனமாடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
அங்கு வரும் ஆண்களில் மிகச்சிறந்த மீசை வைத்துள்ள ஆண்களுக்கான போட்டியும் நடைபெறுவது உண்டு. அதேபோல் இசை வல்லுநர்கள் பௌர்ணமி அன்று மணல் பரப்பில் அமர்ந்து தங்கள் இசைஞானத்தை காட்டும் வகையில் போட்டி போட்டுக் கொண்டு இசைப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பௌர்ணமி அன்று மணல் பரப்பில் நடைபெறும் ஒளி/ஒலி காட்சி மிகவும் குறிப்பிடத்தக்கது. பாலைவனத் திருவிழாவில் மிகவும் குறிப்பிடத்தக்கது என்று இதை கூறினால் சாலப் பொருந்தும்.