இந்திய ராணுவத்தின் 'தாய்வீடு' சென்னைதான்... தெரியுமா உங்களுக்கு?

இந்திய ராணுவ அமைப்பிற்கு வித்திட்ட மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் பெருமைமிகு வரலாறு மற்றும் வீரத்தின் பின்னணி.
ராணுவ வரலாறு - Indian Army History
ராணுவ வரலாறு - Indian Army History
கோவீ.ராஜேந்திரன்

வணக்கம், அடிப்படையில் நான் ஓர் ஆட்டோமொபைல் இன்ஜினியர், ரிலாக்சேஷனுக்காக பத்திரிகைகளில் ஆரம்பத்தில் துணுக்குகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு வந்துள்ளேன். தமிழகத்தில் வரும் முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய கட்டுரைகள் 500க்கும் மேற்பட்டவைகள் வந்துள்ளது. பொது அறிவு சம்பந்தமாக இது வரை 12 புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்கி ஆன்லைன் பத்திரிகை குழு நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர் குழு அன்பாலும், ஆதரவாலும் இது வரை 300 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதி உள்ளேன் என்பதை நன்றியடன் தெரிவித்துக் கொள்கிறேன். வித்தியாமான தகவல்கள் அடங்கிய படைப்புகள் வழங்க வேண்டும் என்பது என் விருப்பம்.

Updated on: 

இந்தியாவின் ராணுவத்துறைக்கு அடித்தளமிட்டது சென்னைதான் காரணம் என்றால் கேள்விபட ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. பிரிட்டிஷார் இந்தியாவில் உருவாக்கிய முதல் ராணுவம் மெட்ராஸ் ராணுவம்தான். அதனைத் தொடர்ந்துதான் வங்காள மற்றும் பம்பாய் ராணுவம் உருவாக்கப்பட்டது. சென்னையின் வரலாற்றையும், இந்திய ராணுவ வரலாற்றையும் தனித்தனியாக பிரித்து பார்க்க முடியாது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தது.

ராணுவ வரலாறு:

கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் பிரிட்டிஷ் கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George) தான்.1640 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இக்கோட்டை, கிழக்கிந்திய கம்பெனியின் செயல் அலுவலகம் மட்டும் அல்லாமல் தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரத்தின் மையப்புள்ளியாகவும் விளங்கியது.

பிரிட்டிஷ் ராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப் பட்ட சாலை வசதிகள், ரயில் நிலையங்கள், கப்பல் துறைமுகங்கள் அனைத்தையும் பயன்படுத்தி சென்னை மாநகரமும் வளர்ச்சி அடைந்து வந்தது.

பிரெஞ்சு படைகளுடனான மோதல்கள், மைசூர் போர்கள் என பல வரலாற்று நிகழ்வுகளைச் சந்தித்த இடம் இந்த ஜார்ஜ் கோட்டைதான். கோட்டையினுள் உள்ள புகழ்பெற்ற புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம் (Fort Museum), பழங்கால ஆயுதங்கள், வீரர்கள் அணிந்த ராணுவ சீருடைகள் மற்றும் பதக்கங்களை இன்றும் காட்சிப்படுத்தி வைத்துள்ளது.

மெட்ராஸ் ரெஜிமென்ட் (Madras Regiment) என்பது இந்திய ராணுவத்தின் மிகப்பழமையான காலாட்படை (Infantry) பிரிவாகும். இந்தியா ராணுவத்தின் மிகப் பழமையான ரெஜிமென்ட் இதுதான். 1660ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால், 'மெட்ராஸ் ரெஜிமென்ட் ஐரோப்பியன்' என்ற பெயரில் படைப்பிரிவு தொடங்கப்பட்டது.

இது 1750-களில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் மெட்ராஸ் ரெஜிமென்டாக மாற்றம் பெற்றது. 1757 முதல் 1895 வரை இது 'மெட்ராஸ் ராணுவம்' (Madras Army) என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1895-இல் இது இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டது.

ராணுவ வரலாறு - Indian Army History
ராணுவ வரலாறு - Indian Army History

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளைச் சேர்ந்த வீரர்களை இது முக்கியமாக உள்ளடக்கியது. கர்நாடகப் போர்கள், முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள், மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-சீனா போர்களில் இப்பிரிவு முக்கியப் பங்கு வகித்தது.

இதையும் படியுங்கள்:
சுதந்திர இந்தியாவின் முதல் குரல் முதல் ஆட்டோமொபைல் ஹப் வரை: சென்னையின் பிரம்மாண்ட வரலாறு!
ராணுவ வரலாறு - Indian Army History

தற்போது தமிழகத்தின் உதகமண்டலத்தில் உள்ள வெலிங்டனில் இதன் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, நமது அனேக முக்கியமான ராணுவ நடவடிக்கைகளிலும், ரகசிய நடவடிக்கைகளிலும் மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் பங்களிப்பு இருந்தது. உலகின் மிக உயரமான சியாச்சின் பனிச்சிகரப் போர்க் களத்தை இன்றுவரை மெட்ராஸ் ரெஜிமென்ட்தான் பாதுகாத்து வருகிறது. ப்ளூ ஸ்டார் நடவடிக்கை, 1998 பொக்ரான் அணுகுண்டுச் சோதனை உள்ளிட்டவற்றிலும் மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் பங்களிப்பு இருந்தது.

மெரினா கடற்கரையின் தொடக்கத்தில், தீவுத்திடலுக்கு அருகில் அமைந்துள்ள வெற்றிப் போர் நினைவிடம் (Victory War Memorial) முதலில் 'கியூபிட்ஸ் போ' (Cupid's Bow) என்று அழைக்கப்பட்டது. முதலாம் உலகப் போரில் (1914-1918) நேச நாட்டுப் படைகளின் வெற்றியைக் கொண்டாட முதன்முதலில் கட்டப்பட்டு, பின்னர் இரண்டாம் உலகப் போரிலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியப் போர்களிலும் (1962 சீனா போர், 1948 காஷ்மீர் ஆக்கிரமிப்பு, கார்கில் போர் மற்றும் இந்தோ-பாக் போர்கள்) தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த சென்னை மாகாண மற்றும் இந்திய வீரர்களின் நினைவாக இது போற்றப்படுகிறது. அண்மையில் இது போர் டாங்கிகள் மற்றும் போர்க்கப்பல் மாதிரிகளுடன் கூடிய ராணுவ பாரம்பரிய வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
திருச்சி பொன்மலை சந்தை: உழவர் சந்தை டூ தமிழ்நாட்டின் மிகப்பெரிய செல்லப்பிராணிகள் மார்க்கெட்!
ராணுவ வரலாறு - Indian Army History

சென்னை போர் மயானம் (Madras War Cemetery) நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த அமைதியான வளாகம், இரண்டாம் உலகப் போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் (1939-1945) தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த 800-க்கும் மேற்பட்ட காமன்வெல்த் நாடுகளின் வீரர்களின் உடல்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இதன் பின்புறம் உள்ள 'மெட்ராஸ் 1914-1918 நினைவிடத்தில்', முதலாம் உலகப் போரின் போது பல்வேறு இடங்களில் உயிரிழந்து, முறையாக அடக்கம் செய்ய முடியாத 1,000-க்கும் மேற்பட்ட வீரர்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் உள்ள போர் கல்லறைகள் மற்றும் நினைவிடங்களைப் பராமரிக்கும் பொறுப்புள்ள அமைப்பான காமன்வெல்த் போர் கல்லறைகள் ஆணையத்தால் (CWGC) பராமரிக்கப்படுகிறது. இந்த மயானம் 1952-ல் நிறுவப்பட்டது மற்றும் சுமார் 10 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. கல்லறைக்கு வரும் பார்வையாளர்கள், போரின்போது தங்கள் உயிரை ஈந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தலாம் மற்றும் தங்கள் நாட்டிற்காக அவர்கள் செய்த தியாகங்களை நினைவுகூரலாம்.

சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள புனித தோமையார் மலை (St. Thomas Mount) இந்த மலைப்பகுதி வெறும் ஆன்மீகத் தலம் மட்டுமல்ல, சென்னையின் மிகப்பழைமையான ராணுவக் குடியிருப்புகளில் (Cantonment) ஒன்றுமாகும். செயின்ட் தாமஸ் மவுண்ட்-கம்-பல்லாவரம் கன்டோன்மென்ட் (St. Thomas Mount-cum-Pallavaram Cantonment Board) என்பது இந்தியாவின் பழமையான இராணுவப் பகுதிகளில் ஒன்றாகும். 1774 ஆம் ஆண்டு இது உருவாக்கப்பட்டது. இது இந்தியாவின் இரண்டாவது பழமையான கன்டோன்மென்ட் ஆகும். இது செயின்ட் தாமஸ் மவுண்ட், மீனம்பாக்கம் மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 2,914 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

ராணுவ வரலாறு - Indian Army History
ராணுவ வரலாறு - Indian Army History

18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தே பிரிட்டிஷ் பீரங்கிப் படைகளின் (Artillery) முக்கிய தளமாக இது விளங்கியது. சுதந்திரத்திற்குப் பின், இந்திய ராணுவத்தின் மிக உயரிய அதிகாரிகளை உருவாக்கும் புகழ்பெற்ற ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகடமி (Officers Training Academy - OTA) இம்மலையின் அடிவாரத்தில்தான் அமைக்கப்பட்டு இன்றுவரை செயல்பட்டு வருகிறது.

சென்னை தற்போது இந்தியாவின் மெட்ரோபாலிடன் நகரங்களில் ஒன்றாக உள்ளது. அதன் வளர்ச்சிக்கு துணை நின்றது இந்திய ராணுவ துறையின் செயல்பாடுகள் தான் என்றால் அது மிகையாகாது.

logo
Kalki Online
kalkionline.com