டத்தோ, டத்தோ ஸ்ரீ, டான் ஸ்ரீ என்றால் என்னங்க? வாங்க, தெரிஞ்சுக்கலாம்!

டத்தோ, டத்தோ ஸ்ரீ, டான் ஸ்ரீ என்றால் என்ன? இந்தப் பெயர் முன்னொட்டுகளை யாரெல்லாம் பயன்படுத்துகின்றனர். அதிலென்ன சிறப்பு இருக்கிறது? என்று தெரிந்து கொள்ளலாம்.
Datuk, Datuk Seri, and Tan Sri are Malaysian award
Datuk, Datuk Seri, and Tan Sri are Malaysian award
Published on

மலேசியாவில் வசிக்கும் சிறப்பு பெற்ற சில தமிழர்களின் பெயர்களுக்கு முன்பாக டத்தோ, டத்தோ ஸ்ரீ, டான் ஸ்ரீ என்கிற முன்னொட்டுகள் இடம் பெற்றிருப்பதைச் செய்தித்தாள்களில் பார்க்கிறோம். தொலைக்காட்சி மற்றும் இணைய வழிச் செய்திகளிலும் இந்த முன்னொட்டுகளுடனான பெயர்கள் இருப்பதைக் காண்கிறோம். டத்தோ, டத்தோ ஸ்ரீ, டான் ஸ்ரீ என்றால் என்ன? இந்தப் பெயர் முன்னொட்டுகளை யாரெல்லாம் பயன்படுத்துகின்றனர். அதிலென்ன சிறப்பு இருக்கிறது? என்று நமக்குள் சந்தேகங்கள் எழுவது இயல்பே! வாங்க, அது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

மலேசிய நாட்டில் மலேசியச் சமூகத்திற்கும், மலேசிய நாட்டிற்கும் நன்மை பயக்கும் வகையில் மிகச் சிறந்த சேவையாற்றிய மலேசியக் குடிமக்களுக்கும், வெளி நாட்டினருக்கும் மலேசிய அரசினால் பல்வேறு விருதுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் டத்தோ, டத்தோ ஸ்ரீ, டான் ஸ்ரீ விருதுகளும் இடம் பெற்றிருக்கின்றன.

டத்தோ

மலேசிய அரசாங்கம் வழங்கும் முக்கிய விருதுகளில் 'பாங்லிமா ஜாசா நெகாரா' (Panglima Jasa Negara) எனும் விருதையும், 'பாங்லிமா செத்தியா டிராஜா' (Panglima Setia Diraja) எனும் விருதையும், பொதுவாக, டத்தோ விருது என்கின்றனர். மலேசியக் கூட்டரசு வழங்கும் விருதுகள் பட்டியலில், தகுதிகள் அடிப்படையில் 'பாங்லிமா ஜாசா நெகாரா' விருது (தேசிய நம்பிக்கை விருது என்று தமிழில் பொருள் கொள்ளலாம்) 9-வது இடத்திலும், 'பாங்லிமா செத்தியா டிராஜா' விருது (அரச நம்பிக்கை விருது என்று தமிழில் பொருள் கொள்ளலாம்) 10-வது இடத்திலும் இருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
இனி இவர்களுக்கும் ஆஸ்கார் விருது… அறிமுகமாகும் புதிய பிரிவு!!
Datuk, Datuk Seri, and Tan Sri are Malaysian award

1965-ம் ஆண்டில் இருந்து பொதுமக்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. டத்தோ விருதைப் பெற்ற ஒருவரின் மனைவியை டத்தின் (Datin) என்றும், இந்த விருதினைப் பெண்கள் தனிப்பட்ட வகையில் பெற்றிருந்தால் அவரை டத்தின் பாதுக்கா (Datin Paduka) என்றும் அழைக்கின்றனர்.

மலேசியப் பேரரசர், மலேசிய மாநிலங்களின் சுல்தான்கள், ஆளுநர்கள் ஆகியோர் டத்தோ விருது வழங்கும் தகுதிகளைப் பெற்றிருக்கின்றனர். மலேசியக் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே பெறக் கூடிய இந்த விருதைச் சில வெளிநாட்டவர்களும் தங்களின் அரிய சேவைகளுக்காகப் பெற்றிருக்கின்றனர்.

டத்தோ விருது வழங்கப்படுவதில் மலேசியாவில் சில சர்ச்சைகள் ஏற்பட்டு உள்ளன. டத்தோ விருது பெற்ற சிலர் முன்மாதிரியான வாழ்க்கை முறையைத் தவிர்த்து ஒழுங்கீனமான வகையில் சொத்துகளைச் சேர்த்துள்ளனர். அவர்களில் சிலர் நீதிமன்றங்களினால் தண்டிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். எனவே, அவர்களுடைய டத்தோ விருதுகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என சில சமூக அமைப்புகள் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றன. உலகச் சுவர்ப்பந்து வீராங்கனையான 25 வயது நிக்கல் டேவிட் என்பவருக்கும் மலேசிய ஒலிம்பிக் வீரர் லீ சோங் வேய் என்பவருக்கும் டத்தோ விருது வழங்கப்பட்ட போது, அவர்கள் இருவரும் மிகவும் இளம் வயதினர், அவர்களுக்கு டத்தோ விருது வழங்கப்பட்டிருக்கக் கூடாது எனும் எதிர்ப்புகளும் எழுந்திருக்கின்றன. இதேப் போன்று, இந்தி நடிகர் ஷாருக்கான் மலாக்காவில் படப்பிடிப்புகள் நடத்தியதற்காக, மலாக்கா மாநில அரசு அவருக்கு டத்தோ விருதை வழங்கியதற்கும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

டத்தோ ஸ்ரீ

மலேசிய அரசாங்கம் வழங்கும் முக்கிய விருதுகளில் டத்தோ ஸ்ரீ (Dato' Sri), டத்துக் ஸ்ரீ (Datuk Sri) என்று இரு வகையான விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த இரண்டு விருதுகளையும் பொதுவாக, டத்தோ ஸ்ரீ என்கின்றனர். மலேசியப் பேரரசர், மாநிலச் சுல்தான்கள், மலேசிய ஆளுநர்கள் ஆகியோர் டத்துக் ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ விருதுகளை வழங்கும் தகுதிகளைப் பெற்றிருக்கின்றனர். மலேசியாவிற்கு அரிய சேவைகள் செய்தவர்களைப் பாராட்டும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

டத்தோ ஸ்ரீ விருது என்பது மிக உயரிய விருதுகளில் ஒன்றாகும். இந்த விருது, மலேசியாவின் உயந்த விருதான துன் விருதிற்கு அடுத்த நிலையில் இருந்து வரும் விருதாகும். மலேசிய இந்தியர் காங்கிரஸின் முன்னாள் தலைவராக இருந்த ச.சாமிவேலு அவர்களுக்கு இந்த டத்தோ ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இதேப் போன்று, மலேசிய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த எஸ். சுப்பிரமணியத்திற்கு டத்துக் ஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதைப் பெற்றவரின் மனைவியை டத்தின் ஸ்ரீ என்று அழைக்கின்றனர்.

டான் ஸ்ரீ

மலேசிய அரசாங்கம் வழங்கும் முக்கிய விருதுகளில் 'பாங்லிமா மாங்கு நெகாரா' (Panglima Mangku Negara) விருதையும், 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' (Panglima Setia Mahkota) விருதையும், பொதுவாக, டான் ஸ்ரீ விருது என்று அழைக்கின்றனர். மலேசியக் கூட்டரசு வழங்கும் விருதுகள் பட்டியலில், தகுதிகள் அடிப்படையில் 'பாங்லிமா மாங்கு நெகாரா' விருது 7 ஆவது இடத்திலும், 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' விருது 8 ஆவது இடத்திலும் இருக்கின்றன. 1957ஆம் ஆண்டில் இருந்து பொது மக்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
அங்கீகரிக்கப்படாத அசாதாரண சேவைகளுக்கான விருது வழங்கும் விழா!
Datuk, Datuk Seri, and Tan Sri are Malaysian award

டான் ஸ்ரீ விருதைப் பெற்ற ஒருவரின் துணைவரை புவான் ஸ்ரீ (Puan Sri) என்று அழைக்கின்றனர். இந்த விருதினைப் பெண்கள் தனிப்பட்ட வகையில் பெற்றிருந்தால் அவரை டான் ஸ்ரீ என்றே அழைக்கின்றனர். இந்த விருது, மலேசியக் குடியுரிமை பெற்றவர்கள் தவிர, வெளிநாட்டினர் சிலருக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com