
1971 ஆம் ஆண்டில் இந்தியா வங்கதேச முக்தி வாகினியுடன் இணைந்து இந்திய - பாகிஸ்தான் போரில் நிறைவு பெற்ற வெற்றியின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 16 அன்று, வெற்றி நாள் (Victory Day) கொண்டாடப்படுகிறது.
1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின், தற்போதைய வங்காளதேசப் பகுதி கிழக்குப் பாகிஸ்தான் என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இருப்பினும், இப்பகுதிக்கும் மேற்கு பாகிஸ்தான் பகுதிக்கும் இடையிலான தொலைவு சுமார் 1600 கிலோ மீட்டர். மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடையிலான அனைத்துப் போக்குவரத்தும் இந்தியாவின் வழியாகவே நடைபெற வேண்டும் என்றிருந்தது. மேலும், இப்பகுதியில் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் பேசப்படும் வங்காள மொழியேப் பயன்பாட்டிலிருக்கிறது.
இந்நிலையில், மொழி வேறுபாடு காரணமாகவும், பொருளாதரப் புறக்கணிப்பு காரணமாகவும், கிழக்குப் பாக்கிஸ்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது. தனிநாடு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டில் நடந்த இந்திய - பாகிஸ்தான் போரின் போது, இந்திய இராணுவத்தின் போர் செயல்பாடுகளால் பின்னடைவைச் சந்தித்த பாகிஸ்தான் இராணுவம், தானாக முன்வந்து நிபந்தனையற்ற சரணடைந்தது. தங்களின் தோல்விக்குப் பின்னர் டாக்காவில் ரமணா குதிரைப் பந்தயப் மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஒன்பது மாதங்கள் நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. அலுவல் முறையாக பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்காளதேசம் உருவானது.
வங்காளதேசம் உலகின் எட்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். வங்காளதேசக் குடியரசு நாடாளுமன்ற ஜனநாயக நாடாகும். இதன் நாடாளுமன்றம், ‘ஜாதியோ சங்சத்’ என்று அழைக்கப்படுகிறது. இந்நாடு, வளமிக்க கங்கை-பிரமபுத்திரா கழிமுகத்தில் அமைந்துள்ளதோடு, வரலாற்று மற்றும் பல்வேறு கலாசார மரபுரிமைகளையும் கொண்டுள்ளது.
இந்தியப் படைகளுடன் தனிநாடு கோரிக்கையில் வெற்றியடைந்த வங்காளத் தேசத்தில் டிசம்பர் 16 அன்று, 'வங்காளதேச வெற்றி நாள்' கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அங்கு தேசிய விடுமுறை நாளாகவும் இருக்கிறது. இந்நாளை இந்தியாவும் ‘வெற்றி நாள்’ என்று கொண்டாடுகிறது.
இந்நாளில், இந்தியாவின் தலைநகர் புதுடில்லி இந்திய வாயிலிலுள்ள அமர் ஜவான் ஜோதியில், முப்படைகளின் தளபதிகளுடன் இணைந்து நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஞ்சலி செலுத்துகின்றார். அதே போல், பெங்களூரில் உள்ள தேசிய இராணுவ நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. குடிமக்கள், மாணவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோர் ஆண்டுதோறும் டிசம்பர் 16 அன்று மலரஞ்சலி செலுத்தி வீரர்களின் தியாகத்தை நினைவு கூறுகின்றனர். நாமும் இந்நாளில் போரில் உயிர் நீத்த படைவீரர்களை நினைவில் கொண்டு அஞ்சலி செலுத்துவோம்!