தீபாவளிக்கும் சமணம், சீக்கியத்திற்கும் என்ன தொடர்பு? மறைந்திருக்கும் வரலாற்று உண்மைகள்!

இந்து பண்டிகையாக மட்டும் அறியப்படும் தீபாவளியின் ஆன்மீக மற்றும் வரலாற்றுப் பின்னணியை அறிந்துகொள்ளுங்கள்.
தீபாவளி வரலாறு - Bandi Chhor Divas
தீபாவளி வரலாறு - Bandi Chhor DivasImage credit: Gemini
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

தீபாவளித் திருநாள் பொதுவாக இந்து சமயத்தினரால் விமரிசையாகக் கொண்டாடப்பட்டாலும் சமணம் (Jainism) மற்றும் சீக்கிய (Sikhism) மதங்களிலும் இந்த நாளுக்கு மிகவும் முக்கியமான வரலாற்று பின்னணிகள் உள்ளன. சமணம் மற்றும் சீக்கிய மதங்களில் தீபாவளி வெவ்வேறு வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டாடுகிறது.

தீபாவளி வரலாறு:

சமணத்தில் தீபாவளி:

சமண மதத்தைப் பொறுத்தவரை தீபாவளி என்பது அவர்களின் மிக முக்கியமான புனித நாளாகும். சமண மதத்தின் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பீகாரின் பாவாபுரி நகரில் கார்த்திகை மாத அமாவாசை நாளில் (கிமு 527இல்) தனது 72 வது வயதில் இதே நாளில்தான் முக்தி (நிர்வாணம்/ஜீவசமாதி) அடைந்ததாக கூறப்படுகிறது.

மகாவீரர் முக்தி அடைந்ததால், உலகில் பரவிய அறியாமை இருளை நீக்க மக்கள் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். சமண நூலான 'ஹரிவம்ச புராணத்தில்' இது 'தீபாலிகா' (விளக்குகளின் வரிசை) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது ஆன்மா அடைந்த விடுதலையையும், அவர் உலகிற்கு வழங்கிய ஞானத்தின் ஒளியையும் குறிக்க தீபங்கள் ஏற்றப்படுகின்றன. சமணக் கோயில்களிலும் இல்லங்களிலும் விளக்குகள் ஏற்றி, மகாவீரரின் இறுதி போதனைகள் அடங்கிய 'உத்தரத்யாயன சூத்திரம்' ஓதப்படுகிறது. அகிம்சைக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் என்பதால் பொதுவாக பட்டாசுகளைத் தவிர்த்து எளிமையாகக் கொண்டாடுகின்றனர்.

சமணர்கள் இந்த நாளில் ஆடம்பரங்களைத் தவிர்த்து உபவாசம் (விரதம்) மற்றும் தியானம் மேற்கொள் கின்றனர். சமணக் கோயில்களில் மகாவீரருக்கு 'நிர்வாண லட்டு' என்ற இனிப்பை அர்ப்பணிக்கின்றனர். அகிம்சை என்ற தத்துவத்தை பின்பற்றுவதால் இவர்கள் பெரும்பாலும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கிறார்கள்.

தீபாவளிக்கு மறுநாள் சமணர்களின் புத்தாண்டுத் திருநாள் வீர நிர்வாண சகாப்தம் 'பிரதிபதி' தொடங்குகிறது. வர்த்தகர்கள் இந்த நாளில் புதிய கணக்குப் புத்தகங்களைத் தொடங்குகிறார்கள்.

தீபாவளி வரலாறு - Bandi Chhor Divas
தீபாவளி வரலாறு - Bandi Chhor Divas

சீக்கியத்தில் தீபாவளி (பந்தி சோர் திவாஸ் -Bandi Chhor Divas):

சீக்கியர்கள் தீபாவளி நாளினை சிறை மீட்பு நாள் அல்லது விடுதலை நாள் என்று கொண்டாடுகின்றனர். 1619 ஆம் ஆண்டு சீக்கியர்களின் 6வது குருவான குரு கோவிந்த் சிங் மற்றும் அவருடன் சிறைபிடிக்கப்பட்டிருந்த 52 இந்து அரசர்கள் குவாலியர் கோட்டையிலிருந்து ஜஹாங்கீர் மன்னரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளை இது குறிக்கிறது.

பேரரசர் ஜஹாங்கீர் குருவை மட்டும் விடுதலை செய்ய சம்மதித்த பொழுது, அரசர்களும் விடுதலை ஆக வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதற்கு ஜஹாங்கீர் அவருடைய அங்கியை (ஆடையை) யார் பிடித்துக் கொண்டு வெளியேறுகிறார்களோ அவர்கள் மட்டும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்.

குரு ஹர்கோவிந்த் உடனடியாக 52 தொங்கல்கள் (Tassels) கொண்ட ஒரு சிறப்பு அங்கியை தைக்கச் செய்து 52 அரசர்களையும் அதைப் பிடித்துக்கொள்ள செய்து அனைவரையும் ஒரே நேரத்தில் மீட்டெடுத்தார். சிறையிலிருந்து மீண்ட குரு சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு வந்தடைந்த பொழுது மக்கள் ஒட்டுமொத்த நகரையும் விளக்குகளால் அலங்கரித்து வரவேற்றனர்.

சமூகம் மற்றும் சக மனிதர்களின் நலனுக்காகவும், வீரம் மற்றும் இரக்கத்தை நினைவுபடுத்தும் வகையிலும் இந்நிகழ்வு கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தலை தீபாவளி சீர் வரிசை: அன்றும் இன்றும் மாறியது என்ன?
தீபாவளி வரலாறு - Bandi Chhor Divas

அவர்கள் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குத் திரும்பியதை நினைவு கூறும் வகையில், சீக்கியர்கள் பொற்கோவிலிலும் குருத்வாராக்களிலும் விளக்குகளை ஏற்றி சிறப்பு பிரார்த்தனைகள் (கீர்தன்), பஜனைகள், சிறப்பு வழிபாடுகள் மற்றும் 'லங்கர்' எனப்படும் இலவச சமூக உணவுக் கூடங்கள் மூலம் அனைவருக்கும் உணவளித்துக் கொண்டாடுகின்றனர். இது ஒடுக்கு முறைக்கு எதிரான வெற்றி, சுதந்திரம் மற்றும் மனித நேயத்தைக் கொண்டாடும் நாளாக அமைகிறது.

மொத்தத்தில் இந்துக்களுக்கு தீபாவளி நரகாசுர வதம் மற்றும் ராமர் அயோத்தி திரும்பிய நாள் என்றால், சமணர்களுக்கு அது மகாவீரரின் ஆன்மீக விடுதலை நாள்; சீக்கியர்களுக்கு அது மனித உரிமை மற்றும் நீதிக்கான சமூக விடுதலை நாளாகும்.

இதையும் படியுங்கள்:
தீபாவளி எண்ணெய் குளியல்... தவறவிட்டால் என்ன ஆகும்? அறிவியலும் சாஸ்திரமும் சொல்லும் ரகசியம்!
தீபாவளி வரலாறு - Bandi Chhor Divas
logo
Kalki Online
kalkionline.com