ஆதீண்டுக்குற்றி (ஆ+தீண்டும்+குற்றி) என்பது ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தங்கள் உடலில் தினவு ஏற்படும் போது, உடலைச் சொரிந்து கொள்வதற்கு வைக்கப்பட்ட கல் ஆகும்.
இது முன்னோர் வகுத்த 32 அறங்களுள் ஒன்று. பண்டைய தமிழ் மக்கள் கோவிலுக்குக் கொடை அளிப்பது, ஏரி குளங்கள் வெட்டுவது போன்ற அறச்செயல்களில் ஒன்றாக, ஆடு மாடுகளின் இயற்கை உணர்வுகளைத் திருப்தி படுத்தும் விதமாக இது போன்ற அறச்செயல்களைச் செய்துள்ளனர்.
மேய்ச்சல் நிலங்களுக்கு அருகிலும், குளக்கரைகளுக்குப் பக்கத்திலும் உயரமான கல் தூண், மரக்கட்டைகளை நட்டு வைத்தனர். மேய்ச்சலுக்காக வெயிலில் சுற்றும் மாடுகள் நீர் நிலைகளை வந்தடைகின்றன. சேற்றினை உடம்பில் பூசிக்கொண்டு கரை ஏறும் மாடுகளுக்கு தினவு ஏற்படுகின்றது. தினவைத் தீர்க்க, அவை ஆதீண்டு குற்றியை நோக்கிச் செல்கின்றன. இந்தத் தூண்களில் கால்நடைகள் தங்கள் முதுகை உரசிக் கொள்ளும்.
பண்டையக் காலத்தில் கால்நடைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து இதை உருவாக்கினர். மரங்களில் உரசினால் வளர்ச்சி பாதிக்கும் என்பதை அறிந்தே, இந்த ஏற்பாட்டை செய்தனர். தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பெருஞ்சொல் அகராதியில், பசுக்கள் உராய்ந்து தம் அரிப்பை நீக்குவதற்கு ஏற்ப நடப்படும் உயரமான கல்தூண் 'ஆதீண்டு குற்றி' என்கிறது.
ஐங்குறுநூறு (277:1-2) பாடலில், 'குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 13, 14ம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் 'தன்மத்தறி' என்று இக்கல்லைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தர்மத்திற்காக நடப்பட்ட கல் என்பது இதன் பொருள். தன்மத்தறி மட்டுமின்றி, நடுதறி, ஆவுரிஞ்சி, ஆவுரிஞ்சு தறி, ஆதீண்டு கல், ஆவோஞ்சிக்கல், ஆவுரிஞ்சிக்கல், மாடுசுரகல், தினவுக்கல் என்றும் ஆதீண்டுக்குற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.