
கர்நாடகாவிலிருக்கும் மைசூரில் கிடைக்கும் பொருட்களை மட்டுமே பயன்படுத்தித் தயாரிக்கப்படும் ஊதுபத்திக் (அகர்பத்தி) குச்சிகளை மைசூர் அகர்பத்தி அல்லது மைசூர் ஊதுபத்தி என்கின்றனர். உலகின் மிகப்பெரிய அகர்பத்தி உற்பத்தி நகரம் மைசூர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
1900 ஆம் ஆண்டுகளில் பெங்களூரில் ஊதுபத்திகள் தயாரித்தல் என்பது ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாக மாறியது. அப்பொழுது ’ஊத பத்தி’ என்று அழைக்கப்பட்டது. இதற்கு ‘வீசும் புகை’ எனும் பொருள். பின்னர் அது, ‘ஊதுபத்தி’ என்று பெயர் மாற்றமடைந்தது. இந்தி மொழியில் இதனை அகர்பத்தி என்கின்றனர். ஊதுபத்திக் குச்சிகளை உற்பத்தி செய்வது மிகவும் எளிமையானது. ஏனெனில், இதற்கான தயாரிப்புப் பணி என்பது கரி மற்றும் உமியுடன் கலந்த இயற்கைப் பொருட்களின் பசையை மூங்கில் குச்சிகளின் மீது உருட்டுவது மட்டுமேயாகும். இதில் சேர்க்கப்படும் கலவை விகிதம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அன்றைய மைசூர் மாகாணத்தின் மகாராஜா ஊதுபத்திக் குச்சிகளை உற்பத்தி செய்வதற்கும் அத்தொழில் முன்னேறுவதற்கும் ஊக்குவிப்பும் ஆதரவும் அளித்தார்.
கர்நாடகா மாநிலத்தின் சிமோகா அருகிலுள்ள திரிதஹள்ளி என்ற இடத்தைச் சேர்ந்த டி. ஐ. உபாத்யாய என்பவரும், தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த அட்டர் காசிம் சாகிப் என்பவரும் சேர்ந்து 1885 ஆம் ஆண்டில் மைசூரில் முதன் முதலாக ஊதுபத்தி உற்பத்தி செய்யும் தொழிலைத் தொடங்கினார்கள். அதன் பின்னர், தாங்கள் தயாரித்த நறுமணம் தரக்கூடிய மைசூரில் மட்டுமே உற்பத்தி செய்த ஊதுபத்திகளை இங்கிலாந்தின் இலண்டனில் நடைபெற்ற வெம்பிலிக் கண்காட்சியில் காட்சிப்படுத்தினார்கள். அங்கு மைசூர் அகர்பத்திக்கான தரச் சான்றிதழ் பெற்று வென்றனர். அதன் பிறகு, இந்த நிகழ்வால் அன்றைய மைசூர் அரசாங்கம் மைசூரைத் தவிர்த்த அரசாங்கத்தின் மற்ற இடங்களிலிருந்து வரும் பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு மைசூரில் தயாரிக்கப்படும் ஊதுபத்திக் குச்சிகளைப் பரிசாகக் கொடுக்கத் தொடங்கினர். அதன் பின்னர், மைசூரில் ஊதுபத்திக் குச்சிகளை உற்பத்தி செய்யும் தொழிலைப் பலரும் செய்யத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து, மைசூரில் தயாரிக்கப்படும் ஊதுபத்திகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டது.
மைசூர் அகர்பத்திகளின் சிறப்பு உள்ளூரில் மட்டுமே கிடைக்கக்கூடிய இயற்கைப் பொருட்கள் நறுமணப் பொருட்கள் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
ஊதுபத்திகள் செய்யத் தேவையான மூலிகைகள், பூக்கள், தேவையான எண்ணெய், மரப்பட்டைகள், வேர்கள், கரி ஆகியவை மென்மையான கலவையாக மாறும் வரை நன்றாக அரைக்கப்பட்டு பின்னர் ஒரு மூங்கில் குச்சியில் உருட்டப்பட்டு உலர வைக்கப்படுகின்றன.
இதற்கெனப் பயன்படுத்தப்படும் மரங்களான சந்தனம், அயிலாந்தஸ் மலபரிக்கம் என்று சொல்லக்கூடிய பீ தணக்கன் மரம் போன்ற சிறப்பு மரங்களிலிருந்து கிடைக்கும் ஹல்மாடி, சந்தனம் போன்ற நறுமணப் பொருட்கள் மற்றும் பிற இயற்கைப் பொருட்கள் ஆகியவை புவியியல் ரீதியாக கர்நாடகாவில் மட்டுமேக் கிடைக்கின்றன. எனவே இந்த ஊதுபத்திகள் கர்நாடகாவின் சிறப்பு புவியியல் குறியீட்டு நிலையைப் பெற்றுள்ளன.
அகில இந்திய அகர்பத்தி சங்கம் மைசூர் அகர்பத்தியை சென்னையிலுள்ள காப்புரிமை, வடிவமைப்பு மற்றும் வணிக முத்திரைகளுக்கான ஜெனரலின் அலுவலகத்திற்கு 1999 ஆம் ஆண்டின் புவியியல் குறியீட்டு பொருட்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய, முன் மொழிந்தது. இதனால் இப்பகுதியில் கிடைக்கக்கூடிய இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் ஊதுபத்தி உற்பத்தியாளர்கள் மட்டுமே மைசூர் என்ற பெயரைப் பயன்படுத்தலாம் என்ற அனுமதியைப் பெற்றது. அதன் பிறகு, 2005 ஆம் ஆண்டில் மைசூர் அகர்பத்திக்கு புவிக்குறியீட்டு எண் வழங்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.