நாச்சியார்கோயில் விளக்குகளை தயார் செய்வது யார் தெரியுமா?

நாச்சியார்கோயில் விளக்கு
நாச்சியார்கோயில் விளக்கு
Published on

தென்னிந்தியக் கோயில்களில் காணப்படும் நாச்சியார்கோயில் விளக்கு - வரலாறு:

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் நாச்சியர்கோயில் அமைந்துள்ளது. இந்த நகரம் கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே 6 மைல் (9.7 கி.மீ) தூரத்தில் கும்பகோணம் - திருவாரூர் முதன்மைச் சாலையில் உள்ளது. இவ்வூரிலுள்ள கம்மாளர்கள் (பத்தர்கள்) எனப்படும் உள்ளூர் கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் விளக்குகள், ‘நாச்சியார் கோயில் விளக்கு’ என்று புகழ்பெற்றதாக இருக்கின்றன.

கேரளாவின் முந்தைய திருவாங்கூர் - கொச்சி சமஸ்தானத்திலிருந்த நாகர்கோயிலுக்குச் சென்று, விளக்கு செய்யும் முறையினைப் பயின்ற பத்தர்கள் என அழைக்கப்படும் கம்மாளர் சமூகத்தினர், நாகர்கோயிலில் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொடர முடியாத நிலையில், அவர்களிலிருந்து ஐந்து குடும்பங்கள் ஆரம்பத்தில் கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தனர்.

கும்பகோணத்தில் வசித்து வந்த உள்ளூர்க் கைவினைஞர்கள், கைவினைப் பொருட்களைத் தயாரிப்பதற்கு பித்தளைத் தாள்களைப் பயன்படுத்தி வந்தனர். பித்தளைத் தாள்களைப் பயன்படுத்துவது பற்றித் தெரியாத பத்தர்கள், 1857 ஆம் ஆண்டில் நாச்சியார்கோயிலுக்குச் சென்று குடியேறினர். அதன் பிறகு, அவர்கள் ஒரு குறிப்பிட்ட வகை வண்டல் மணலைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட பித்தளை அலாய் நுட்பத்தைப் பயன்படுத்தி அதில் தங்கள் சொந்தக் கைவினைத்திறனைப் புகுத்தினர். பின்னர் அந்தத் தொழில்நுட்பத்தில் விளக்குகளைத் தயாரிக்கத் தொடங்கினர்.

இதையும் படியுங்கள்:
நரசிங்கம்பேட்டை நாகசுரமும், ‘கொறுக்கைத் தட்டை புல்' கொண்டு செய்யப்படும் 'ஜீவவளி'யும்!
நாச்சியார்கோயில் விளக்கு

பித்தளையைக் கொண்டு அகல் விளக்குகளை அடுக்கி உருவாக்கப்பட்ட இந்த அலங்கார விளக்கு, நாச்சியார்கோயில் விளக்கு (Nachiarkoil Lamp) என்று சிறப்புப் பெயர் பெற்றது. இந்த விளக்கானது, அம்மன் விளக்கு அல்லது நாச்சியார் குத்துவிளக்கு என்றும் அழைக்கப்படுகிறது. வெற்று வார்ப்பாக இருக்கும் விளக்கு, வெவ்வேறு அளவுகளில் நான்கு பகுதிகளாகத் தயாரிக்கப்படுகிறது. பின்னர், அவை ஒன்றாகத் திருகப்படுகின்றன. அதன் உச்சியில் 'பிரபை' என அழைக்கப்படும் மகுடம் போன்ற அமைப்பு பொருத்தப்படுகிறது.

இது பொதுவாக அம்சப் பறவை அல்லது அன்னப்பறவை வடிவத்தில் இருக்கும். விளக்கு ஒரு மேலோட்டமான கிண்ணத்தை வைத்திருக்கும் பெண் உருவ வடிவத்திலோ அல்லது ஒரு மரக் கிளைகளின் வடிவத்திலோ செய்யப்படலாம். இந்த விளக்குகளின் கிண்ணத்தில் ஐந்து முகங்கள் உள்ளன. அவற்றில் எண்ணெயால் நிரப்பி பருத்தித் திரிகளைக் கொண்டு விளக்கு ஏற்றி வைக்கப்படுகிறது. இவ்வகை அலங்கார விளக்குகள் தென்னிந்தியாவில் உள்ள கோவில்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

நாச்சியார்கோயில் குத்து விளக்கு, வணிகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் புவியியல் குறிப்பின் கீழ், 2010 ஆம் ஆண்டு, பிப்ரவரி 8 அன்று, இந்திய அரசாங்கத்தின் புவியியல் குறிப்புகள் சட்டம் 1999-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
வண்ணமயமான காற்றாடிகளின் தோற்றமும் வரலாறும்!
நாச்சியார்கோயில் விளக்கு

தமிழ்நாடு கைவினை மேம்பாட்டுக் கழகம், நாச்சியார்கோயிலில் 'பூம்புகார்' என்ற பெயரில் பித்தளைக் கைவினைப் பொருட்களைச் செய்யும் இரண்டு வருடப் பயிற்சித் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. ஆண்டுதோறும் இப்பயிற்சியில் பல மாணவர்கள் சேர்க்கப்பட்டு, குத்துவிளக்கு உட்பட பல்வேறு பித்தளைக் கைவினைப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com