நரசிங்கம்பேட்டை நாகசுரமும், ‘கொறுக்கைத் தட்டை புல்' கொண்டு செய்யப்படும் 'ஜீவவளி'யும்!

Nagaswaram
Nagaswaram
Published on

நாகசுரம் (Nagaswaram) என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாகசுவரம், நாதசுரம், நாகஸ்வரம், நாயனம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி பயன்பாட்டில் உள்ளது. இந்த இசைக்கருவி திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது.

தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதால், பொதுவாக அனைத்து வகையான நல்நிகழ்வுகளிலும் இதற்குத் தனி இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல முறை இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. கோயில்கள் தவிர, தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டு விழா போன்ற நிகழ்வுகளிலும், சமயச் சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.

தென்னிந்தியாவிலுள்ள நாகூர், நாகப்பட்டிணம் முதலிய ஊர்களில் உள்ளவர்களான, நாகசர்ப்பத்தைத் தெய்வமாகப் பூசித்த நாகர் என்ற சாதியரால் வாசிக்கப்பட்டு வந்தது நாகசுரம். நாகத்தின் உருவத்தைப் போன்று நீண்டிருந்ததின் காரணமாகவும் நாகசுவரம் என்னும் பெயர் ஏற்பட்டது. இதனுடைய இனிமையான நாதம் காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் எனப்பட்டது.

பல்லாண்டுகளாக திமிரி என்னும் நாகசுவரமே வாசிக்கப்பட்டது. இதன் நீளம் குறைவாக இருக்கும். இதில் சில மாற்றங்களோடு நாகசுவர மேதை டி. என். ராஜரத்தினம் பிள்ளை அறிமுகப்படுத்தியதுதான் தற்போது புழக்கத்தில் உள்ள பாரி நாகசுவரம் ஆகும். திமிரி நாகசுவரத்தை விட பாரி நாகசுவரம் நீளமாக இருப்பதுடன், இசைக் கலைஞர்களால் நீண்ட நேரம் வாசிக்க சுருதி அளவுடன் இருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.

நாகசுரம் ஒரு பண்டைத் தமிழ் இசைக்கருவியாகத் தெரியவில்லை. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களோ அல்லது இடைக்கால இலக்கியங்களோ இந்த இசைக்கருவி தொடர்பான தகவல் எதையும் தரவில்லை. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் வங்கியம் என்னும் இசைக்கருவியுடன் இதனைத் தொடர்புபடுத்தச் சிலர் முயன்ற போதிலும், அது புல்லாங்குழல் போன்ற ஒரு கருவியே என்று பலர் கருதுகிறார்கள். இசைக் கலைஞர்கள் பற்றிக் குறிப்பிடுகின்ற கல்வெட்டுக்களிலும் இது பற்றிய குறிப்புக்களோ அல்லது அதனோடு தொடர்புடைய இசைக் கலைஞர் பற்றிய குறிப்புக்களோ இதுவரை கிடைக்கவில்லை. அத்துடன் இதன் துணை இசைக்கருவியாக விளங்குகின்ற தவிலும் கூட இத்தகவல் மூலங்கள் எதிலும் காணக் கிடைக்கவில்லை.

இதையும் படியுங்கள்:
மூளையை சுறுசுறுப்பாக்கும் ‘வள்ளி கும்மி’ ஆட்டம்!
Nagaswaram

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதசங்கிரகம் என்னும் இசை நூல் துளைக் கருவிகள் பற்றிக் கூறுகின்ற போது, இக்கருவியையும் நாகசுரம் என்ற பெயரில் பட்டியல் இடுகின்றது. இதுவே தற்போதைய நிலையில், கிடைக்கின்ற முதல் வரலாற்றுக் குறிப்பு எனலாம்.

நாதசுவரம் குழல், திமிரு மற்றும் அனசு எனும் மூன்று பாகங்களைக் கொண்டது. இது ஏறத்தாழ கூம்பு வடிவிலான மரமாகும். கீழ் பகுதியிலிருந்து மேல் நோக்கி சிறிது சிறிதாக குறைந்து இவ்வடிவத்தினை இது பெறுகின்றது. மேல் பகுதி வாய் வைத்து ஊதுவதற்கு ஏற்ற உலோக உருண்டை அமையப்பெற்று இருக்கும். பல ஓய்வு நாணல்களும் நாதஸ்வரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். அவற்றுடன் சிறு தந்ததினாலான கூம்பு இருக்கும். இவை நாணலினில் உள்ள எச்சில் மற்றும் தூசு குப்பைகளை நீக்கி சரியான காற்று போகும் அளவுக்கு திருத்த கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றுடன் ஒரு உலோக மணியும் பொருத்தப்பட்டிருக்கும்.

இதையும் படியுங்கள்:
மகா கும்பமேளா 2025: உணவு டெலிவரி ஆப்ஸ் மூலம் 1.5 கோடி மஹாபிரசாதங்கள் ஆர்டர்!
Nagaswaram

பாரம்பரியமாக நாதஸ்வரத்தின் உடல் வன்மரத்தினால் செய்யப்பட்டது. ஆனால் தற்போது மூங்கில், சந்தனமரம், தாமிரம், பித்தளை, கருங்காலி மற்றும் ஐவரி ஆகியவற்றிலும் செய்து பயன்படுத்தப்படுகின்றன. நாதஸ்வரத்தில் ஏழு விரல் துளைகளும், ஐந்து கூடுதல் ஓட்டைகளும் போடப்பட்டிருக்கும். ஐந்து கூடுதல் ஓட்டைகளையும் தேவையான பொழுது பயன்படுத்திக் கொள்ள மெழுகு கொண்டு அடைத்திருப்பர். பான்சூரி, புல்லாங்குழல் போன்று இரண்டரை எல்லை ஓட்டைகளும் போடப்பட்டு இருக்கும்.

நாதசுவரத்தின் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படும். ஜீவவளி என்பதுதான் சீவாளியாகியிருக்கிறது. ஜீவன் என்றால் உயிர். வளி என்றால் காற்று. உடலாகிய நாதஸ்வரத்திற்கு காற்றின் மூலம் சீவாளி உயிர் கொடுக்கிறது. இது ஒரு வகை நாணல் என்ற புல் வகையால் செய்யப்படும். இந்த நாணலைக் ‘கொறுக்கைத் தட்டை’ என்பர். இதனை ஆற்றங்கரையிலிருந்து கொண்டு வந்து காயப்போட்டு ஒரு வருடம் ஆனதும் நெல் வேக வைக்கும் போது, கூட வேக வைத்து, நீராகாரத்தில் ஊற வைத்து மிருதுவாக்கி சுருதிக்கு ஏற்ப அதை வெட்டி சீவாளி தயாரிக்கிப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இரயில்களுக்கு பெயர் வைப்பதில் இத்தனை சுவாரஸ்யங்களா!
Nagaswaram

நாதஸ்வரம் ஒரு இசைக்கருவி ஆகும். இதில் இசை உருவாதற்கு சீவாளி, நாதஸ்வரக் குழலில் அமைந்திருக்கும் துளைகள் காரணமாகின்றன. சீவாளியில் அமைந்திருக்கும் மெல்லிய இடைவெளியில் வாயிலிருந்து காற்று அனுப்பப்படுகிறது. இதனால் சீவாளியினால் அடிப்படை சுரம் உருவாக்கப்படுகிறது. நாதஸ்வரக் குழலில் இருக்கும் துளைகளைப் பயன்படுத்தி, நாதஸ்வர குழலினுள் இருக்கும் காற்றின் அளவு மாற்றியமைக்கப்படுகிறது. இதன் விளைவாக காற்று பலவித சுர, நாத வேறுபாடுகளைக் கொண்ட இசையாக மாறுகிறது.

1955 ஆம் ஆண்டில் நரசிங்கம்பேட்டையைச் சேர்ந்த இரங்கநாத ஆச்சாரி என்ற தச்சுக் கலைஞர் சுத்த மத்திமம் சுவரம் என்பதைக் கண்டுபிடித்து, அதற்கேற்ப நாகசுவர கருவியில் மாற்றங்களைச் செய்து உருவாக்கினார். இந்தப் புதிய இசைக்கருவி இசைக்க எளிதானதாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
உலகின் அதிசய இடங்கள் - செரிண்டிபிடி கண்டுபிடிப்பு : லஸ்காக்ஸ் குகை!
Nagaswaram

நரசிங்கம்பேட்டை நாகசுரமானது ஆச்சா மரங்களைக் கொண்டு செய்யப்படுகிறது. பழைய வீடுகளின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பழைய மரங்களைக் கொண்டு இது செய்யப்படுகிறது. இக்கருவியின் மேல் பகுதியை உளவு என்றும், கீழ்ப்பகுதியை அணசு என்றும் கூறுவர். இரண்டரை அடி நீள மரத்துண்டை வெட்டி, அதை உள்ளே கடைந்து துளையிட்டு, மேலே 12 துளைகளைக் கவனமுடன் இ்ட்டு செய்யப்படுகிறது. முதலில் குழல் பாகமும், பின்னர் அணசு பாகமும் செய்வர். இக்கருவியின் அளவிற்கேற்ப, முகவீணை, திமிரி நாயனம், பாரி நாயனம், இடைப்பாரி நாயனம், மத்திம சுருதி நாயனம் என்ற பெயர்களுடன் வழங்கி வருகின்றனர்.

நரசிங்கம்பேட்டையில் சுமார் 15 குடும்பத்தினர் இதை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 2014 ஆம் ஆண்டு சனவரி 31 அன்று நரசிங்கம்பேட்டை நாகசுரத்திற்கு புவிசார் குறியீடு கேட்டு, தஞ்சாவூர் இசைக்கருவிகள் உற்பத்தி மற்றும் குடிசைத் தொழில் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. பல கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு அதனை ஏற்றுக் கொண்ட இந்திய அரசு 2022 ஆண்டில் இந்த இசைக்கருவிக்கு, புவியியல் சார்ந்த குறியீடு அளித்து அங்கீகரித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com