

பசிபிக் பெருங்கடலின் நடுவே, மனித நடமாட்டமே இல்லாத ஒரு தனிமையான தீவில், வானத்தைப் பார்த்தபடி பிரம்மாண்டமான கற்சிலைகள் நின்றுகொண்டிருக்கின்றன. ஈஸ்டர் தீவு என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் உள்ள சுமார் 900 'மோவாய்' (Moai) சிலைகள் கடந்த 900 ஆண்டுகளாக உள்ளன.
இந்த சிலைகள் சுமார் 80 டன் எடை, 30 அடி உயரமுடையவை. நவீன இயந்திரங்கள் இல்லாத அந்த காலத்தில் மனிதர்கள் எப்படி இவற்றை கிலோமீட்டர் கணக்கில் நகர்த்திச் சென்றார்கள்? இது ஒரு தீர்க்கப்படாத மர்மமாகவே இருந்தது. ஆனால், தற்போது விஞ்ஞானிகள் இதற்கு ஒரு அதிரடியான விடையைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஈஸ்டர் தீவின் பூர்வகுடி மக்களான 'ராப்பா நூயி' மக்களிடம் கேட்டால், அவர்கள் ஒரு சுவாரசியமான பதிலைச் சொல்வார்கள். "சிலைகள் தாங்களாகவே நடந்து சென்றன" என்பதுதான் அந்த பதில்.
ஆரம்பத்தில் விஞ்ஞானிகள் இதை ஒரு கதையாகவே பார்த்தனர். சிலைகளை மரக்கட்டைகள் மீது படுக்க வைத்து உருட்டிச் சென்றிருக்கலாம் என்று வாதிட்டனர். ஆனால், அங்குள்ள மலைப்பாங்கான பாதைகளில் இது சாத்தியமில்லை என்பது நிரூபணமானது.
சமீபத்தில் பிங்காம்டன் பல்கலைக்கழகம் மற்றும் அரிசோனா பல்கலைக்கழகம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், அந்த சிலைகள் உண்மையிலேயே நடந்து தான் சென்றன என்பதை 3D மாடலிங் மூலம் நிரூபித்துள்ளனர்.
இதை விஞ்ஞானிகள் 'ராக்கிங்' நுட்பம் என்றழைக்கின்றனர். சிலைகளை செங்குத்தாக நிறுத்தி, அவற்றின் அடிப்பகுதியைச் சற்று வளைவாகச் செதுக்கியுள்ளனர். சிலைகளின் கழுத்துப் பகுதியில் நீண்ட கயிறுகளைக் கட்டி, இருபுறமும் ஆட்கள் நின்று இழுத்துள்ளனர்.
ஒரு பக்கம் இழுக்கும்போது சிலை ஒருபுறம் சாயும், பின் மறுபுறம் இழுக்கும்போது அடுத்த பக்கம் சாயும்.
இப்படி இடவலமாகச் சிலைய ஆட்டும்போது, அது மெல்ல மெல்ல முன்னோக்கி நகரத் தொடங்கும். நாம் ஒரு பெரிய பீரோவை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தப் பயன்படுத்தும் அதே நுட்பம்தான் இது.
சிலைகள் எப்படி நகர்ந்தன என்பது ஒரு மர்மம் என்றால், அவை ஏன் அந்த குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டன என்பது மற்றொரு மர்மம். இதற்கும் விஞ்ஞானிகள் ஒரு விடையைக் கண்டுபிடித்துள்ளனர்.
தீவு முழுவதும் ஆய்வு செய்தபோது, எங்கு எங்கு பிரம்மாண்டமான சிலைகள் உள்ளனவோ, அங்கெல்லாம் நிலத்தடி நன்னீர் ஊற்றுகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். தீவைச் சுற்றியுள்ள கடல் நீர் உப்பாக இருந்தாலும், நிலத்தடிநீர் கிடைக்கும் இடங்களை அடையாளம் காட்டவே இந்தச் சிலைகள் நிறுவப்பட்டிருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் சில ஆய்வுகள், இந்தச் சிலைகள் வைக்கப்பட்ட இடத்தைச் சுற்றியுள்ள மண் மிகவும் வளமாக இருப்பதை உறுதி செய்துள்ளன. சிலைகளைச் செதுக்கும்போது வெளிவந்த எரிமலை பாறைத் துகள்கள் மண்ணில் கலந்து, அங்கு பயிர்கள் செழித்து வளர உதவியுள்ளன. அதாவது, இந்தச் சிலைகள் அந்த மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் மற்றும் குடிநீருக்கான வழிகாட்டிகளாகவும் இருந்துள்ளன என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பழங்கால மனிதர்கள் தங்களின் அறிவாற்றலால் கடினமான காரியங்களையும் எவ்வளவு எளிமையாகச் செய்துள்ளனர் என்பதற்கு ஈஸ்டர் தீவு சிலைகளே சிறந்த உதாரணமாக உள்ளன.