
இளவட்டக்கல் தூக்கும் போட்டி, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. விழாக் காலங்களில் இந்தப் போட்டி நடைபெறும். குறிப்பிட்ட கல்லைத் தலைக்குமேல் தூக்கிக் காட்டும் இளைஞனுக்குத் தம் பெண்ணை மணம் முடித்துத் தருவது தமிழரின் ஒரு சாராரிடையே காணப்படும் குலவழக்கமாகும். வழுப்பான, இளவட்டக்கல்லை தூக்குவது, மாப்பிள்ளையின் ஆண்மையை அறிய பழங்கால பாரம்பரிய கிராமிய விளையாட்டாகும். காளையை அடக்கியும், இளவட்டக் கல்லை தூக்கியும் சாகசம் புரிந்தவர்களையே அந்த கால மங்கையர்களும், தங்களின் கணவனாக வர வேண்டும் என்று விரும்பி இருக்கிறார்கள்.
பழங்கால தமிழர்கள், பலவிதமான வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம், மஞ்சுவிரட்டு, உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளின் மூலமாக தங்களின் திறமையை வளர்த்தெடுத்தனர். அதில் ஒன்றுதான் ‘இளவட்டக் கல் தூக்கும் போட்டி’. ஊரின் நடுவில் உள்ள மைதானத்தில் வைக்கப்பட்டு இருக்கும் இளவட்டக்கல்லை, ‘திருமணக் கல்’, ‘மாப்பிள்ளை கல்’ என்று பல்வேறு பெயர்களில் அழைப்பார்கள். இந்த கல் வழுவழுப்பாக எந்தப் பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத முழு உருண்டை வடிவில் இருக்கும். இளவட்டக்கல் பொதுவாக சுமார் 45, 60, 80, 100 மற்றும் 129 கிலோ எடை கொண்டது.
பிற்காலத்தில் இந்த முறை வழக்கத்தில் இல்லாமல் போனாலும், ஓரிரு இடங்களில் இன்றும் திருமணத்திற்கு என்று இல்லாமல், சாதாரண ஒரு வீர விளையாட்டாக இந்தப் போட்டி நடக்கத்தான் செய்கிறது. தைத்திருநாளான பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இளவட்டக்கல் போட்டி, தமிழகத்தின் தென்மாவட்டங்களான மதுரை, தேனி, சிவகங்கை, நெல்லை ஆகிய பகுதிகளில் விளையாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட போட்டிகள் மட்டுமின்றி இளவட்டக்கல் தூக்குதல், உரல் தூக்குதல், உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகளும் நடத்தப்படுவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தென்மாவட்டங்களில் தற்போது இளவட்டக் கல் தூக்கும் போட்டிகளில் அதிக ஆர்வமுடன் இளைஞர்கள் பங்கேற்று சாகசம் புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் சில ஆண்டுகளாக ஆண்களுக்கு நாங்களும் சலித்தவர்கள் இல்லை என்பதை உணர்த்து வகையில் பெண்களும் இளவட்டக்கல் தூக்கி சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆண்களுக்கு போட்டியாக உடல் பலத்தை பொருட்படுத்தாமல் அசாத்திய மன பலத்தையே துணையாக கொண்டு இளவட்டக்கல்லை தூக்கி அசத்தும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்களுக்கு 55, 60, 98,114 மற்றும்129 கிலோ எடையிலான இளவட்டக்கல் தூக்கும் போட்டிகளும், பெண்களுக்கு 55 கிலோ இளவட்டக்கல் தூக்கும் போட்டியும், உரல் தூக்கும் போட்டியும் நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற பெண்கள் ஆண்களுக்கு இணையாக இளவட்டக்கல், உரலை தூக்கியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
நெல்லை மாவட்டம் வடலிவிளை கிராமத்தில் ஆண்டுதோறும் இளவட்டக்கல் தூக்கும் போட்டியும், உரல் தூக்கும் போட்டியும் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் ஆண்களுக்கு இணையாக இளவட்டக்கல், உரலை தூக்கியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இளவட்டக்கல் மற்றும் உரல் தூக்கும் போட்டிகளில் ராஜகுமாரி என்ற பெண்மணி முதலிடத்தையும், தங்க புஷ்பம் 2-வது இடத்தையம் பிடித்து அசத்தி உள்ளனர்.
பெண்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் கடினமாக தோன்றும் எந்த காரியத்தையும் எளிமையாக செய்து முடித்துவிடலாம் என்றும் ஆண்களுக்கு பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் பெண்களும் இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் சாதனை புரிந்து வருகின்றனர்.
வலிமை மிக்க ஆண்களால்தான் இளவட்டக்கல்லை தூக்க முடியும் என்று சமூகத்தில் வேரூன்றி இருந்த எண்ணத்தை மாற்றி பெண்களாலும் அந்தக்கல்லை தூக்க முடியும் என்பதை இந்த போட்டிகளில் வெற்றி வாகை சூட்டியதன் மூலம் பெண்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.