

கலைக்கு வயதின் எல்லையோ, பருவங்களின் வரம்போ கிடையாது. எனினும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைக் காலத்திலிருந்தோ, 5 -17 வயதுக்கு உட்பட்ட சிறுவப் பருவத்திலிருந்தோ கற்றுக்கொண்டால் அதிக காலம் கற்க வாய்ப்பு இருக்கும். திறன் மேம்பாடும் இயல்பாகக் கூடிவரும்.
கல்விக்கு இந்த வயது வரம்புகளும், குழந்தைக் காலத்திலிருந்தே கற்பதும் மிக அவசியமானவை. கலைக்கும் அப்படி வாய்க்குமானால் நல்லது. எனினும், கலை – கைவினை ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளக் குழந்தைக் காலம் அல்லது சிறுவப் பருவத்திலிருந்தே கற்றல் கட்டாயமோ அவசியமோ அல்ல. 18 வயதுக்கு மேற்பட்ட இளமைப் பருவத்திலோ, நடுத்தர வயதிலோகூடக் கற்கலாம்.
அத்தகைய சாதனையைத் தன் வாழ்நாளில் நிகழ்த்திக் காட்டியவர்தான் அமெரிக்காவின் முன்னோடி நாட்டுப்புற ஓவியரான ‘கிராண்ட்மா மோசஸ்’ (Grandma Moses) என்றழைக்கப்படும் அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ் (Anna Mary Robertson Moses).
அன்னா மேரி, அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள வாஷிங்டன் கவுண்டி / மாவட்டத்தில் (Washington County) அமைந்த கிரீன்விச் (Greenwich) என்னும் கிராமப்புறப் பகுதியில் 1860-இல் பிறந்தார்.
தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்துப் பெண்ணாக, பண்ணை வேலைகளையும் தையல் கலைகளையும் செய்தே கழித்தார். தன் 78-ஆவது வயதில், மூட்டு வாத நோய் காரணமாக எம்ப்ராய்டரி ஊசியைப் பிடிக்க முடியாமல் போனபோதுதான்,
அவர் தூரிகையைக் கையில் எடுத்தார். 1961-இல் தன் 101-ஆவது வயதில் மறைந்தது வரையிலும் அவர் வரைந்து தள்ளிய 'நைவ் ஆர்ட்' (Naïve Art) வகை ஓவியங்கள், உலகக் கலை வரலாற்றில் அவருக்கு என்று ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுத் தந்தன.
'நைவ் ஆர்ட்' என்றால் என்ன?
நைவ் ஆர்ட் (Naïve Art) என்பதன் நேரடிப் பொருள் ‘அப்பாவித்தனமான கலை’ அல்லது ‘அனுபவமற்ற கலை’ என்பதாகும். ஃப்ரெஞ்ச் மொழியில் 'Naïve' என்ற சொல்லுக்கு 'அப்பாவி' (Innocent) அல்லது 'முறையான பயிற்சி பெறாத' என்று பொருள். நைவ் ஆர்ட் என்பது எவ்வித முறையான ஓவியப் பயிற்சியும் (Formal training) பெறாத, அகாடமிக் விதிகளைக் கற்காத கலைஞர்களால் உருவாக்கப்படும் கலை வடிவத்தைக் குறிக்கிறது.
இதன் முக்கிய அம்சங்கள்:
· முறையான பயிற்சி இல்லாமை: இக்கலைஞர்கள் உடற்கூறியல் (Anatomy), ஒளியமைப்பு (Lighting) அல்லது முப்பரிமாணக் காட்சி (Perspective) போன்ற ஓவியக் கலைக்கான பாரம்பரிய விதிகளைப் பின்பற்றுவதில்லை.
· எளிமையான வடிவம்: குழந்தைகள் வரைவதைப் போன்ற தன்னிச்சையான மற்றும் எளிமையான பாணியைக் கொண்டிருக்கும்.
· அடர்ந்த நிறங்கள்: வண்ணக் கலவை விதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் பிரகாசமான, அடர்ந்த வண்ணங்களை நேரடியாகப் பயன்படுத்துவார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் கலை இலக்கணங்கள், விதிகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளாமல், தங்களின் கற்பனையையும் உணர்வுகளையும் இயல்பாகவும், குழந்தைத்தனமான வெகுளித்தன்மையுடனும் வெளிப்படுத்துவதே நைவ் ஆர்ட் ஆகும்.
நுண்கலை வட்டாரத்தின் பொது விதியும் மோசஸின் விதிவிலக்கும்
நைவ் ஆர்ட்டுக்கு நுண்கலை (Fine Arts) வட்டாரங்களில் உயரிய மதிப்பு இருக்காது. அகாடமிக் ரீதியான கோட்பாடுகள், துல்லியமான கோணங்கள், உடற்கூறியல் விதிகள் இல்லாததால், இத்தகைய ஓவியங்கள் பொதுவாக நாட்டுப்புற ஓவியங்கள், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றுக்கு உரிய சாதாரண மதிப்பையே பெறும்.
சீரிய நுண்கலை ஓவியர்கள், விமர்சகர்கள், கலை ஆர்வலர்கள் ஆகிய தரப்பினர் இவற்றைப் பொருட்படுத்த மாட்டார்கள். இவை பெரும்பாலும் உயர் கலைத்தரம் கொண்ட கலைக்கூடங்களால் அங்கீகரிக்கப் படுவதில்லை; உயர்ந்த விலைக்கு ஏலம் போவதும் அரிது.
ஆனால் விதிவிலக்காக சில நைவ் ஆர்ட் மேதைகளின் ஓவியங்களும் பிரபல நுண்கலை ஓவியர்கள் மற்றும் நவீன ஓவியங்களின் ஓவியங்கள் அளவுக்குப் பிரபலமும் விலை மதிப்பும் பெற்றுள்ளன.
நவீன நைவ் கலை இயக்கத்தின் முன்னோடியான ஹென்றி ரூசோ (Henri Rousseau - ஃப்ரான்ஸ்), ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த நிகோ பிரோஸ்மானி (Niko Pirosmani), துப்புரவுப் பணியாளராக வேலை செய்துகொண்டே ஓவியங்களை வரைந்து வந்த செராஃபின் லூயிஸ் (Séraphine Louis - ஃப்ரான்ஸ்), கடலில் மீனவராகவும், கப்பல் தொழிலாளியாகவும் இருந்த ஆல்ஃபிரட் வாலிஸ் (Alfred Wallis - பிரிட்டன்) போன்றவர்கள் இதில் குறிப்பிடத் தக்கவர்கள். இதில் ரூசோவுக்கு அடுத்தபடியாக இடம்பெறக்கூடியவர் கிராண்ட்மா மோசஸ்.
கிராண்ட்மா மோசஸின் ஓவியங்கள் பொது நடைமுறையை மீறி நுண்கலை உலகத்தின் கவனத்தையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பரவலான வரவேற்பையும் பெற்றன; சில படைப்புகள் உயர் ஏல மதிப்பையும் பெற்றன. இன்றும் கலை வரலாற்று அறிஞர்களால் ஆழமாகப் பேசப்படும் அளவிற்கு அவை காலத்தைக் கடந்து நிற்கின்றன.
நுண்கலை உலகைக் கவர்ந்த காரண காரியங்கள்
கிராண்ட்மாவின் நைவ் ஓவியப் பாணி, நுண்கலை உலகில் பிரசித்தியும் உயர் மதிப்பும் பெற்றதன் பின்னணியில் மிக முக்கியமான காரண காரியங்கள் உள்ளன. 20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமெரிக்கா அதிவேகத் தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் உலகப் போர்களின் தீவிரமான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தது.
அக்காலகட்டத்தின் நுண்கலை உலகம் பெரும்பாலும் சிக்கலான, விவரிக்க முடியாத நவீனத்துவ (Modernism) மற்றும் பொழிப்புக் கலைகளில் (Abstract Art) மூழ்கியிருந்தது.
அத்தகைய சூழலில், கிராண்ட்மா மோசஸின் ஓவியங்கள் மக்களுக்குத் தேவையான பேரமைதியையும், இயல்பான மனிதப் பிணைப்பையும், கிராமியப் பழமையின் இதமான நினைவுகளையும் கடத்தின.
நுண்கலை விதிகளின் கண்டிப்பான சட்டகங்களுக்குள் அடங்காத இவரது போலித்தனமற்ற, தூய்மையான வண்ண வெளிப்பாடு பார்வையாளர்களின் மனதில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியது. எளிய கோடுகளாலும் பிரகாசமான முதன்மை வண்ணங்களாலும் கிராமப்புற வாழ்க்கையை உயிர்ப்புடன் கொண்டுவந்த இந்த 'நேரடித் தன்மை'(Authenticity) தான், நுண்கலை அமைப்புகளையும் வியக்க வைத்து இவரை ஏற்க வைத்தது.
நாட்டுப்புற மற்றும் விவசாய வாழ்வியலின் பதிவு
பிற்பாடு கிராண்ட்மா மோசஸ் எனப்பட்ட அன்னா மேரி, தனது இளமையில் திருமணத்திற்குப் பிறகு சில காலம் வெர்ஜீனியாவில் வாழ்ந்தார். பின்னர் நியூயார்க் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் உள்ள ஈகிள் பிரிட்ஜ் (Eagle Bridge) என்ற கிராமப்புறப் பண்ணை நிலத்திற்கு (Mt. Nebo Farm) வந்து நிலைபெற்றார்.
இவரது பெரும்பாலான ஓவியங்களில் காட்சிப் படுத்தப்பட்ட நிலப்பரப்புகள், அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்களான (Upstate New York & Vermont) நியூயார்க் மற்றும் அதை ஒட்டியுள்ள 'வெர்மாண்ட்' மாநிலங்களின் எல்லைப்புற கிராமிய அழகு, அங்குள்ள ஹூசிக் பள்ளத்தாக்கு (Hoosick Valley) மற்றும் பண்ணை நிலங்களாகும்
கிராண்ட்மா பெரும்பாலும் தனது பண்ணை நிலக்காட்சிகளையும், பண்ணை விலங்குகளையும், கிராமிய மக்களின் அன்றாட வாழ்வையும் வரைந்தார். இவரது ஓவியங்கள் ஒற்றைக் காட்சியை மட்டும் காட்டாமல், பல மனிதர்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு பணிகளில் ஈடுபடுகிற கதை சொல்லும் பாணியைக் (Narrative Style) கொண்டிருந்தன.
குறிப்பாக, மேப்பிள் மரத்திலிருந்து சாறு எடுத்துச் சர்க்கரை தயாரிக்கும் 'சுகரிங் ஆஃப்' (Sugaring Off), ஆப்பிள் அறுவடை, சோளம் சேகரித்தல், பனிச்சறுக்கு விளையாட்டுகள் என உழைப்பும் மகிழ்ச்சியும் கலந்த கிராமிய வாழ்வியல் இவரது ஓவியங்களில் உயிர்பெற்றது. அவற்றில் உள்ள பசுமை, நாட்டுப்புற அழகுகள், கிராமிய உயிரோட்டம் மற்றும் இதமான உணர்வு ஆகியவை உலகின் எந்த நாட்டுக் கலை ஆர்வலர்களையும் சுலபமாக ஈர்க்கக்கூடிய வல்லமை கொண்டவை.
உயர் விலைமதிப்பு
கிராண்ட்மா மோசஸ் 1,500-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரைந்தார். ஆரம்பத்தில் அவை சில டாலர்களுக்கு விற்கப்பட்டன. பிறகு படிப்படியாக பிரபலம் அடைந்து, உலகப் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டு, அதிக விலை பெறும் ஓவியரானார். ஹால்மார்க் நிறுவனம் அவரது ஓவியங்களை வாழ்த்து அட்டைகளில் அச்சிட உரிமம் பெற்றது; இது அவரை அமெரிக்க மக்களிடையே மிகப் பிரபலமாக்கியது.
அவரது படைப்புகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சுமார் 150 தனி கண்காட்சிகள், 100-க்கும் மேற்பட்ட கூட்டுக் கண்காட்சிகளில் இடம்பெற்றன என்பது குறிப்பிடத் தக்கது.
1943-இல் இவர் வரைந்த Sugaring Off என்ற ஓவியம், 2006-ஆம் ஆண்டில் கிறிஸ்டீஸ் ஏலத்தில் 1.36 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையானது அடிக்கோடிட்டுக் குறிப்பிடத்தக்கது. சாதாரண நாட்டுப்புறக் கலை வகையைச் சேர்ந்த ஒரு ஓவியம் இத்தனை பெரிய தொகையைப் பெற்றது நுண்கலை உலகையே வியப்பில் ஆழ்த்திய நிகழ்வாகும்.