

நேபாளத்தின் போகாரா (Pokhara) நகரில் அமைந்துள்ள குப்தேஸ்வரர் மகாதேவ் குகைக் கோவில் ஆன்மீக ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் பல்வேறு அற்புதங்களைக் கொண்ட புகழ்பெற்ற தலமாகும். உள்ளூர் மக்களால் இது 'பாதாள லோகம்" என்று அழைக்கப்படுகிறது.
சுயம்பு சிவலிங்கம்:
குப்தேஸ்வரர் என்ற சொல்லுக்கு மறைந்திருக்கும் கடவுள் என்று பொருள். பல நூற்றாண்டுகளாக இந்த குகைக்குள் மறைந்திருந்ததால் இப்பெயர் பெற்றது. சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிக்கின்றனர்.
16ஆம் நூற்றாண்டில் புற்களை செதுக்கச் சென்ற உள்ளூர் மக்களால் இந்த குகை தற்செயலாக கண்டறியப்பட்டது. குகையின் ஆழத்தில் இயற்கையாகவே உருவான பிரம்மாண்டமான சுயம்பு சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கம் சுமார் 5,000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. இந்த லிங்கத்தை ஒரு பசு தன் மடியில் இருந்து பால் சொரிந்து காப்பது போன்ற இயற்கையான பாறை அமைப்பு இங்குள்ளது.
குகையின் நுழைவாயிலில் அனந்த சயன கோலத்தில் வீற்றிருக்கும் மகாவிஷ்ணுவின் பெரிய சிலையும், உள்ளே சிவன், பார்வதி, சரஸ்வதி, நாகேஸ்வரர் சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன.
நேபாளியில் இது பாலு துலோ (கரடி குகை) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த குகையின் பிரதான நுழைவாயில் 1991 ஆம் ஆண்டில் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டது. அதன் பிறகே இது முறையாக வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது.
குகை அமைப்பு:
இந்த குகைக் கடல் மட்டத்திலிருந்து 772 மீட்டர் கீழே அமைந்துள்ளது. வசதியான சுழல் படிக்கட்டு இந்த குகையின் உட்பகுதிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. குகையின் நுழைவாயிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஒளிரும் சுண்ணாம்புப் பாறைகள், வினோதமான அமைப்புகள் மற்றும் ஒரு குறுகிய நீளமான திறப்பு வழியாக அற்புதமான அழகைக் கொண்ட டேவிஸ் நீர்வீழ்ச்சியைக் காணலாம்.
குகையின் நுழைவாயிலுக்கு அருகில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவின் பிரம்மாண்டமான சிலை செதுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் மிக நீளமான குகை:
இந்த நிலத்தடி குகை அமைப்பு சுமார் 2,950 மீட்டர் நீளம் கொண்டது. இது நேபாளம் மற்றும் தெற்காசியாவின் மிக நீளமான குகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எனினும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, குகையின் ஒரு குறிப்பிட்ட பகுதி (சுமார் 40 முதல் 140 மீட்டர் வரை) மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
பாதாள நீர்வீழ்ச்சி (டேவிஸ்(Davis) நீர்வீழ்ச்சி):
இக்கோவிலின் மிகப்பெரிய வியப்பு என்னவெனில் குகைக்கு நேர் எதிரே இருக்கும் புகழ்பெற்ற 'டேவிஸ் நீர்வீழ்ச்சியின்' (Patale Chhango-பாதாள சாங்கோ) நீரானது, பூமியில் மறைந்து இந்தக் குகையின் உட்பகுதி வழியாகத்தான் பாய்ந்தோடுகிறது.
குகையின் இரண்டாவது அறைக்குச் செல்லும் பொழுது அந்த நீர்வீழ்ச்சி குகைக்குள் பிரம்மாண்டமாக விழுவதைக் கேட்கவும், பார்க்கவும் முடியும். மழைக் காலங்களில் நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் இந்த இரண்டாவது பகுதிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படும்.
இந்தக் கோவிலுக்குச் செல்ல நவீன வசதிகளுடன் கூடிய வட்ட வடிவப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கீழே செல்லச் செல்ல குகையின் உட்பகுதி இருட்டாகவும், ஈரப்பதமாகவும், குளுமையாகவும் மாறும். சில இடங்களில் தலையைக் குனிந்து குறுகிய பாறை இடுக்குகளில் நடந்து செல்லும் பொழுது நிஜமாகவே பாதாள உலகிற்குள் செல்வது போன்ற சிலிர்ப்பான அனுபவம் ஏற்படும்.
குகைக்குள் விளக்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், மூலவர் இருக்கும் முதன்மை சன்னிதானத்தில் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குகையின் தரைப்பகுதி எப்பொழுதும் வழுக்கலாகவும், ஈரமாகவும் இருக்கும் என்பதால் இங்கு செல்லும்பொழுது வழுக்காத காலணிகளை அணிந்து செல்வது அவசியமாகும்.
செல்ல சிறந்த நேரம்:
குகையின் காலநிலை வெளிப்புற வானிலையை சார்ந்து இருப்பதில்லை. உள்ளே வெப்பநிலை எப்போதும் சீராக இதமாக இருக்கும். இருப்பினும் செல்லச் சிறந்த நேரம் வசந்த காலத்தின் பிற்பகுதி (மார்ச் முதல் ஜூன் பிற்பகுதி வரை) மற்றும் இலையுதிர் காலத்தின் ஆரம்பம் (செப்டம்பர் முதல் நவம்பர் வரை) சுற்றிப் பார்க்க வானிலை ஏற்றதாக இருக்கும்.
தினமும் காலை 6 மணி முதல் மாலை 6:00 மணி வரை மக்களின் பார்வைக்காக திறந்திருக்கும்.
எப்படி செல்வது?
காத்மண்டு விமான நிலையத்திலிருந்து பொக்காரா விமான நிலையத்திற்கு உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன் பயண நேரம் 25 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே. சாலை வழியாக காத்மண்டிலிருந்து பொக்காராவிற்கு சொகுசு சுற்றுலா பேருந்துகள் அல்லது கார்கள் கிடைக்கின்றன. இது சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. மலைப்பாதை என்பதால் பயணிக்க 6-7 மணி நேரம் வரை ஆகும்.