கேட்ட வரம் தரும் ஆர். குன்னத்தூர் வைகுண்ட பெருமாள்! இதுவரை அறியாத ஆன்மீக தகவல்கள்!

பல்லவர் கால வீரக்கல் முதல் அபூர்வ ஐம்பொன் சிலைகள் வரை இங்கு நிறைந்திருக்கும் வரலாற்று அதிசயங்கள்!
வைகுண்ட பெருமாள் - Vaikunda Perumal Temple
வைகுண்ட பெருமாள் - Vaikunda Perumal Temple
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

மூலவர் ஸ்ரீ வைகுண்ட பெருமாள்

தாயார் ஸ்ரீதேவி பூதேவி

மூலவர் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் 6 அடி உயரத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். ஸ்ரீதேவியும் பூதேவியும் இருபுறமும் நின்ற கோலத்தில் உள்ளனர். 1300 ஆண்டுகள் பழமையான இக்கோவில் மூல கட்டமைப்பு சோழர் காலத்தைச் சேர்ந்தது. மேலும் பிற்கால பங்களிப்புகள் விஜயநகர நாயக்கர்களால் வழங்கப்பட்டுள்ளன. இங்கு 16 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையிலான நாயக்கர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

கோவில் சிறப்புகள்:

இங்குள்ள உற்சவமூர்த்தி சுமார் 1300 ஆண்டுகள் பழமையானவை. ரங்க மண்டபத்தில் விஷ்வக்சேனர், சுதர்சனர், நம்மாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் மற்றும் ராமானுஜர் ஆகியோரின் திருவுருவச் சிலைகள் உள்ளன. இந்தச் சிலைகளில் பெரும்பாலான ஐம்பொன் மற்றும் உற்சவ சிலைகள் பூமியைத் தோண்டும் பொழுது கண்டெடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்குவதற்காகவே தனியாக மடப்பள்ளியும், கோவிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு கோசாலையும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.

கல்லால் ஆன துஜஸ்தம்பம் உள்ள இக்கோவிலில் ராஜகோபுரம் கிடையாது. மகா மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு தூணிலும் அஷ்டலட்சுமிகளின் வண்ணச் சிலைகள் காணப்படுகின்றன.

கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் காட்சி தரும் வைகுண்டப் பெருமாள் நான்கு திருக்கரங்களுடன், இரண்டு கைகளில் சங்கு சக்கரத்தை ஏந்தியபடி வலது முன் கை அபய ஹஸ்த கோலத்திலும், இடது முன்கை இடது தொடையிலும் அமைந்த நிலையில் 6 அடி உயரத்தில் அமர்ந்து காட்சி தருகிறார்.

இதையும் படியுங்கள்:
கும்பகோணம் வளையப்பேட்டை ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில்: வியாசராஜர் அனுமன் அற்புதங்கள்!
வைகுண்ட பெருமாள் - Vaikunda Perumal Temple

இக்கோவிலில் மகாவிஷ்ணுவை வழிபடுவது என்பது வைகுண்டத்தில் வழிபடுவதற்கு சமம் என்றும், அத்துடன் இக்கோவிலில் வழிபடுபவர்களுக்கு மகாவிஷ்ணு மோட்சத்தை அளிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பக்தர்கள் குழந்தை வரம் வேண்டியும், திருமணத் தடைகள் நீங்கவும் இங்குள்ள வைகுண்டப் பெருமாளையும் தாயார் கமலவல்லியையும் வேண்டிக் கொள்கின்றனர்.

கிழக்கு நோக்கி அமைந்த இக்கோவிலில் தீபஸ்தம்பம், பலிபீடம், துஜஸ்தம்பம் மற்றும் கருடன் ஆகியவை உள்ளன. அவற்றுடன் பலிபீடத்தின் முன்பாக, தீப ஸ்தம்பத்திற்கு நேர் எதிரே வீரக்கல்லும், திருவழிக்கல்லும் எழுப்பப்பட்டுள்ளன. கல்வெட்டுடன் கூடிய இந்த 6ஆம் நூற்றாண்டு பல்லவ கால வீரக்கல் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு முன்பாக நிறுவப்பட்டுள்ளது.

இது 105 சென்டிமீட்டர் உயரமும், 67 சென்டிமீட்டர் அகலமும் கொண்டது. இந்த வீரக்கல்லில், வீரன் பாரதகட்டி தனது இடது காலை மடித்து நின்ற கோலத்தில் காணப்படுகிறார். அவருக்கு நீளமான காது மடல்கள் உள்ளன. மேலும் அவர் இடுப்புக்கு கீழே அரை ஆடை அணிந்து, வலது கையில் ஒரு கட்டரையும் இடது கையில் ஒரு வில்லையும் பிடித்துக்கொண்டு காணப்படுகிறார்.

வைகுண்ட பெருமாள் - Vaikunda Perumal Temple
வைகுண்ட பெருமாள் - Vaikunda Perumal Temple

கட்டரை பிடித்திருக்கும் இந்த பாணி, 6ஆம் நூற்றாண்டில் செங்கம் பகுதிகளில் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் காலத்தில் கண்டெடுக்கப்பட்ட வீரகற்களை ஒத்திருக்கிறது. நவரூரை எரித்ததற்காக, கங்க மன்னனுடன் வந்த மற்றொரு மன்னனுடன் நடந்த சண்டையின்பொழுது கண்ணு பொன்னாரின் மகன் பரதகட்டி கொல்லப்பட்டதாக அந்த கல்வெட்டு பதிவு செய்கிறது.

2008 ஆம் ஆண்டு வரை சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவில் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் மற்றும் திருக்கோவிலூர் ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் 2017ல் புனரமைக்கப்பட்டு மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட்டது.

முக்கிய திருவிழாக்கள்:

வழக்கமான பூஜைகள் மட்டுமின்றி வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, புரட்டாசி மற்றும் மார்கழி சனிக்கிழமைகள் போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், மாசி மகம் போன்றவை இங்கு முக்கிய திருவிழாக்களாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

கோவில் காலை 6:00 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஈரோட்டில் அமர்ந்த கோலத்தில் அருளும் லட்சுமி நாராயணர்: பிரிந்த தம்பதியரை சேர்க்கும் அதிசயம்!
வைகுண்ட பெருமாள் - Vaikunda Perumal Temple

எங்குள்ளது?

ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோவில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் உள்ள ஆர். குன்னத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. போளூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருவண்ணா மலையிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும், போளூரிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com