
துருக்கியின் தென்கிழக்கு அனதோலியா பிரதேசத்தில் கோபெக்கிலி தெப்பே (Göbekli Tepe) என்கிற கற்காலத் தொல்பொருள் தளம் ஒன்று இருக்கிறது. இத்தளமானது, துருக்கியின், சான்லியூர்பா மாகாணத்தில் உள்ள ஓரென்சிக் நகரத்திற்கு வடகிழக்கே 12 கி.மீ மீட்டர் தொலைவில், 15 மீட்டர் உயரமும், 300 மீட்டர் சுற்றவளவும் கூடிய கோபெக்கிலி தெப்பே, கடல் மட்டத்திலிருந்து 760 மீட்டர் உயரத்தில் உள்ளது.
கோபெக்கிலி தெப்பே என்றால் துருக்கி மொழியில் பெருவயிறு மலை என்று பொருள். மட்பாண்டத்திற்கு முந்தையப் புதிய கற்காலத்தில், அதாவது கி.மு. 10,000 முதல் கி.மு. 8,000 வரையிலான காலத்தில் அப்பகுதி மக்களின் சமூக, சமயச் சடங்குகளுக்கான இடமாக விளங்கியது. பெருவயிறு மலைத் தொல்லியல் மேட்டின் முதல் கட்டத்தில் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) காலத்தில், உலகின் முதல் பெருங்கற்காலத்திய வட்ட வடிவக் கற்தூண்கள் ஆங்கில எழுத்திலான T வடிவத்தில் நிறுவப்பட்டிருந்தது அகழ்வாய்வுவில் கண்டுபிடிக்கப்பட்டது.
பெருவயிறு மலை தொல்லியல் களத்தில் கிடைத்த 200 கற்தூண்களில், 20 கற்தூண்கள் ஒவ்வொன்றும் 6 மீட்டர் உயரமும், 10 டன் எடையும் கொண்டுள்ளது. இக்கற்தூண்கள் ஒவ்வொன்றும் படுகைப்பாறைகளில் பொருத்தப்பட்டுள்ளது.
பெருவயிறு மலையில் இரண்டாம் காலக் கட்டமானது மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலமாகும். இக்காலத்தில் இங்கு நிறுவப்பட்டிருந்த மெருகூட்டப்பட்ட சிறு சுண்ணாம்புக்கல் தூண்களால் நிறுவப்பட்ட அறைகளும், தரை தளங்களும் பின்னர் சிதிலமடைந்தது. பெருவயிறு மலையின் தொல்லிய மேட்டை முதலில் 1996 ஆம் ஆண்டில் ஜெர்மானியத் தொல்லியல் அறிஞர்கள் அகழ்வாய்வு செய்தனர்.
உர்பா நகருக்கு அருகிலுள்ள சுண்ணாம்பு பீடபூமியின் மேல் 'கோபெக்லி டெபே' என்று துருக்கியில் அழைக்கப்படும் மலை உச்சியில், 20-க்கும் மேற்பட்ட கல் வட்ட அடைப்புகளைக் கண்டுபிடித்தார். அவற்றில் மிகப்பெரியது 20 மீ விட்டம் கொண்டதாக இருந்தது. அதன் மையத்தில் 5.5 மீ உயரமுள்ள இரண்டு செதுக்கப்பட்ட தூண்கள் நின்று கொண்டிருந்தன. செதுக்கப்பட்ட கல் தூண்கள் கைகள் கட்டப்பட்ட மனித உருவத்தைக் கொண்டிருந்தன. அவை 10 டன் வரை எடை கொண்டவை. அது விலங்குகள் பழக்கப்படுத்தப்படாத காலம். பாண்டங்கள் கண்டுபிடிக்கப்படாத, உலோகக் கருவிகள் இல்லாத காலம்.
அப்படியொரு காலத்தில் இத்தகைய பிரமாண்டமான கட்டுமானத்தை உருவாக்குவது மக்களுக்கு மிகப்பெரிய, தொழில்நுட்ப ரீதியில் சவாலாக இருந்திருக்க வேண்டும்.
இத்தொல்லியல் களத்தில், கற்தூணில் எருது, நரி மற்றும் கொக்கின் சிற்பம் இடம் பெற்றிருக்கிறது கண்டறியப்பட்டது. இக்களத்தில் புடைப்புச் சிற்பம், இரையைப் பிடிக்க இருக்கும் விலங்கின் சிற்பம், காட்டுப்பன்றியின் சிலை போன்றவை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பதிவேட்டில் கோபெக்லி டெபே சேர்க்கப்பட்டது. மேலும், துருக்கிய சுற்றுலாத்துறை 2019 ஆம் ஆண்டை 'கோபெக்லி டெபே ஆண்டு' என்று அறிவித்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.