
இத்தாலியில் உள்ள கம்பேனியாவின் தலைநகரம், பழம் பெரும் நகரமான நேபிள்ஸ். புகழ் பெற்ற கவிஞனான கதே, “நேபிள்ஸைப் பார்த்து விட்டுச் செத்துப் போ” என்றான். ஏனெனில் அதற்குப் பின்னர் உலகில் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை என்பது அவனது அறிவுரை!
அப்படிப்பட்ட நேபிள்ஸின் நகரின் கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது உலகின் அதிபயங்கரமான எரிமலையான மவுண்ட் வெசுவியஸ் (MOUNT VESUVIUS)!
இந்த எரிமலையின் மேற்குப் பகுதி சரிந்து பே ஆஃப் நேபிள்ஸைத் தொடுகிறது.
இங்குதான் ஹெர்குலனியம் (HERCULANEUM) என்ற பழம்பெரும் நகரின் சிதைபாடுகள் உள்ளன. பாம்பி (POMPEI) என்ற இன்னொரு பழம்பெரும் நகரத்தின் சிதைபாடுகள் தென்கிழக்கில் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன.
இந்த எரிமலையின் வாய் 2000 அடி குறுக்களவும் 300 அடி ஆழமும் உள்ளது. இதை அடைய கேபிள் கார் வசதி உண்டு. சுற்றுப்பாதை ஒன்றும் உண்டு. இந்த எரிமலையின் சரித்திரம் சுவையானதோடு பயங்கரமான ஒன்று.
கி.பி. 79ம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி!
நேபிள்ஸ் வளைகுடாவின் மேற்குப்பகுதியில் உள்ள மிஸனம் என்ற இடத்தில் தன் அம்மாவுடன் வாழ்ந்து வந்தான் பதினேழு வயதான ப்ளினி என்ற பையன். திடீரென்று எரிமலை வெடிக்க தன் அன்னையுடன் ஓடி அவன் உயிர் பிழைத்தான்.
நடந்தது என்ன என்பதை இரு கடிதங்கள் மூலம் விரிவாக எழுதி பிரபல ரோம் நகரத்து வரலாற்று அறிஞரான டாசிடஸுக்கு (TACITUS) அவன் அனுப்பினான்.
“பெரும் வெள்ளம் வருவது போல எங்களுக்குப் பின்னால் ஒரு கருமேகம் துரத்தி வந்தது. எங்கும் ஒரே இருள்மயம். கடல் தண்ணீர் வற்றிப் போய் கடலே உள் வாங்கியது” என்று அவன் விவரித்திருந்தான்.
ஹெர்குலனியம், பாம்பி, மற்றும் ஸ்டாபியா ஆகிய மூன்று நகரங்கள் தீ ஜுவாலையால் கொழுந்து விட்டு எரிந்தன. மக்கள் கிடைத்த விலைமதிக்கத்தக்க பொருள்களை எடுத்துக் கொண்டு ஓடினர். அடுத்த நாள் சூரியனையே காணோம். சூரியனை அடர்த்தியான கரும் மேகங்கள் மறைத்திருந்தன.
எரிந்தது போக மீதம் இருந்த கட்டடங்கள் மீது கட்டியான சாம்பல்கள் படிந்திருந்தன. 20 அடிக்கு சாம்பல் படிந்திருந்தது. ஹெர்குலனியம் நகரம் 55 அடி ஆழத்தில் சகதியில் மூழ்கி அழிந்தது. பாம்பி நகரில் மட்டும் 2000 மக்கள் உயிரிழந்தனர்.
நேபிள்ஸ் வளைகுடாவிலிருந்து மாண்டி சொம்மா என்ற அரைவட்ட வடிவமான எரிமலையின் வாய்ப்பகுதி 4200 அடி உயரத்தில் உள்ளது. இது ராக்ஷஸப் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.
இந்த எரிமலை கி.பி. 79லிருந்து 1036ம் ஆண்டு வரை ஒன்பது முறை வெடித்திருக்கிறது. 1631ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி வெடித்த இந்த எரிமலை ஒரு கணத்தில் 15 கிராமங்களை விழுங்கியது. எரிமலை வெடிப்பு தணிந்த போது எங்கு பார்த்தாலும் முழங்கால் அளவு அடர்த்தியான சாம்பல் படிந்திருந்தது. 3000 பேர் இறந்திருந்தனர்.
உடனே நேபிள்ஸ் நகரத்து வைசிராய் இங்கு ஒரு நினைவு சின்னத்தை எழுப்பி “குழந்தைகளே! குழந்தைகளின் குழந்தைகளே, உங்களை நான் எச்சரிக்கிறேன். இங்கிருந்து ஓடிப் போய்விடுங்கள் – உடனே” என்று அதில் பொறித்து வைத்தார்.
1906ம் ஆண்டு மீண்டும் மவுண்ட் வெசுவியஸ் சீறியது. 1845ல் இங்கு மலைச்சரிவில் 2000 அடி உயரத்தில் ஒரு ஆப்ஸர்வேடரி அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து எரிமலையின் சீற்றத்தை ஆய்வாளர்கள் கண்காணித்தனர். 18 நாட்கள் எரிமலைப் பொங்கி வழிந்தது. அந்தப் பகுதியில் இருந்த கிராமங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. எரிமலையின் வாய் இன்னும் ஆயிரம் அடி அகலமானது.
1944க்குப் பின்னர் இங்குள்ள செழிப்பான மண்வளத்தைக் கண்ட விவசாயிகள் இங்கு திராக்ஷை செடிகளைப் பயிரிட்டனர். இதிலிருந்து பிரசித்தமான லாக்ரிமா க்றிஸ்டி ஒயின் (Lacrima Christi Wine) தயாரிக்கப்பட்டது.
இந்தப்பகுதியில் மொத்தமாக இருபது லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
ஐரோப்பாவின் உயிருள்ள எரிமலையான இது மீண்டும் என்று வெடிக்குமோ என்ற அச்சத்துடனேயே மக்கள் வாழ்கின்றனர்.
வானளவு உயர்ந்து எரியும் தன்மை கொண்ட இந்த எரிமலையை, இந்த எரிமலை அமைதியாக இருக்கும் போது பார்க்க மக்கள் வருவதில் ஆச்சரியம் இல்லையே!