
நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த மாவோரி இனக்குழுவினர் ஹக்கா (Haka) எனப்படும் ஆக்ரோசமான நடனத்தை ஆடுகின்றனர். மவோரி இன மக்கள் தங்கள் பழங்குடியினப் பெருமை, வலிமை மற்றும் ஒற்றுமையைக் காட்ட ’ஹக்கா’ நடனத்தை நிகழ்த்துகின்றனர். மாவோரி இனக்குழுவின் முக்கிய நிகழ்வு மற்றும் சடங்குகளில் இந்த நடனம் ஆடப்படுகிறது. நிகழ்த்துக்கலை வடிவத்தைச் சேர்ந்த ‘ஹக்கா நடனம்’ பெரும்பான்மையாக ஒரு இனக்குழுவால் நிகழ்த்தப் படுகிறது. துடிப்பான அசைவுகள் மற்றும் தாளத்துடன் கால்களைத் தரையில் அடித்தும் ஆக்ரோசமாக கத்தியும் இந்த நடனம் ஆடப்படுகிறது.
இந்த நடனம் தோன்றியதற்கும் அங்கு ஒரு பழங்கதை சொல்லப்படுகிறது.
சூரியக் கடவுளான தமா-நுய்-தே-ராவுக்கு கோடைக்காலப் பணிப்பெண்ணான, ஹினே-ரௌமதி மற்றும் குளிர்காலப் பணிப்பெணான, ஹினே-டகுருவா என்று இரண்டு மனைவிகள் இருந்தனர். கோடைக்காலப் பணிப்பெண்னான ஹைன்-ரௌமதியின் வருகையால் இந்த ஹக்கா நடனம் உருவானதாகக் கூறப்படுகிறது.
கோடை நாட்களில் காற்றில் அலை அலையான தோற்றத்தில் வெளிப்படும் கானல் நீரினை ஹினே-ரௌமதி மற்றும் தாமா-நுய்-தே-ரா ஆகியோரின் மகன் தானே-ரோரின் ஹக்கா என்று நம்பப்படுகிறது. ஹைலேண்ட் என்பவரின் கருத்துப்படி, " ஹக்கா என்பது ஒரு இயற்கை நிகழ்வு வெப்பமான கோடை நாட்களில், தரையில் இருந்து வெளிப்படும் காற்றின் பளபளக்கும் வளிமண்டல தோற்றமான கானல் நீராக இது உருவகப்படுத்தப்படுகிறது.
ஹக்கா என்பது மாவோரி கலாச்சாரத்தில் பல சடங்கு சம்பிரதாய நோக்கங்களை உள்ளடக்கிய உள்நாட்டு நடன வடிவமாகும். நாதன் மேத்யூ விளக்குவதுபோல், "இந்நடனம் கோசமிட்டு கத்திக்கொண்டு பாடலுடன் தோரணையாக ஆடுவது ஹக்காவின் முக்கியப் பண்புகளில் ஒன்று. உடலின் அனைத்துப் பகுதிகளையும் பயன்படுத்தி ஆக்ரோசமான ஒலியுடன் வார்த்தைகள் பயன் படுத்தப்படுகின்றன.
ஹக்கா பல்வேறு சடங்கு நோக்கங்களுக்காக நிகழ்த்தப்படும் பல்வேறு வடிவங்களை உள்ளடக்கியது. இந்த செயல்பாடுகளில் விருந்தினர்களை வரவேற்பது, இறந்தவரை வழியனுப்பும் சடங்கு, ஆலோசனை அல்லது அறிவுறுத்தல்களை வழங்குதல், சுய மரியாதையை மீட்டெடுத்தல், எதிராளிகளை மிரட்டுதல், சமூக மற்றும் அரசியல் செய்திகளை பரப்புதல் என்று இந்நடனம் பல நிகழ்வுகளில் நிகழ்த்தப்படுகிறது.
ஆயுதங்களுடன் ஆடும் ஹக்கா நடனம், போரின் போது ஆடும் நடனமாக இருக்கிறது. இதனை பெருபெரு என்கின்றனர். பெருபெருவைப் போலவே பக்கவாட்டில் குதிப்பது போன்ற நடனம், டூட்டு நாகராஹு என்றும், குதிப்பது போன்ற நடனம், வாகடு வேவே என்றும், eந்த மேடைச் செயல்களும் இல்லாத பொதுவாக மரணச் சடங்குடன் தொடர்புடைய நடனம், மனாவா வெரா என்றும், வெறுப்பு அல்லது ஆக்ரோசமாக ஆடும் நடனம், கயோரோரா என்றும் அழைக்கப்படுகின்றன. ஹக்கா தபராஹி ஆயுதங்கள் இல்லாமல் நிகழ்த்தப்படுகிறது. இது மிகவும் பொதுவான சடங்கு வடிவமாகும்.
மாவோரி கலாச்சாரத்தில் பல்வேறு சமூகச் செயல்பாடு களுக்காக ஹக்கா நடனம் பாரம்பரியமாக ஆண்கள் மற்றும் பெண்களால் நிகழ்த்தப்படுகிறது. சிறப்பு விருந்தினர்களை வரவேற்கவும், சிறந்த சாதனைகளைக் கொண்டாடவும், இறுதிச் சடங்குகளிலும் இந்நடனம் நிகழ்த்தப்படுகின்றது.
நியூசிலாந்து நாட்டு விளையாட்டுக் குழுக்கள் பன்னாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது, போட்டி தொடங்கும் முன் எதிரணியினருக்கு சவால் விடும் வகையில் ஹக்கா நடனத்தை ஆடுகின்றனர். இதன் மூலம் இந்த நடன வடிவம் உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டுள்ளது.
இந்தப் பாரம்பரியம் 1888 - 1989 ஆம் ஆண்டில் நியூசிலாந்து நாட்டுக் கால்பந்து அணி சுற்றுப் பயணத்தின் போது தொடங்கியது. மேலும், 1905 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து நாட்டின் “ஆல் பிளாக்ஸ்“ என்று அறியப்படும் ரக்பி அணியால் இந்நடனம் விளையாட்டு மைதானங்களில் மேற்கொள்ளப்படுகிறது. ஆண் போர்வீரர்களின் பாரம்பரியப் போர் தயாரிப்புகளுக்காக ஹக்கா தொடர்புடையது என்றாலும், ஹக்கா பொதுவாக போர் நடன வகை என்ற கருத்தும், மவோரி அல்லாதவர்களால் ஹக்காவின் தெளிவற்ற நடன அசைவுகளும் மவோரி கலை அறிஞர்களால் தவறாகக் கருதப்படுகின்றன.