
தமிழகத்தின் புராதன நகரங்களுள் சென்னையும் ஒன்று. 2000 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியப் பெருமை உண்டு. ஆனால், சென்னை என்ற பெயர் மட்டும் அப்போது இல்லை. இந்நிலையில், சென்னை தோன்றி 386 ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன என்பது உண்மைக்கு மாறான வரலாற்றுக் பிழையாகும்.
‘பெருநகரச் சென்னை மாநகராட்சிக்கு’ உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிற்பங்களும், சிதிலங்களும் அக்காலத்தில் சிறந்து விளங்கிய சமூக, கலை, இலக்கிய, அரசியலுக்குக் கட்டியம் கூறுகின்றன. சென்னை அடையாறு ஆற்றங்கரை ஓரம் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளும், உடைந்த மண் சட்டிகளும், சென்னையின் ஈராயிரம் ஆண்டுப் பழைமைக்குச் சான்றாக அமைந்துள்ளன.
குறும்பர், சேரர், சோழர், பாண்டியர், களப்பிரர், பல்லவர், முகலாயர், நாயக்கர், விஜயநகர மன்னர்கள் பல்வேறு கால கட்டங்களில் பல்லாயிரம் ஆண்டுகளாகச் சென்னையை ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களுக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகே போர்ச்சுகீசியர்களும், டச்சுகளும், இறுதியாக ஆங்கிலேயர்களும் சென்னையை ஆண்டனர். ஆனால், 1639 ஆகஸ்ட் 22 அன்று, சென்னை என்ற பெயரை ஆங்கிலேயர் சூட்டியதைக் கணக்கிட்டுச், சென்னையின் வயது 386 ஆண்டுகள் என்று கூறுவது சரியா?
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மயிலை ஆதிகேசவப்பெருமாள் கோயில், பாடி திருவலிதாயம் கோயில், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் / சரபேஸ்வரர் கோயில், வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயில் ஆகியவை குறைந்தபட்சம் 1500 ஆண்டுகள் பழமையானவை.
சைவ சமயக் குறவர்களான அப்பர், சம்மந்தர், சுந்தரர், மாணிக்கவாசர் தேவாரம், திருவாசகப் பதிகங்களையும், வைணவ ஆழ்வார்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களையும், சென்னையில் அமைந்துள்ள திருக்கோயில்களில் மனமுருகப் பாடி உள்ளனர். இவர்களின் காலம் 6 – 7 ஆம் நூற்றாண்டு என்னும் போது இவர்கள் பாடிய திருத்தலங்களின் காலமும் நிச்சயம் அதற்கு முந்தியதாகத்தான் இருக்க வேண்டும்.
சென்னையில் உள்ள பல கோயில்களின் பழைமை ஆயிரக் கணக்கான ஆண்டுகள் என்னும் போது, இவை அமைந்திருக்கும் சென்னையின் வயது மட்டும் 386 ஆண்டுகள் என்று கூறுவது அபத்தம். திருவள்ளுவரின் காலம் இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு என்பதும், அவர் பிறந்த இடம் மயிலாப்பூர் என்பதும், ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து. அந்த வகையில் மயிலாப்பூர் அமைந்துள்ள சென்னையின் வயதும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் எனக் கூறுவதே பொருத்தமாகும்.
தமிழகத்தின் ஏனைய நகரங்களான காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, போன்று சென்னையும் ஈராயிரம் ஆண்டு புராதனம் மிக்க நகரம் என்னும் விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு, தொல்லியல் துறை, முன்னாள் தலைவர் ஆர் நாகசாமி தலைமையில் திரு ரங்கராஜ் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில், உலகின் பழைமையான நகரங்களுள் சென்னையும் ஒன்றெனப் பல ஆதரங்களைப் பட்டியலிட்டார்.
உலகின் தொன்மையான நகரங்களுள் சென்னையும் ஒன்றென ஆதரப்பூர்வமாக நிரூபித்து, யுனெஸ்கோவும் அங்கீகரிக்கும் பட்சத்தில் ரோமாபுரி, கிரேக்கம், எகிப்து போன்ற பண்டை நாகரிகங்களுக்கு இணையான அந்தஸ்து சென்னைக்கும் கிடைக்கும்.
தொழில் நகரமாக மட்டுமே அறியப்பட்டுள்ள சென்னை, 2000+ ஆண்டு புராதனமான திருக்கோயில்களைக் கொண்ட பாரம்பரியப் பெருமை மிக்க நகரமாக அறியப்பட்டால் பல்வேறு நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவார்கள். இது பொருளாதார ரீதியாகக் கோடிக் கணக்கில் வருவாய் ஈட்டவும் உதவும். தொழில் நகரமாகவும், தொன்மையான நகரமாகவும் சென்னை போற்றப்படும்.