

Hercules Bear Real story: நாம் பல வீடுகளில் நாய், பூனைகளை மிகவும் அன்பாக செல்லப் பிராணிகளாக வளர்ப்பதை பார்த்திருப்போம். ஆனால் Scotland நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சற்று வித்தியாசமாக ஒரு ராட்சச கரடியை தங்கள் சொந்த மகனைப் போலவே வளர்த்து உலகையே ஆச்சரியப்படுத்தினர்.
Andy மற்றும் Maggie என்ற அந்த தம்பதியினருக்கு Hercules என்ற இந்த கரடி (Grizzly Bear) குட்டியாக இருக்கும்போதே கிடைத்தது. மனித குழந்தையை போல அவர்களுடன் ஒன்றாக உணவு அருந்தி, ஒரு சாதாரண காட்டு விலங்காக இல்லாமல் அந்த குடும்பத்தில் ஒருவனாகவே அது மாறியது.
கரடிக்குட்டியின் வருகை!
Maggie சிறு வயதிலிருந்தே விலங்குகள் மீது அதீத அன்பு கொண்டவராக இருந்தார். அவரது கணவரான Andy ஒருமுறை கனடா சென்றிருந்தபோது, அங்குள்ள ஒரு கரடியுடன் சண்டையிடும் விசித்திரமான போட்டியில் பங்கேற்றார். அந்த நேருக்கு நேர் மோதல் அனுபவம் அவருக்குள் ஒரு கரடியை வளர்க்கும் ஆசையை ஆழமாக தூண்டியது.
மற்றவர்கள் இதை பைத்தியக்காரத்தனம் என்று கூறினாலும் அவர்கள் ஒரு உயிரியல் பூங்காவில் இருந்து Hercules கரடிக் குட்டியை முறைப்படி தத்தெடுத்தனர். ஆரம்பத்தில் அது சற்று முரட்டுத்தனமாக இருந்தாலும் Maggie கொடுத்த அளவற்ற அன்பால் அந்த கரடி மெல்ல மெல்ல சாதுவாக மாறத் தொடங்கியது. காலை உணவாக காபி, முட்டை மற்றும் சாஸேஜ் என மனிதர்கள் சாப்பிடுவதையே அதுவும் சாப்பிட பழகியது. அது முழுமையாக வளர்ந்த பிறகு சுமார் 190 கிலோ எடையுடன் பிரம்மாண்டமாக காட்சியளித்தது.
காணாமல் போன கரடி!
இவர்கள் நடத்தி வந்த ஒரு மதுபான விடுதியிலும் Hercules வாடிக்கையாளர்களுடன் மிக சகஜமாக பழகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதன் அசாத்தியமான புகழ் காரணமாக ஒரு பிரபலமான விளம்பரப் படத்தில் நடிக்க அதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்காக ஒரு தீவில் படப்பிடிப்பு நடந்தபோது, Andy உடன் கடலில் நீந்திக் கொண்டிருந்த Hercules கழுத்தில் இருந்த கயிறு நழுவி எதிர்பாராத விதமாக தண்ணீரில் காணாமல் போனது.
பல நூறு பேர் சேர்ந்து தேடியும் அது கிடைக்கவில்லை. சுமார் 24 நாட்கள் கழித்து உடல் மெலிந்து மரணத்தின் விளிம்பில் இருந்த அந்த கரடி உயிருடன் மீட்கப்பட்டது. ஊர் மக்கள் இரக்கப்பட்டு கொடுத்த பாலைக் குடித்து அது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.
சர்வதேச அந்தஸ்து!
இந்த பரபரப்பான காணாமல் போன சம்பவத்திற்குப் பிறகு Hercules உலக அளவிலான ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக மாறியது. இது பல தலைவர்களை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான Octopussy மற்றும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்தது. ஒரு கரடியாக இருந்தாலும் மக்களின் அன்பை முழுமையாக பெற்ற ஒரு விஐபி அந்தஸ்தை அது அடைந்தது என்பது ஒரு வரலாற்று சாதனையாகும்.
காலம் செல்லச் செல்ல Hercules முதுகுத்தண்டு பாதிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட்டது. Andy அதனை தினமும் நீச்சல் குளத்தில் நடக்க வைத்து ஒரு தந்தையைப் போல பயிற்சி அளித்தார். இருப்பினும், 2001 ஆம் ஆண்டு தனது 25 ஆவது வயதில் அந்த கரடி உயிரிழந்தது. அந்த பிரிவு Andy மற்றும் Maggie இருவரையும் வெகுவாக பாதித்தது. பல வருடங்கள் கழித்து 2019 இல் Andy காலமான பிறகு அவர் Hercules புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.
ஒரு கொடிய மிருகத்தை கூட உண்மையான அன்பால் ஒரு சாதுவான குழந்தையாக மாற்ற முடியும் என்பதற்கு இவர்களின் இந்த உணர்வுபூர்வமான வாழ்க்கை ஒரு மிகச்சிறந்த உதாரணமாக எக்காலத்தும் நிலைத்து நிற்கும்.