

பொதுவாக தீபாவளியை விளக்குகள் ஏற்றி இனிப்பு களுடன் கொண்டாடும் வழக்கம் உண்டு. ஆனால் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கிராமத்திலோ தீபாவளிக்கு அடுத்த நாள் கல் வீசி ரத்தம் சிந்தும் திருவிழா நடைபெறுகிறது.
சிம்லாவில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமி என்ற ஒரு சிறிய அழகான கிராமம் உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 400 ஆண்டுகளாக அவ்வூர் மக்கள் வினோதமான கல்லெறியும் திருவிழாவை அரச குடும்பத்தின் வாரிசு ஆரம்பித்து வைக்கக் கொண்டாடி வருகின்றனர்.
இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள தமி (Dhami) கிராமத்தில், தீபாவளிக்கு மறுநாள் கல்லை வீசி ரத்தம் சிந்தும் பாரம்பரிய திருவிழா 'பத்ரோன் கா மேளா' (Pathron Ka Mela) அல்லது 'கல் வீச்சு திருவிழா' பீமா காளி கோவில் மைதானத்தில் விசித்திரமாக கொண்டாடப் படுகிறது.
தமேத் (Dhamed) மற்றும் ஜமோக் (Jamog) ஆகிய இரு தரப்பு கிராம மக்கள் இரு பிரிவினராகப் பிரிந்து ஒருவருக்கொருவர் கல்லை வீசி மோதிக்கொள்வார்கள். கூட்டத்தில் யாரேனும் ஒருவரின் மீது கல் பட்டு ரத்தம் சிந்துவதுடன் இந்த மோதல் அல்லது போட்டி உடனடியாக நிறுத்தப்படும்.
காயம் அடைந்த நபரின் ரத்தம் அப்பகுதியில் உள்ள மா பீமா காளி கோவில் அம்மனுக்கு திலகம் வைக்க பயன்படுத்தப்படுகிறது. ரத்தம் சிந்தியவுடன் சூழல் மகிழ்ச்சியான கொண்டாட்டமாக மாறி பாட்டுகள் பாடி, தாரை தப்பட்டை முழங்க நடனமாடுவார்கள்.
வரலாற்று பின்னணி:
கல் எறியும் திருவிழாவின் வரலாறு பல நூற்றாண்டு களுக்கு முந்தையது. மா பீமா காளி கோவிலில் கடைபிடிக்கப்பட்ட நரபலி வழக்கத்தில் இருந்து இது தோன்றியதாகக் கூறப்படுகிறது. ராணாக்கள் அரச குடும்பத்தின் ராணி மனித பலி கொடுக்கும் வழக்கத்தை நிறுத்த முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
தாமி மன்னரின் மரணத்திற்குப் பிறகு அந்த ராணி ஒரு முச்சந்தியில் உடன்கட்டை ஏற, தற்போதைய கல் வீச்சு திருவிழா இந்த இடத்தின் விளையாட்டு மைதானத்தில்தான் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகிறது.
பண்டைய காலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு (சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்) அங்குள்ள 'மா பீமா காளி' (Maa Bhima Kali) கோவிலில் மனித பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது.
அங்கு ஆண்ட அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணி ஒருவர் இந்த கொடூரமான மனித பலி முறையை நிறுத்த முடிவு செய்தார். அதற்கான மாற்று ஏற்பாடுதான் இப்படி கல் வீசி ரத்தம் சிந்தும் விழாவாக தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கல்வீச்சு திருவிழா நடக்கும் முறை:
கல் எறியும் திருவிழா, ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு அடுத்த நாள் அரசவையில் இருந்து திருவிழா மைதானம் வரை செல்லும் ஒரு ஊர்வலத்துடன் தொடங்குகிறது. தாமி வம்சத்தின் அரச குடும்பத்தின் வாரிசு இந்த ஊர்வலத்திற்கு தலைமை தாங்குவதுடன் கல்விசி எறியும் விளையாட்டையும் துவக்கி வைப்பார்.
இந்த கல்லெறியும் விளையாட்டு நரசிம்மர் கோவிலில் பிரார்த்தனைக்கு பிறகு நடைபெறத் தொடங்குகிறது. இக்கோவிலில் பூஜைகள் முடிந்த பிறகு தாமேத் மற்றும் ஜாமோக் ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து மைதானத்தில் திரள்வார்கள்.
பின்னர் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் தீவிரமாக கற்களை வீசி எறிந்து கொள்வார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால் இந்தப் பாரம்பரிய திருவிழாவில் முதலில் ராஜ குடும்பத்தினர்தான் இந்த கல்வீச்சை ஆரம்பித்து வைப்பார்கள்.
இந்தக் கல் வீச்சுப் போட்டி பங்கேற்பாளர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டு ஒரு துளி இரத்தம் சிந்தும் வரை தொடர்ந்து நடைபெறும். யாராவது ஒருவருக்கு ரத்தம் வந்தவுடன் போட்டி உடனடியாக நிறுத்தப்படும். காயம் அடைந்த நபரின் ரத்தத்தை எடுத்து காளி தேவிக்கும், அங்குள்ள சதி தேவியின் நினைவிடத்திலும் புனித திலகமாக இடுவார்கள்.
ரத்தம் சிந்திய பிறகே அந்த வருடத்திற்கான திருவிழா வெற்றிகரமாக முடிந்ததாகக் கருதப்படுகிறது. போர்ச் சூழலிலிருந்து கொண்டாட்ட சூழலுக்கு மாறி மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பாடி, நடனமாடி மகிழ்வார்கள். ரத்தத்தை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் குறியீடாக இந்த கல்வீச்சு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, இந்த விழா உள்ளூர் அதிகாரிகளாலும், ஏற்பாட்டுக் குழுவினராலும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. பாதுகாப்பு வலைகள், எல்லைகள் மற்றும் மருத்துவக் குழுக்கள் மைதானத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகள் கடந்த இந்த பழமையான பாரம்பரியம் இன்றும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தமியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கல் எறியும் திருவிழாவைக் கொண்டாட ஒன்று கூடுகின்றனர். இது சுற்றுலாப் பயணிகளையும், புகைப்படக் கலைஞர்களையும் அதிக அளவில் ஈர்க்கும் ஒரு கலாச்சார ஈர்ப்பாக மாறியுள்ளது.