

தீபாவளி பண்டிகையின் முடிவைக் குறிக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள கிராமங்களில் ஒருவர் மீது ஒருவர் சாணியை வீசி எறிந்து கொண்டாடும் வினோதமான திருவிழா 'கோரேஹப்பா' (Gorehabba) அல்லது 'சாணியடித் திருவிழா' என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா எல்லையில் உள்ள ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதிக்கு உட்பட்ட கும்டாபுரம் (Gumatapura) கிராமத்தில் உள்ள பீரேஸ்வரர் (Beereshwara Swamy) கோயில் வளாகத்தில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையை அடுத்து வருகின்ற மூன்றாவது நாள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இத்திருவிழா 300 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவினை சாணிகுண்டம் இறங்கும் விழா என்றும் கூறுகின்றனர்.
திருவிழாவின் பின்னணியும் சுவாரசியமான நடைமுறைகளும்:
இத்திருவிழா இந்தக் கிராமத்தில் உள்ள பீரேஸ்வரர் சுவாமி கோவிலை மையமாக வைத்தே நடைபெறுகிறது.
கிராம மக்கள் வழிபடும் தங்கள் குலதெய்வமான பீரேஸ்வரர் சாணத்தில் இருந்து பிறந்தவர் என்ற ஆன்மீக நம்பிக்கை நிலவுகிறது. அத்துடன் பல நூற்றாண்டு களுக்கு முன்பு இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சாணக் குழியிலிருந்துதான் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாகவும் ஒரு வரலாறு கூறப்படுகிறது.
விழா தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளில் இருந்தும் மாட்டுச் சாணம் முழுவதையும் சேகரித்து டிராக்டர்கள் மூலம் கோவில் வளாகத்திற்கு அருகில் கோவிலுக்குப் பின்னால் ஒரு பெரிய குவியலாக சேர்த்து வைப்பார்கள்.
விழாவின் தொடக்கமாக களிமண்ணால் செய்யப்பட்ட ஒரு மனித பொம்மையை கழுதையின் மேல் வைத்து கிராமம் முழுவதும் ஊர்வலமாகக் கொண்டு செல்வார்கள். 'சாதிகோரா' (புறம் பேசுபவர் அதாவது பொய் சொல்பவர்) என்று அழைக்கப்படும் இந்த உருவத்திற்கு மக்கள் சாபமிட்டு, இறுதியில் அதனை கிராமத்திற்கு வெளியில் உள்ள குன்றில் கோழியுடன் சேர்த்து எரிப்பார்கள். இதன் மூலம் யாரும் பொய் பேசக்கூடாது என்ற சமூக செய்தி இங்கு வலியுறுத்தப்படுகிறது.
கோவிலில் சிறப்பு பூஜைகள் முடிந்த பிறகு சாணக் குவியலுக்கும் கோவில் பூசாரி சிறப்பு பூஜைகள் செய்து முடித்ததும் கிராமத்தைச் சேர்ந்த
ஆண்கள் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அந்த சாணக் குழிக்குள் இறங்கி, சாணத்தை உருண்டைகளாக மாற்றி ஒருவர் மீது ஒருவர் உற்சாகமாக வீசி அடித்து விளையாடுவார்கள். ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த சாணப்போர் சுமார் 2 மணி நேரம் கோலாகலமாகத் தொடரும். மாட்டுச் சாணம் புனிதமானது மற்றும் கிருமி நாசினி பண்புகளைக்கொண்டது என்பதால் இதில் பங்கேற்பதன் மூலம் நோய்கள் குணமாகும் மற்றும் கிராமத்திற்கு நன்மை பெருகும் என்பது இங்குள்ள மக்களின் தீராத நம்பிக்கையாக உள்ளது.
திருவிழா முடிந்ததும் அங்கு எஞ்சியிருக்கும் சாணத்தை மக்கள் தங்கள் விளைநிலங்களுக்கு இயற்கை உரமாகக் கொண்டு சென்று பயன்படுத்துகிறார்கள். இது அந்த ஆண்டின் விவசாய மகசூலை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் ஆரோக்கியமாக வாழவும் இந்த விழா நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்தப் புனிதமான சாணப் போரில் பங்கேற்பதால் உடலில் உள்ள நோய்கள் குணமாகும் என்பதும் இப்பகுதி மக்களின் பலத்த நம்பிக்கையாக உள்ளது. விழாவின் நிறைவாக சாணத்தில் நனைந்த ஆண்கள் அனைவரும் அருகில் உள்ள ஏரி அல்லது குளத்திற்குச் சென்று குளித்துவிட்டு, மீண்டும் கோவிலுக்கு வந்து இறைவனை வழிபடுவார்கள். ஸ்பெயினின் "தக்காளித் திருவிழா" (La Tomatina) போல இந்தியாவின் இந்த "சாணி வீசும் திருவிழா" உலகளவில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்த வினோதமான தீபாவளி சாணையடித் திருவிழாவின் போது நடத்தப்படும் 'சதி கோரா' (பொய் சொல்லக்கூடாது) என்ற சடங்கு ஒரு வேடிக்கைத் திருவிழாவாக மட்டுமல்லாமல், வாழ்வில் பொய் பேசக்கூடாது, வதந்திகளை பரப்பக் கூடாது என்ற மிக உயர்ந்த சமூக நீதியையும் ஒழுக்கத்தையும் மக்களுக்கு உணர்த்தும் ஒரு பாரம்பரிய சடங்காக கடைபிடிக்கப்படுகிறது.