

மனித வரலாற்றில் போர், சமாதானம் மாறி மாறி வந்ததைக் கட்டுரையாளர் விரிவாக விளக்குகிறார். சங்க கால சேர, சோழ, பாண்டியர் முதல் கிரேக்க, ரோம், பெர்ஸியா, ரஷியா-உக்ரேன், அமெரிக்கா-ஈரான் வரை போர்கள் தொடர்ந்த வரலாறு கூறப்படுகிறது. அதே நேரத்தில் எகிப்து-துருக்கி, ரோம்-பெர்ஸியா, சீனா-கொரியா-ஜப்பான் போன்ற நாடுகளின் நீண்ட சமாதான காலங்களும் எடுத்துக்காட்டாக தரப்படுகின்றன.
போர், போர், போர்!
ரஷியாவுக்கும் உக்ரேனுக்கும் போர்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் போர்.
போரில்லாத காலமே இல்லை.
சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டியருக்குப் போர்.
கிரேக்க நாட்டில் ஏராளமான போர்கள்.
இருபதாம் நூற்றாண்டில் மட்டும் இரண்டு கோடியே முப்பத்தோரு லட்சம் பேர்கள் போர்களினால் மாண்டனர். இதில் இரண்டாம் உலகப் போரில் பெர்லினில் நடந்த சண்டையில் மட்டும் 80000 சோவியத் வீரர்கள் இறந்தனர்.
உலக அமைதி சாத்தியமா? மனித வரலாற்றில் போர்களின் தொடக்கம்:
மனித வரலாற்றில் போர் இல்லாத காலம் என்று ஒன்று உண்டா, என்ன?
“மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே வன்முறையும் தோன்றி விட்டது என்றே கூறலாம்” என்று கூறுகிறார் ஐயான் மோரிஸ் என்ற விஞ்ஞானி - லைவ் ஸயின்ஸ் பத்திரிகைக்கு அளித்த செய்தியில்.
Peace in World History என்ற வரலாற்று நூலை எழுதிய ஜார்ஜ் மேஸன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீட்டர் ஸ்டீயர்ன்ஸ் என்ற பேராசிரியர் மனித குலத்தின் ஆரம்ப காலத்தில் போர் என்ற வார்த்தையே இல்லை என்கிறார்.
வெவ்வேறு தேசங்களில் வெவ்வேறு அரசுகள் வர ஆரம்பித்தவுடன் போரும் ஆரம்பமாயிற்று. அமைதியான காலம் என்று ஒன்று உண்டென்றால் அது ஒரு பேரரசன் எல்லா பிராந்தியங்களையும் ஜெயித்து தன் வசப்படுத்திக் கொண்ட போது ஏற்பட்ட காலம் தான்!
இது பற்றிக் கருத்து தெரிவிக்கையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பீட்டர் ஃப்ராங்கோபன் என்ற பேராசிரியர், “வலிமை வாய்ந்த இரு பேரரசர்கள் அரசாண்ட போது போர் என்பது அபாயகரமான ஒன்று என்பதை உணர்ந்து அவர்கள் தங்களுக்குள் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டதையும் பார்க்கலாம்” என்கிறார்.
உதாரணமாக எகிப்தும் பழைய கால துருக்கியும் வலிமை வாய்ந்த நாடுகளாகத் திகழ்ந்ததால் கி. மு. 1400 முதல் 1200 வரை போரே ஏற்ப்டவில்லை என்பதைச் சொல்லலாம்.
அதிக காலம் போர் செய்த நாடுகள் என்று பார்த்தால் ரோம் நகரையும் பெர்ஸியாவையும் கூறலாம்.
ஆனால் இவை கூட கி.பி. 387 முதல் 501ம் ஆண்டு முடிய போர் செய்யாமல் சமாதானமாக இருந்தன. தங்களின் வலிமையை இவர்கள் சமமாக உணர்ந்து கொண்டதே இதற்குக் காரணம்.
கி.பி. 1000ம் ஆண்டு முதல் 1200 முடிய சீனாவின் சாங் வமிச மன்னர்கள் தங்கள் அண்டைநாட்டவரான லியோ மற்றும் ஜின் ஆகியோருக்கு சிறிய தொகையை கப்பம் கட்டி சமாதானத்தை நிலை நாட்டிக் கொண்டனர்.
இன்னும் ஒரு குறிப்பிடத் தகுந்த சமாதான காலம் என்று சீனா, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கி.பி. 1600 முதல் 1850 முடிய கடைப்பிடித்த சமாதானத்தைக் கூறலாம்.
வட அமெரிக்காவில் உள்ள ஐந்து தேசங்கள் 1450 முதல் 1777 முடிய சமாதானத்தைக் கடைப்பிடித்து வந்ததையும் லைவ் ஸயின்ஸ் பத்திரிகை சுட்டிக் காட்டுகிறது.
போர்களின் கோர முகமும் உலக அமைதி உருவாக்கத்திற்கான அவசியமும்:
போர்களினால் ஏற்படும் பாதிப்புகள் பல!
பல லட்சம் போர் வீரர்கள் மடிகின்றனர்.
தேசங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.
பெண்களைக் கற்பழிப்பது போன்ற தகாத செயல்கள் செய்யப்படுகின்றன,
சுற்றுப்புறச் சூழல் கெடுகிறது.
ஆண், பெண் விகிதாசாரம் கெடுகிறது.
குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.
கலாசாரம் பாதிக்கப்படுகிறது. மத சம்பந்தமான புனித இடங்கள் அழிக்கப்படுகின்றன.
நாடு விட்டு நாடு செல்ல வேண்டிய நிர்பந்தத்தால் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து அவர்கள் பெரும்பாடு பட வேண்டியதாக இருக்கிறது.
ஜெனிவா ஒப்பந்தம் 1949ல் ஏற்பட்டு போர்களைத் தவிர்க்க வழி வகுத்தாலும் போர்கள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன.
போர்களே இல்லாத புதியதோர் உலகம் உருவாக அனைவரும் பாடுபட வேண்டும், இல்லையா?
மனிதகுலத்தின் போர்க்கால வரலாற்றையும் உலக அமைதி சாத்தியக்கூறுகளையும் ஆழமாகப் புரிந்துகொள்வதன் மூலம், எதிர்கால உலகத்தில் வன்முறையைக் குறைத்து அமைதியான சமூகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை நீங்கள் பெறுவீர்கள்.