

ஹோலி பண்டிகையை எப்படி சுற்றுச்சூழலுக்கு தகுந்த மாதிரியும், நம் சருமத்திற்கு பாதுகாப்பாகவும், அதே வேளையில் எந்தவித மகிழ்ச்சியும் குன்றாமல் கொண்டாடி முடித்ததும், தூய்மைப்படுத்தி, ஆரோக்கியம் காக்கலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
வண்ணங்களைப் பயன்படுத்தும் முறை:
ஹோலியன்று பயன்படுத்தப்படும் வண்ணங்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடாகும். இதை பயன்படுத்தும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம்.
இயற்கை வண்ணங்கள் (Organic Colours ):
செயற்கை வண்ணங்களில் (Chemical colors) அதிகப்படியான ரசாயனங்கள் மற்றும் ஈயம் (lead) போன்ற உலோகங்கள் கலந்து இருக்கும் . இது சரும ஒவ்வாமை (Skin allergy) மற்றும் கண் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே மஞ்சள் பொடி, மருதாணி, குங்குமம், சந்தனம் போன்ற இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வண்ணங்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது. இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பூசும் முறை:
வண்ணங்களை பயன்படுத்தும்போது கண்களை பாதுகாப்பாக வைத்திருப்பது மிக அவசியம். முகத்தில் பூசும்போது கண்களுக்குள் வண்ணங்கள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி வண்ணங்கள் கண்களில் படாமல் இருப்பதற்கு கண்ணாடி அல்லது சன் கிளாஸ் அணிந்து கொள்வது ஆரோக்கியமானது.
தலைமுடி பராமரிப்பு:
தலைக்கவசம் அல்லது தலைப்பாகை (Bandana/Cap) அணியுங்கள். வண்ணங்கள் முடியில் சிக்கி உலர்ந்து போகாமல் இருக்க முடியில் தேங்காய் எண்ணெய் தடவுங்கள். இது முடி ஆரோக்கியத்தை காக்கும்.
உடை:
முழு உடலையும் மூடும் வண்ணம் உடைகள் அணிவது ஆரோக்கியத்திற்கு அவசியம்.இதனால் உடம்பில் அதிக வெயில் தாக்கம் இல்லாமலும், வண்ணங்களின் தாக்கத்திலிருந்து சருமத்தை பராமரிப்பதற்கு பாதுகாப்பாகவும் இருக்கும்.
சுதந்திரம்:
குறிப்பாக யாரையும் கட்டாயப்படுத்தி வண்ணம் பூசாதீர்கள். மற்றவர்களின் விருப்பத்தை மதித்து ஆரோக்கியமான முறையில் கொண்டாடுங்கள். சிலர், அபார்ட்மெண்டில் இருப்பவர்கள் வீடுகளுக்குச் சென்று வண்ணம் பூசி மகிழ்வது உண்டு. அப்பொழுது வீட்டில் இருப்பவர்கள் வேண்டாம் என்று கூறினால், அந்த வண்ணங்களை வாசலின் ஒரு ஓரமாக வைத்துவிட்டு வாழ்த்து கூறி வரலாம். இது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும்.
மிக முக்கியம்:
ஹோலி விளையாடும்போது உங்கள் மொபைல் ஃபோன், கேமரா போன்ற மின்னணு சாதனங்களை சுற்றி பிளாஸ்டிக் கவரில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
விலங்குகள் பாதுகாப்பு :
உங்கள் வீட்டில் செல்லப்பிராணிகள் நாய், பூனை போன்றவை இருந்தால் அவற்றின் மீது வண்ணங்களை தெளிக்காதீர்கள். ஏனெனில் அவற்றில் உள்ள ரசாயனம் பிராணிகளின் சுவாசத்திற்கும் சருமத்திற்கும் கடுமையான ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்தும்.
நீர் பயன்பாடு:
அதிகப்படியான நீரை பயன்படுத்தாமல் உலர் ஹோலி(Dry holi) விளையாடுவது சுற்றுச்சூழலுக்கு நல்லது. நீர் சேமிப்பு மற்றும் ஆரோக்கியம் இரண்டிற்கும் இதுவே சிறந்தது.
சரும பாதுகாப்பு:
வண்ணங்களை விளையாடுவதற்கு முன் உடம்பிலும், முகத்திலும் தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் தடவிக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது .இது வண்ணங்கள் சருமத்தில் ஆழமாக படிவதைத் தடுத்து விளையாடிய பின் எளிதில் கழுவி விட வசதியாக இருக்கும்.
சுத்தம் செய்தல்:
ஹோலி விளையாடி முடித்ததும் இதமான வெது வெதுப்பான நீரையும் மென்மையான சோப்பையும் பயன்படுத்தி வண்ணங்களை அகற்றவும். சருமம் வறண்டு போகாமல் இருக்க குளித்த பிறகு நல்ல தரமான Moisturzer பூசுவது சிறந்தது. அல்லது கற்றாழை ஜெல் தடவுவது சருமத்தை மென்மையாக்கும். இது சரும ஆரோக்கியத்திற்கு அவசியமானது.
ஹோலி பண்டிகை என்பது வெறும் வண்ணத் திருவிழா மட்டுமல்ல. அது சமூகத்தில் உள்ள வேற்றுமைகளை மறந்து அனைவரையும் அன்பால் பிணைக்கும் திருவிழா. ஆதலால் ஆரோக்கியமான முறையில் இயற்கையான வண்ணங்களை பயன்படுத்தி அன்பை மட்டுமே பகிர்ந்து கொள்வதே இந்த விழாவின் உண்மையான வெற்றி. ஆதலால் இந்த வண்ணத் திருவிழாவை குதூகலமாகவும், ஆரோக்கியத்திற்கு தீங்கு வராமலும் கொண்டாடி மகிழ்வோம்!