Beating Retreat - 'பின்வாங்கு முரசறை' எப்படி, எங்கு தொடங்கியது?

Beating Retreat
Beating RetreatImg Credit: Wikipedia
Published on

இந்தியாவில் குடியரசு நாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் அலுவல் முறையில் முடிவுறும் போது, பின்வாங்கு முரசறை (Beating Retreat) எனும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாள் கழிந்த மூன்றாம் நாள், ஜனவரி 29 அன்று மாலையில், குடியரசுத் தலைவர் மாளிகை அருகே ரைய்சினா ஹில்சில் அமைந்துள்ள விஜய் சதுக்கம் பகுதியில் முரசறையப்பட்டு, பின்வாங்கு முரசறை செயல்படுத்தப்படுகிறது. இவ்வேளையில் இந்தியப் படைத்துறையின் மூன்று அங்கங்களான இந்தியத் தரைப்படை, இந்தியக் கடற்படை, இந்திய வான்படையின் இசைக்கலைஞர்கள் இசைக்கின்றனர். 1950 ஆம் ஆண்டில் இந்தியப் படைத்துறையின் வெவ்வேறு பிரிவுகளின் முரசறை இசைக்குழுக்களின் திறனை வெளிப்படுத்தும் வண்ணம் மேஜர் இராபர்ட்சால் வடிவமைக்கப்பட்டது

இந்த பின்வாங்கு முரசறை நடைமுறை எப்படி தொடங்கியது, எங்கு தொடங்கியது என்று உங்களுக்குத் தெரியுமா?

இங்கிலாந்தில், அருகிலுள்ள பகுதிகளுக்கு ரோந்துப் பணிக்காகச் சென்ற படைகளைக் கோட்டைக்குத் திரும்ப அழைக்க, பின்வாங்கு முரசறை எனும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. தொடக்கத்தில் இதனை, ‘கடிகாரம் அமைத்தல்’ என்றனர். மாலை நேரத்தில் சூரியன் மறையும் போது, இதற்கான மாலைத் துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டைச் சுடுவதாக இருந்தது. அதன் பிறகு, 1690 ஆம் ஆண்டில் ஜூன் 18 ஆம் நாளில், இரண்டாம் ஜேம்ஸ் இட்ட ஆணையின்படி, தங்கள் படைகளைப் பின் வாங்க முரசறையப்பட்டது. 1694 ஆம் ஆண்டில் மூன்றாம் வில்லியம் இட்ட ஆணைப்படி இச்சடங்கு படைத்துறை இசை ஆயிற்று. இலண்டன் பாதுகாப்பில் உதவும் இராயல் மலாய் ரெஜிமன்ட்டின் இசைக்குழுவைக் கொண்டு இசை இசைக்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டில் ஜூன் 5 அன்று முதல் முறையாக ஓர் வெளிநாட்டு இசைக்குழு பின்வாங்கு முரசறை வாசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் ‘பின்வாங்கு முரசறை’ என்பது அலுவல் முறையாக, குடியரசு நாள் விழாவின் இறுதியைக் குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 முதல் ஜனவரி 29 வரை அனைத்து முக்கியமான அரசாங்க கட்டிடங்கள் விளக்குகள் மூலம் அழகாக அலங்கரிக்கப்படுகின்றன. குடியரசு நாள் கழிந்த மூன்றாம் நாள், ஜனவரி 29 அன்று மாலை 5 மணிக்கு விழா தொடங்குகின்றது. இதன் முதன்மை விருந்தினராக இந்தியக் குடியரசுத் தலைவர் இருக்கிறார்; தமது ஆபத்துதவிகளின் குதிரை அணி வகுப்பினூடே குடியரசுத்தலைவர் வருகை தருகிறார். அப்போது, ‘பிரிகேடு ஆப் தி கார்ட்சு’ தங்கள் ஊது கொம்பு கொண்டு ‘பேன்பேர்’ என்ற இசைத்துண்டை வாசிக்கின்றனர். அடுத்து தேசிய வணக்கம் செலுத்தப்பட்டு நாட்டுப்பண்ணுடன் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சிவப்பு நிற ரயில்களுக்கும் நீல நிற ரயில்களுக்கும் என்ன வித்தியாசம்?
Beating Retreat

தரைப்படை, வான்படை, கடற்படையின் முரசறைவோர், ஊதுகுழல் கலைஞர்கள், எக்காளக் கலைஞர்கள் வரிசையாக தங்கள் திறனைக் காட்டிய வண்ணம் அணி வகுக்கின்றனர். ஒவ்வொரு குழுவின் கட்டியக்காரராக வருபவரின் கம்பாட்டம் காண இனிமையாக இருக்கும். புகழ்பெற்ற பாடல்களான கர்னல் போகி மார்ச்சு, சன்ஸ் ஆஃப் தி பிரேவ் போன்ற ஆங்கிலப் பாடல்களும், கதம் கதம் படாயே ஜா போன்ற பாடல்களும் இடம் பெறும். இசைக்குழு ஒவ்வொன்றும் தங்கள் நிகழ்ச்சி முடிந்ததும் குடியரசுத் தலைவரின் அண்மையில் உள்ள இடத்தில் நிற்பர். முரசறைவோர் தனியாவர்த்தனமாக ‘டிரம்மர்ஸ் கால்’ என்ற இசையை வாசிப்பர். பின்னர் பின்வாங்கலுக்கான எக்காள இசை எழுப்பப்படும்.

இதனைத் தொடர்ந்து கொடிகள் ஒவ்வொன்றாக கீழிறக்கப்படும். பின்னர் பேண்டு மாஸ்டர் தமது இசைக்குழுக்கள் கலைந்து செல்ல குடியரசுத் தலைவரின் அனுமதியினைக் கோருகின்றார். அதன் பிறகு, அனுமதி பெற்று குடியரசு நாள் நடைமுறைகள் முடிந்ததாக அறிவிக்கிறார். அதனைத் தொடர்ந்து இசைக்குழுக்கள் பாடல்களை வாசித்தபடியே கலைந்து செல்கின்றன.

இதையும் படியுங்கள்:
மக்களை குழந்தைகளாகக் கருதி இறைவன் உணவூட்டுவதாக நினைவுகூரும் ‘சாவ்ங்நாட் சடங்கு!’
Beating Retreat

தரைப்படை வழமையாக, ‘சாரே சகாங் சே அச்சா’ என்ற பாடலை வாசிக்கின்றனர். அவர்கள் ரைய்சினா குன்றைக் கடந்ததும் தலைமைச் செயலகத்தின் வடக்கு, தெற்கு வளாகக் கட்டிடங்கள் ஒளி வெள்ளத்தில் மூழ்குகின்றன. ஆபத்துதவிகளின் படைகள் வந்திறங்க, நாட்டுப்பண் இசைக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் தமது இல்லத்திற்குத் திரும்புகின்றார்.

1950 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நடைமுறை இது வரை இரண்டு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக, 2001 ஆம் ஆண்டில் குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கப் பேரிடரை அடுத்து, இந்நடைமுறை செய்யப்படவில்லை. அதன் பின்னர், 2009 ஆம் ஆண்டில் ஜனவரி 27 அன்று முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமன் மறைந்ததை அடுத்து 2009 ஆம் ஆண்டு இந்நடைமுறை செய்யப்படவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com