
பிரான்சின் இரண்டு அரச குடும்பங்களிடையே நடந்த ஆட்சியுரிமைக்கான போர் 1337 ஆம் ஆண்டு முதல் 1453 ஆம் ஆண்டு வரை நடந்தது. இதனை நூறாண்டுப் போர் (Hundred Years' War) என்பார்கள். உலகில் அதிகக் காலம் நீடித்த போர் இது என்று வரலாற்றாசிரியர்கள் இப்போரைக் குறிப்பிடுகின்றனர்.
பிரான்சை ஆண்ட கப்பீஷன் அரசமரபு வாரிசு இல்லாமல் போன போது இந்நிலை ஏற்பட்டது. ஆட்சி உரிமைக்கான இரண்டு முதன்மையான போட்டியாளர்களாக வால்வா (Valois) பிரிவினரும், பிளாண்டாஜெனெட் (Plantagenet) அல்லது அஞ்சு என அழைக்கப்பட்ட பிரிவினரும் இருந்தனர். வால்வா பிரிவினர் பிரான்சின் அரச பதவியைக் கோரிய அதே வேளையில், இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாண்டாஜெனெட் பிரிவினர் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் அரச பதவிகள் தமக்கே உரியன என்றனர். இங்கிலாந்தின் பிளாண்டாஜெனெட் அரசர்கள், பிரான்சின் அஞ்சு மற்றும் நோர்மண்டி பகுதிகளை அடியாகக் கொண்டவர்கள். பிரெஞ்சுப் படை வீரர்கள் இரண்டு பகுதிகளிலும் சேர்ந்து போரிட்டனர். பர்கண்டி, அக்கியூட்டேன் பகுதிகளைச் சேர்ந்தோர் பிளாண்டாஜெனெட் பிரிவினருக்குக் குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்கினர்.
இந்தப் போர் 116 ஆண்டுகளாக நீடித்த போதிலும், இடையிடையே ஒப்பீட்டளவில் அமைதி நிலவிய சில காலங்களும் உண்டு. இவற்றுள் இரண்டு அமைதிக் காலங்கள் ஓரளவு நீண்டவை. இவை 1360 முதல் 1369 வரை, அடுத்தது 1389 முதல் 1415 வரையுமான காலப்பகுதிகளாகும். அமைதிக் காலப்பகுதியைக் கழித்துப் பார்க்கும்போது போர் சுமார் 81 ஆண்டுகள் நடைபெற்றுள்ளது. இறுதியில் பிளாண்டாஜெனெட் பிரிவினர் பிரான்சை விட்டுத் வெளியேற்றப்பட்ட பின்னரேப் போர் முடிவுக்கு வந்தது. எனினும், டுவா ஒப்பந்தப்படி பிரான்சின் ஆறாம் சார்லஸ் இறந்த பின்னர் ஆட்சியுரிமை இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றிக்கு என ஒப்புக் கொள்ளப்பட்டதால் இப்போர் பிளாண்டாஜெனெட் பிரிவினருக்கு ஒரு உத்தி சார்ந்த வெற்றியாக அமைந்தது. இதன்படி 1431 ஆம் ஆண்டில் ஆறாம் ஹென்றி பாரிசில் முடிசூட்டிக் கொண்டார். எனினும், 1450 ஆண்டுகளில், வால்வா பிரிவினர் பிளாண்டாஜெனெட் பிரிவினரைப் பிரான்சின் பெரும் பகுதிகளில் இருந்து வெளியேற்றுவதில் வெற்றி கண்டனர்.
இப்போரினால் பிரான்சு தேசம் மிகவும் சேதமடைந்த போதிலும், இது பிரெஞ்சுக்கரர்களிடையே தேசிய உணர்வினைத் தூண்டக் காரணமாக இருந்தது. நிலப்பிரபுத்துவ முடியாட்சியாக இருந்த பிரான்சை மக்களாட்சிக்கு கொண்டு வர இவை பெரிதும் உதவின. இது ஆங்கில மற்றும் பிரெஞ்ச் அரசர்களின் மோதலாக மட்டும் இல்லாமல், ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக்காரர்களிடையே இருக்கும் மோதலாக மாறியது. ஒருவர் மற்றவரின் மொழியினை அழிக்க முற்பட்டுள்ளனர் என்னும் வதந்தி பரவியதால், தேசிய உணர்வும், மொழிப்பற்றும் மக்களிடையே அதிகரிக்கப்பட்டது. ஆட்சியாளர்களின் மொழியாக விளங்கிய பிரெஞ்ச் மொழி இங்கிலாந்தில் வீழ்ச்சியடைய இது காரணமானது.
இப்போருடன் 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் வந்த கறுப்புச் சாவும் ஐரோப்பாவின் ஒட்டு மொத்த மக்கள் தொகையை மிகவும் குறைத்தது. எடுத்துக்காட்டாக, இப்போரின் துவக்கத்தில் பிரான்ஸ் 17 மில்லியன் மக்கள் தொகையினைக் கொன்டிருந்தது. ஆனால், நூற்றாண்டு போரின் இறுதியில் அது பாதியாகக் குறைந்தது. சில இடங்கள் குறிப்பாக மிகவும் பாதிப்புகுள்ளாயின. நார்மாண்டி தனது மக்கட்தொகையில் நான்கின் மூன்று பங்கினை இழந்தது. பாரிஸ் பகுதியில் 1328 மற்றும் 1470 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகை குறைந்த பட்சம் மூன்றில் இரண்டு பங்காகக் குறைக்கப்பட்டது என்கின்றனர்.