

நெதர்லாந்தின் புகழ்பெற்ற ஓவியர் ஜோஹன்னஸ் வெர்மீர் (Johannes Vermeer) வரைந்த 'முத்துத் தோடு அணிந்த பெண்' (Girl with a Pearl Earring) ஓவியத்தைப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. கருப்புப் பின்னணி, நீலம் மற்றும் தங்க நிறத் தலைப்பாகை, மின்னும் ஒரு பெரிய முத்துத் தோடு, எதையோ சொல்லத் துடிக்கும் இதழ்கள் என அந்தப் பெண்ணின் பார்வை பல நூற்றாண்டுகளாக உலகை வசியப்படுத்தி வருகிறது.
இத்தனை காலமும் இந்தப் பெண் யார் என்பது ஒரு பெரிய மர்மமாகவே இருந்தது. வெர்மீரின் வேலைக்காரி என்றும், அவரது மகள் என்றும் பலர் பலவிதமாகப் பேசி வந்தனர். ஆனால் இப்போது, பிரபல பிரிட்டிஷ் கலை விமர்சகர் ஆண்ட்ரூ கிரஹாம்-டிக்சன் (Andrew Graham-Dixon), இந்த மர்மப் பெண்ணின் உண்மையான அடையாளத்தைக் கண்டறிந்துள்ளதாகக் கூறி கலை உலகையே அதிர வைத்துள்ளார்!
யார் அந்த மர்மப் பெண்?
கலை வரலாற்றாசிரியர் கிரஹாம்-டிக்சன் கூற்றுப்படி, அந்தப் பெண் ஒரு கற்பனைப் பாத்திரம் அல்ல; அவர் வெர்மீரின் மிக நெருக்கமான ஆதரவாளர்களான பீட்டர் வான் ரூய்வென் மற்றும் மரியா டி க்னுய்ட் தம்பதியரின் மகள் மக்டலேனா (Magdalena) ஆவார்.
இந்த ஓவியம் வரையப்பட்ட 1665-ம் ஆண்டில் மக்டலேனாவிற்கு சுமார் 12 வயது இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. ஓவியத்தில் இருக்கும் பெண்ணின் முக அமைப்பும் ஒரு 12 வயது சிறுமிக்கு உரியதாகவே இருக்கிறது.
ஆராய்ச்சியாளர்கள் டெல்ஃப்ட் நகரில் வான் ரூய்வென் குடும்பம் வாழ்ந்த 'கோல்டன் ஈகிள்' (Golden Eagle) என்ற வீட்டின் இருப்பிடத்தைக் கண்டறிந்துள்ளனர். அந்த வீட்டின் உரிமையாளர்கள் மதச் சுதந்திரம் மற்றும் தாராளவாதக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.
அந்தச் சிறுமியின் பெயர் மக்டலேனா. இது பைபிளில் வரும் மேரி மக்டலீனை நினைவூட்டுகிறது. வான் ரூய்வென் குடும்பத்தினர் மேரி மக்டலீனைப் போற்றும் ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஓவியம் வெறும் உருவப்படம் (Portrait) மட்டுமல்ல, இது ஒரு ஆன்மீகத் தருணத்தைப் பிரதிபலிக்கிறது. ஓவியத்தில் அந்தப் பெண் திடீரெனத் திரும்பிப் பார்ப்பது போலவும், யாரிடமோ பேசத் துடிப்பது போலவும் இருப்பார்.
பைபிளின் படி, இயேசு உயிர்த்தெழுந்த பிறகு மேரி மக்டலீன் அவரை முதன்முதலில் சந்திக்கும் அந்தத் தருணத்தையே வெர்மீர் மக்டலேனாவின் முகத்தின் மூலம் காட்டியிருக்கலாம் என கிரஹாம்-டிக்சன் வாதிடுகிறார்.
ஓவியத்தில் இருக்கும் முத்து அசாதாராணமான அளவில் பெரியதாக இருக்கும். இது வெறும் அணிகலன் அல்ல; இது ஒரு குறியீடு. அந்தச் சிறுமியின் தூய்மையான ஆத்மாவையும், இறை ஒளியால் அவள் ஆன்மா மகிழ்ச்சியில் திளைப்பதையும் அந்த மின்னும் முத்து குறிப்பதாகக் கருதப்படுகிறது.
வெர்மீர் தனது வாழ்நாளில் வெறும் 36 ஓவியங்களை மட்டுமே வரைந்துள்ளார். அவர் அன்றாட வீட்டு வேலைகளைச் செய்யும் பெண்களை வரைவதில் வல்லவர். ஆனால், இந்த ஓவியம் மற்றவற்றிலிருந்து மாறுபட்டு, மிகவும் தனிப்பட்டதாகவும், ஒரு சினிமா காட்சியைப் போலவும் அமைந்துள்ளது.
1995-ல் வாஷிங்டனில் நடந்த கண்காட்சிக்குப் பிறகே இந்த ஓவியம் உலகப் புகழ் பெற்றது. பின்னர் ட்ரேசி செவாலியரின் நாவல் மற்றும் ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடித்த திரைப்படம் ஆகியவை இந்த ஓவியத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சென்றன.
ஆண்ட்ரூ கிரஹாம்-டிக்சனின் இந்தத் தகவல் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. ஒரு தரப்பினர் இது முற்றிலும் உண்மை என்று நம்பினாலும், மற்றொரு தரப்பினர் "வெர்மீர் ஒரு நிஜப் பெண்ணை வரையவில்லை, அவர் வெறும் கற்பனைப் பாத்திரமான 'ட்ரோனி' என்ற வகை ஓவியத்தையே வரைந்தார்" என்று வாதிடுகின்றனர்.
உண்மை எதுவாக இருந்தாலும், அந்தப் பெண்ணின் வசீகரப் பார்வையும், மர்மமான இதழ் அசைவும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு நம்மை வியக்க வைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.