

ஒரு நீராவி என்ஜினில் தனது சேவையை துவங்கிய இந்திய ரயில்வேயின் பயணம் பல சாதனைகளை அடைந்து தற்போது உலகின் 4 ஆவது ரயில்வே நெட்வொர்க்காக தினமும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சேவை செய்து வருகிறது. இன்றைய தினத்தில் இந்தியாவில் 10,000 க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களும், 12,000 க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் முதன்முதலாக துவங்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவின் மிக பழமையான ரயில் நிலையம் மும்பையில் நேர்த்தியான கட்டிட வடிவமைப்புடன் காட்சியளிக்கும் சத்ரபதி சிவாஜி முனையம் தான்.இந்த ரயில் நிலையத்தில் தான் இந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து 1853 ம் ஆண்டு தொடங்கியது.
அப்போது தொடங்கினாலும் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் 1878 ல் தொடங்கி 1887 ம் ஆண்டு நிறைவு பெற்றது.பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா மகாராணியின் பொன்விழாவை நினைவு கூறும் வகையில் விக்டோரியா முனையம் (Vt-victoriya Terminal) என்று பெயரிடப்பட்டது.
இது 2017 முதல் சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் என்ற பெயரில் இயங்கி வருகிறது.யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் உள்ளது.மத்திய ரயில்வேயின் மண்டல தலைமையாக செயல்படும் இந்த ரயில் முனையத்தில் 18 பிளாட்பாரங்கள் உள்ளது.
1854 ம் ஆண்டு நிறுவப்பட்ட கொல்கத்தா ஹவுரா ரயில்வே ஜங்ஷன் தான் இந்தியாவின் இரண்டாவது பழமையான ரயில் நிலையம்.கொல்கத்தாவை இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுடன் இணைக்கும் இந்த ரயில் சந்திப்பில் 23 பிளாட்பாரங்கள் உள்ளது. 1856 ம் ஆண்டு துவங்கப்பட்ட சென்னை ராயபுரம் ரயில் நிலையம்தான் இந்தியாவில் மூன்றாவதாக துவக்கப்பட்ட மிகவும் பழமையான ரயில் நிலையம்.
ஹவுரா-கல்கா மெயில் இது தான் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் இந்தியாவின் பழமையான பயணிகள் ரயிலான இது 158 ஆண்டுகளுக்கு முன்பு தனது பயணத்தைத் தொடங்கியது. இது மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஹவுராவை ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள நகரமான கல்காவுடன் இணைக்கிறது. இது ஜனவரி 1, 1866 அன்று அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது, அன்று முதல் இன்று வரை இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
ஹவுரா-பெஷாவர் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்பட்ட இந்த ரயில் முதலில் ஹவுராவிலிருந்து தொடங்கியது, அதன் இலக்கு டெல்லி, பின்னர் 1891 இல் டெல்லியிலிருந்து கல்கா வரை நீட்டிக்கப்பட்டது. ஹவுரா-கல்கா மெயில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ரயிலாகும், ஏனெனில் இது பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கியது, அப்போது இது முக்கியமாக பிரிட்டிஷ் அதிகாரிகளால் அப்போதைய இந்தியாவின் தலைநகரான கொல்கத்தாவிலிருந்து பிரிட்டிஷ் கோடைகால தலைநகரான சிம்லாவுக்கு பயணிக்கப் பயன்படுத்தப்பட்டது.
ஹவுரா-கல்கா மெயில் என்பது ரயிலின் அசல் பெயர் அல்ல, அது மூன்று முறை மாறிவிட்டது. ஆரம்பத்தில், இது கிழக்கு இந்திய ரயில்வே மெயில் என்று அழைக்கப் பட்டது, பின்னர் கல்கா மெயில் என்று மறுபெயரிடப் பட்டது. 1941 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நிர்வாகத்திடம் இருந்து தப்பிக்க தன்பாத் மாவட்டத்தில் உள்ள கோமோவிலிருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்த ரயிலில் ஏறிச் சென்றதாக கூறப்படுகின்றது.
வரலாற்றுத் தலமாக விளங்கும் ரயில் நிலையம்:
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்னோவில் அமைந்துள்ள சார்பாக் ரயில் நிலையம் லக்னோ நகரின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான ரயில் நிலையம் ஆகும்.
சார்பாக் இந்தியாவின் மிக அழகான ரயில் நிலையங்களில் ஒன்று நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான ரயில் நிலையத்தின் கட்டுமானம், முகலாய, ராஜஸ்தானி மற்றும் பிரிட்டிஷ் கட்டிடக்கலைகளின் ஒரு அழகான கலவையாகும்.சார்பாக் நிலையத்தின் அடிக்கல் 1914-ஆம் ஆண்டில் ஆயர் ஜார்ஜ் ஹெர்பர்ட்டால் நாட்டப்பட்டு , 1923-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
இக்கட்டிடமானது ஜே.எச். ஹார்னிமன் (J.H.Horniman) அவர்களால் இந்தோ-பிரிட்டிஷ் கட்டிடக்கலைப் பாணிகளின் கலவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது .1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி , கிழக்கிந்திய ரயில்வேயின் முகவரான சி.எல். கோல்வின், கட்டிடத்தின் அஸ்திவாரம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை நினைவுகூரும் விதமாக , அக்கால நாணயம் ஒன்றையும் அன்றைய செய்தித்தாள் ஒன்றையும் கொண்ட ஒரு பேழையை அதே கட்டிடத்தின் கோபுரத்தினுள் வைத்தார் .
சுதந்திரப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, மௌலானா ஆசாத் போன்ற முக்கியத் தலைவர்கள் சார்பாக் ரயில் நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். காந்திஜிக்கும் நேருவுக்கும் இடையிலான முதல் முறைசார்ந்த சந்திப்பு (26 டிசம்பர் 1916) இந்த நிலையத்தில்தான் நடைபெற்றதாக நம்பப்படுவதால் , இது ஒரு முக்கியமான வரலாற்றுத் தலமாக விளங்குகிறது.
ஆற்றின் மீது இருக்கும் ஒரே இந்திய ரயில் நிலையம்:-
டெல்லி-கொல்கத்தா-கௌஹாத்தி ரயில் பாதையில் உள்ள புதிய போங்கைகான் சந்திப்பு (NBQ), நாட்டிலேயே ஒரு தனித்துவமான ரயில் நிலையமாகும். இந்தியாவில் ஆற்றின் மீது கட்டப்பட்ட ஒரே ரயில் நிலையம் இதுவாகும். அதாவது, இந்த நிலையத்தின் நடைமேடையும் ரயில் தண்டவாளங்களும் நேரடியாக ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையம், சம்பாமட்டி ஆற்றின் துணை நதியான துனியா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.புதிய போங்கைகான் நிலையம் 1965 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த ரயில் நிலையம் வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே மண்டலத்தின் கீழ் வருகிறது, இதன் பிரிவு ரங்கியா ஆகும். இங்கிருந்து, ஒரு முக்கியமான ரயில் பாதை ரங்கியா மற்றும் காமாக்யா சந்திப்பு நோக்கிச் செல்கிறது.