அல்வானாலே திருநெல்வேலி மட்டும்தானா? அட, இத படியுங்க... ஆச்சரியப் படுவீங்க!

halwa
halwa

அல்வா (Halwa) என்றவுடன் எல்லோரும் திருநெல்வேலி என்று சொல்லி விடுகிறோம். திருநெல்வேலி அல்வா சரி! மாகிம் அல்வா, பாம்பே அல்வா, பஞ்சாபி சந்து அல்வா, திருவையாறு அசோகா அல்வா என்றெல்லாம் புகழ் பெற்ற அல்வாக்கள் சில இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா...?

அல்வா என்ற சொல், அரேபிய மொழியில் இருந்து வந்த சொல்லாகும். அரேபிய மொழியில் அல்வா எனும் சொல்லுக்கு, ‘தேவ இனிப்பு’ என்று பொருள். கோதுமை, சர்க்கரை ஆகியவற்றிலிருந்து செய்யப்படும் இனிப்பு உணவுப் பண்டம் அல்வா என்று அழைக்கப்படுகிறது. கோதுமையினால் செய்யப்படும் அல்வா தவிர முந்திாி, கேரட், பால், பீட்ரூட் போன்றவற்றால் செய்யப்படும் அல்வாக்களும் உண்டு. பொதுவாக சீனி, தேன் போன்றவற்றால் சுவையூட்டப்படுகின்றன.

1. திருநெல்வேலி அல்வா:

Tirunelveli Halwa
Tirunelveli Halwa

தமிழ்நாட்டில் அல்வா என்றாலே திருநெல்வேலி அல்வா என்று சொல்லுமளவிற்கு அதிக ருசி கொண்டது. திருநெல்வேலி அல்வாவின் அசாத்திய ருசிக்கு, தாமிரபரணி தண்ணீரின் சுவைதான் காரணம் என்று கூறப்படுகிறது. திருநெல்வேலியிலுள்ள எந்தக் கடையில் அல்வா வாங்கினாலும், அதன் சுவை நன்றாகத்தான் இருக்கும்.

இருட்டுக்கடை, சாந்தி, லெட்சுமி விலாஸ் என சில கடைகளின் அல்வா ருசியாக இருக்கும் என்று இந்த ஊரிலிருப்பவர்கள் சொல்கின்றனர். இருப்பினும், இருட்டுக் கடை அல்வாவின் ருசி அனைவராலும் விரும்பப்படுகிறது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் நுழைவாயிலுக்கு எதிரே அமைந்துள்ள இருட்டுக்கடை, 1940 ஆம் ஆண்டுகளில் இராஜஸ்தானைச் சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் தொடங்கப்பட்டது. தற்போது அவருடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் நடத்தப்படுகிறது. கடை ஆரம்பிக்கப்பட்ட நாளில், ஒரே ஒரு எண்ணெய் விளக்கு மட்டுமே இருந்திருக்கிறது. மாலை நேரத்தில்தான் திறக்கப்படுவது வழக்கம் என்பதால் இருட்டாய் இருக்கும் கடை என்பதே காலப்போக்கில் மாறி இருட்டுக்கடை என்றாகிவிட்டது. இன்றுவரை, இதற்கெனத் தனி பெயர்பலகை கூட கிடையாது.

இப்போது எண்ணெய் விளக்குக்குப் பதில் சாதாரண மின்விளக்கை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இருட்டுக்கடை அல்வாவிற்கென்று தனிச்சுவை வரக் காரணம் அல்வா செய்யப் பயன்படுத்தும் கோதுமையை இயந்திரத்தில் அரைக்காமல், கைகளால் அரைப்பதுதான் என்று சொல்கின்றனர். அந்த மாவில் சேர்க்கப்படும் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர், அந்த அல்வாவிற்கான தனி சுவையைத் தருகிறது. மேலும், இயந்திரங்களைப் பயன்படுத்தாமல், கைகளால்தான் அல்வா கிண்டுகிறார்கள் என்கின்றனர்.

2. மாகிம் அல்வா:

Mahim halwa
Mahim halwa

மும்பை மாநிலத்திலுள்ள மாகிம் என்ற பகுதியில் செயல்பட்ட தின்பண்டம் தயாரிப்பாளரான சோசி புத்தகாக்கா என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இனிப்பு அல்வா ஒன்று இருக்கிறது. மாகிமில் தயாரிக்கப்பட்ட இந்த அல்வாவிற்கு, அந்தப் பகுதியின் பெயராகிய மாகிம் அல்வா (Mahim Halwa) என்று பெயர் வந்துவிட்டது.

இதையும் படியுங்கள்:
திருநெல்வேலி அல்வா வந்த கதை தெரியுமா?
halwa

இந்த அல்வாவில் ஐசிங் சர்க்கரை தெளிக்கப்படுவதால் இதை பனிக்கட்டி அல்வா என்றும் சொல்வதுண்டு. இனிப்பு மாவின் மெல்லிய அடுக்குகளின் தனித்தன்மை வாய்ந்த தின்பண்டமாக சிறிய சதுரங்களில் அழுத்தப்பட்டு, கொழுப்பு தடவிய காகிதத் தாள்களால் பிரிக்கப்பட்டு பாரம்பரியமாக இந்த அல்வா தயாரிக்கப்படுகிறது. இப்போதெல்லாம், இந்த மெல்லிய இனிப்புத் தாள்கள் வெவ்வேறு நிறங்கள் மற்றும் சுவைகளைக் கொண்டுள்ளன. மாஹிம் அல்வா மிகவும் உடையக்கூடியதாக இருப்பதால், அது பெரும்பாலும் துண்டுகளுக்கு இடையில் வெண்ணெய் காகிதத்தால் அடுக்கி வைக்கப்படுகிறது. மாஹிம் அல்வாவிற்கு மஞ்சள் நிறத்தை அளிக்க குங்குமப்பூ சேர்க்கப்படுகிறது.

3. பாம்பே அல்வா:

Bombay Ice Halwa
Bombay Ice Halwa

மும்பை நகரில் பிரபலமான இன்னொரு அல்வா இருக்கிறது. அதன் பெயர் பாம்பே அல்வா. இந்த அல்வா கராச்சி அல்வா அல்லது பாம்பே கராச்சி அல்வா என்றும் அழைக்கப்படுகிறது. சோள மாவு, தண்ணீர், வெண்ணெய் அல்லது நெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றால் ஆன பாம்பே அல்வா, ஆரஞ்சு, சிவப்பு அல்லது பச்சை நிறத்திலிருக்கும். மேலும் ஏலக்காய் மற்றும் நெய்யுடன் சேர்த்து தயாரிக்கப்படும் போது சுவையாக இருக்கும். இது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் தன்மையுடையது.

1896ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரத்தில், பஞ்சாபி காத்ரியைச் சேர்ந்த சந்துலால் பாக்லால் என்பவரால் நிறுவப்பட்டது. பஞ்சாபி சந்து அல்வா கராச்சிவாலா (Punjabi Chandu Halwai Karachiwala) என்ற கடைக்காரர்களால் உருவாக்கப்பெற்ற இந்த அல்வா, கராச்சி அல்வா என்று அழைக்கப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, கராச்சியிலிருந்து குடிபெயர்ந்த இந்த இனிப்பு தயாரிப்பு நிறுவனம், கராச்சி அல்வாவை பம்பாய்க்கு (தற்போது மும்பை) கொண்டு வந்து பிரபலப்படுத்திய பின்பு, இந்த அல்வாவிற்கு பாம்பே அல்வா என்ற பெயர் ஏற்பட்டது. தற்போதைய மும்பை, முன்பு பம்பாய் என்று அழைக்கப்பட்டது.

4. திருவையாறு அசோகா அல்வா:

Ashoka Halwa
Ashoka Halwa

தமிழ்நாட்டின் திருவையாறு பகுதியில் இருந்து தயாரிக்கப்படும் பாரம்பரிய அல்வா, அங்குள்ள மக்களால் அசோகா அல்லது அசோகா இனிப்பு என்று அழைக்கப்படுகிறது . அசோகா என்பது உண்மையான அல்வா அல்ல, பொதுவாக இது ஒரு இனிப்பாகக் கருதப்படுகிறது. இந்த இனிப்பை உருவாக்கியவர் யார்? குறிப்பாக, இது ஏன் அசோக அல்வா என்று அழைக்கப்படுகிறது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. திருவையாற்றில் வசித்த ராமு ஐயர் என்பவரால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த இனிப்பு, பாசிப்பருப்பு, சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு சுவையான இனிப்பு வகையாகும்.

இதையும் படியுங்கள்:
புத்தரின் புனித நகைகள்: ஏன் ஏலம் விடப்பட்டது? இந்தியா ஏன் தடுத்தது?
halwa

குறிப்பாக தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளைச் சேர்ந்தவர்களின் திருமணத்தின் போது, அளிக்கப்படும் உணவுகளில் ஒன்றாக அசோகா இனிப்பு இருக்கும். இந்த இனிப்பு பெரும்பான்மையாக, கடைகளில் விற்பனைக்குக் கிடைப்பதில்லை. திருவையாற்றிலிருக்கும் சில இனிப்புக் கடைகளில் மட்டுமே இந்த இனிப்பு கிடைக்கிறது.

திருநெல்வேலி அல்வா சுவையில் மட்டுமே கட்டுண்டு கிடக்கும் அனைவரும், மாகிம் அல்வா, பாம்பே அல்வா, திருவையாறு அசோகா அல்வா என்று அனைத்து வகையான அல்வாக்களையும் சாப்பிட்டு, அதன் சுவையையும் அறிந்து கொள்ளுங்கள்...!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com