

வரலாற்றில் "செங்கிஸ் கான்" என்ற பெயரைக் கேட்டாலே எதிரி நாட்டு மன்னர்களுக்கு குலை நடுங்கும். ஆசியாவில் தொடங்கி ஐரோப்பா வரை குதிரையிலேயே சென்று பாதி உலகத்தை தன் காலடியில் கொண்டு வந்தவர் அவர். ஆனால், இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட செங்கிஸ் கான் எப்படிப்பட்டவர், அவர் உண்மையில் எப்படி இருப்பார், அவருடைய சமாதி எங்கே இருக்கிறது, போன்ற பல கேள்விகளுக்கு இன்றும் விடையில்லை. இந்தப் பதிவில் செங்கிஸ் கான் பற்றிய 5 மிரளவைக்கும் உண்மைகளைப் பார்ப்போம்.
1. முகம் தெரியாத மன்னன்!
இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட செங்கிஸ் கானின் உண்மையான உருவம் எப்படி இருக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆம், அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய உருவம் பொறிக்கப்பட்ட ஓவியங்களோ அல்லது சிலைகளோ செதுக்கப்படவில்லை. அவர் இறந்த பிறகு வரலாற்றாசிரியர்கள் எழுதிய குறிப்புகளை வைத்துத் தான் இன்று நாம் பார்க்கும் செங்கிஸ் கானின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
2. 13 வயதில் செய்த விபரீதம்!
செங்கிஸ் கான் சிறுவயதில் இருந்தே மிகுந்த கோபக்காரராகவும், எதற்கும் துணிந்தவராகவும் இருந்துள்ளார். அவருக்கு 13 வயது இருக்கும்போது, ஒரு சாதாரண சாப்பாட்டு விஷயத்திற்காகத் தன் சொந்த சகோதரனையே கொலை செய்துள்ளார். வேட்டையாடி கொண்டு வந்த உணவைப் பங்கிடுவதில் அவருக்கும் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரருக்கும் சண்டை வந்துள்ளது. அந்தச் சண்டையின் முடிவில், கோபத்தின் உச்சிக்குச் சென்ற செங்கிஸ் கான், தன் சகோதரனைக் கொன்றுவிட்டார்.
3. கூரியர் சர்வீஸ்!
இன்று நாம் பயன்படுத்தும் தபால் மற்றும் கூரியர் சேவைகளுக்கு முன்னோடி செங்கிஸ் கான் தான் என்று சொன்னால் மிகையாகாது. அந்தக்காலத்திலேயே "யாம்" (Yam) என்ற பெயரில் ஒரு மிகச்சிறந்த தகவல் தொடர்பு அமைப்பை அவர் உருவாக்கியிருந்தார். இதற்காக ஆங்காங்கே குதிரை லாயங்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் அமைக்கப்பட்டன. ஒரு செய்தியை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்ல, ஒரு குதிரை வீரர் வேகமாகச் சென்று அடுத்த இடத்தில் இருக்கும் வீரரிடம் செய்தியை ஒப்படைப்பார். இப்படிச் சங்கிலித் தொடர் போலச் செய்திகள் மிக வேகமாகப் பரிமாறப்பட்டன.
4. உலகின் மிகப்பெரிய குடும்பஸ்தர்!
உலகில் உள்ள ஆண்களில், ஒவ்வொரு 200 பேரில் ஒருவர் செங்கிஸ் கானின் நேரடி வாரிசாக இருக்க வாய்ப்புள்ளது என்று ஒரு மரபணு ஆய்வு கூறுகிறது. அதாவது உலக மக்கள் தொகையில் 0.5% பேர் இவருடைய டிஎன்ஏ-வைக் கொண்டுள்ளனர். அவர் சென்ற இடமெல்லாம் பல பெண்களைத் திருமணம் செய்து கொண்டதால், அவருக்குப் ஏராளமான குழந்தைகள் இருந்தனர். இது வரலாற்றில் ஒரு வியக்கத்தக்க புள்ளிவிவரமாகும்.
5. மரணத்திலும் மர்மம்!
செங்கிஸ் கான் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு மர்மமானதோ, அதைவிட மர்மமானது அவருடைய மரணம். அவர் எங்கே புதைக்கப்பட்டார் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது. அவர் இறந்த பிறகு, அவருடைய உடல் ஒரு ரகசியமான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்தப் பாதையில் எதிர்ப்பட்ட அத்தனை பேரையும் அவருடைய படைவீரர்கள் கொன்று குவித்தனர்.
சமாதி கட்டியவர்களையும் கொன்றுவிட்டனர். கடைசியாக, அந்தச் சமாதி இருக்கும் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி, அதன் மீது ஆயிரக் கணக்கான குதிரைகளை ஓடவிட்டுத் தரைமட்டமாக்கினர். சிலர் ஒரு நதியின் போக்கையே மாற்றி சமாதி மீது பாயவிட்டதாகவும் கூறப்படுகிறது.
செங்கிஸ் கான் ஒரு கொடூரமான சர்வாதிகாரியாக அறியப்பட்டாலும், நிர்வாகத் திறமையிலும், போர் வியூகத்திலும் அவருக்கு நிகர் அவரே. வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு பெயராக செங்கிஸ் கான் நிலைத்து நிற்பதற்கு, இந்த ஆச்சரியமான உண்மைகளே சாட்சி.