

பளபளப்பான தோற்றம், தொடுவதற்கு குளிர்ச்சி, நுட்பமான வடிவமைப்பு இப்படி ஒரு பாரம்பரியக் கலையை பற்றித் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். இந்தியாவின் மிகவும் பிரபலமான பாரம்பரியக் கைவினைப் பொருட்களில் 'ப்ளூ பாட்டரி' (Blue Pottery)க்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. இதன் கவர்ச்சிகரமான அழகைத் தாண்டி, இதற்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு, தனித்துவமான தயாரிப்பு நுட்பங்கள் மற்றும் தலைமுறைகளாக இந்தக் கலையைக் காத்து வரும் கலைஞர்களின் சமூகம் உள்ளது.
பாரசீகத்தில் பிறந்து ஜெய்ப்பூரில் வளர்ந்த கலை:
'ப்ளூ பாட்டரி' கலையானது பாரசீகத்தில் (Persia) தோன்றிய கலையாகும். இது முகலாயர் காலத்தில், அதாவது 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் வந்ததாக நம்பப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில், பாரசீகம், துருக்கி மற்றும் இந்திய கலாச்சாரங்களின் கலவையாக உருவாகியது. இக்கலை, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நிரந்தர இல்லத்தைக் கண்டது. இன்று, ஜெய்ப்பூர்தான் இந்திய ப்ளூ பாட்டரியின் மையமாகத் திகழ்கிறது.
சாதாரண மண்பாண்டங்களைப் போலல்லாமல், இந்த ப்ளூ பாட்டரி களிமண் (Clay) அல்லாத பொருளை அடிப்படையாகக் கொண்டது. இது எளிதில் உடையக்கூடியது என்றாலும், தலைமுறைகள் கடந்து, நவீன ரசனைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு இன்றும் செழித்து வருகிறது.
தனித்துவமான மூலப்பொருட்களின் இரகசியம்:
ப்ளூ பாட்டரியின் தனித்தன்மைக்கு முக்கிய காரணம், அதன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மரபுக்கு மாறான மூலப்பொருட்கள்தான்.
பாரம்பரிய களிமண்ணுக்குப் பதிலாக குவார்ட்ஸ் கல் தூள் (Quartz Stone Powder), கண்ணாடி தூள் (Glass Powder), முல்தானி மட்டி (Fuller’s Earth or Multani mitti), நீல நிறத்தை அளிக்கும் கோபால்ட் ஆக்சைடு சாயம் போன்றவை இந்த ப்ளூ பாட்டரியின் மூலப்பொருள்களாகும்.
இந்த தனித்துவமான கலவைதான் ப்ளூ பாட்டரிக்கு அதன் பிரத்தேயேகமான தோற்றத்தை வழங்குகிறது.
ப்ளூ பாட்டரி உருவாக்கப்படுவது எப்படி?
முதலில், உலர்ந்த பொருட்கள் அனைத்தும் மிக நுண்ணியதாக அரைக்கப்பட்டு, தண்ணீருடன் கலந்து, மென்மையான, மீள் தன்மை கொண்ட மாவுகட்டியைப் போல் பிசையப்படுகின்றன. கலைஞர்கள் இந்த மாவைக் கொண்டு கைமுறையாகவோ அல்லது அச்சுகளிலோ விரும்பிய வடிவத்தை உருவாக்குகிறார்கள். பின்னர், விரிசல் விழுவதைத் தடுக்க, அவற்றை மெதுவாகக் காற்றில் உலர வைக்கிறார்கள்.
உலர்ந்த பின், முதன்மையாக கோபால்ட் நீலம் மற்றும் பச்சை, மஞ்சள், பழுப்பு போன்ற இயற்கையான சாயங்களைக் கொண்டு ஓவியம் தீட்டப்படுகிறது. இந்த ஓவியங்கள் பாரம்பரியமாக மலர், விலங்கு உருவங்கள் மற்றும் வடிவியல் கோடுகளைக் கொண்டிருக்கும்.
அடுத்து, ஒரு தனித்துவமான பளபளப்பு (Glaze) பூச்சு தயாரிக்கப்படுகிறது. இதில் பொடியாக்கப்பட்ட கண்ணாடி, போராக்ஸ், துத்தநாக ஆக்ஸைடு போன்ற வேதிப்பொருட்களைச் சூடாக்கி, பின் குளிர்ந்த நீரில் உடைத்து அரைக்கப்படுகிறது. இந்த பூச்சு, ஓவியம் தீட்டப்பட்ட பொருட்களின் மீது பூசப்பட்டு, 800-850°C வெப்பநிலையில் சூளையில் சுடப்படுகிறது. இந்த செயல்முறைதான் தயாரிப்புக்கு நீடித்த உழைப்பையும், பளபளப்பையும் வழங்குகிறது.
பாரம்பரியத்தில் வேரூன்றியிருந்தாலும், இன்றைய கலைஞர்கள் புதிய வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் நவீன பயன்பாடுகளை கொண்டு இந்த அழகிய கலையை உலகெங்கிலும் பிரபலப்படுத்தி வருகின்றனர்.