

இசைக் கலைஞரைச் சுற்றி அரை வட்ட வடிவில் (ஸெமி சர்க்கிள்), நீரால் நிரப்பப்பட்ட பீங்கான் கிண்ணங்கள் வைக்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு கிண்ணத்திலும் நீரின் அளவு சற்றே வேறுபட்டிருக்கும். இக்கிண்ணங்களின் விளிம்புகளை தனது கைகளிலுள்ள குச்சிகளால் தட்டி கலைஞர் ஒலி எழுப்புவார்.
நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம் இசை) என இந்த இசைக்கருவி தமிழில் அழைக்கப்படுகிறது.
ஜலதரங்கத்திற்கு "உதக வாத்தியம்' எனும் பெயரும் உண்டு. அறுபத்து நான்கு கலைகளில், ஜலதரங்க வாத்தியமும் ஒன்றாகும். வயலின், மிருதங்கம் ஆகிய இசைக் கருவிகளைத் துணைக்கருவிகளாகக் கொண்டு ஜலதரங்க இசைக் கச்சேரிகள் நடைபெறுகின்றன.
பண்டையக் காலத்தில் ஜலதரங்கத்திற்கு வெண்கலக் கிண்ணங்களைப் பயன்படுத்தினர். இன்று பீங்கான் கோப்பைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதை வாசிப்பவர், வெவ்வேறு ஸ்வரங்களை உருவாக்கும் பீங்கான் கோப்பைகளைத் தம் முன்னால் அரைவட்டமாக வைத்துக் கொள்வார்.
இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாகக் கோப்பைகளின் சுருதி உயர்ந்துகொண்டே போகும். இவ்வாறு 16 கோப்பைகள் இருக்கும். குறிப்பிட்ட. ராகத்திற்கு வேண்டியவாறு கோப்பைகளின் சுருதியைக் கூட்டுவார்கள். கோப்பைகளில் வராத ஸ்வரங்களுக்கு, கோப்பைகளைச் சுருதி சேர்த்து, அவற்றை அரை வட்டத்திற்கு வெளியே அந்தந்தக் கிண்ணத்திற்கு அருகில் வைப்பார்கள்.
வாசிக்கும் ராகத்திற்கு ஏற்ப, வேண்டிய கோப்பைகளை வெளிப்புறத்திலிருந்து உட்புறம் அரைவட்டத்தில் வைத்து, வேண்டாத கோப்பைகளை வெளியே நகர்த்தி விடுவார்கள். இவ்வாறு செய்வதால் விரைவில் வெவ்வேறு இராகங்களில் பாடல்களை வாசிக்க முடியும்.
கோப்பையிலுள்ள நீர் பல வழிகளில் பயன்படுகிறது. சீராக சுருதி சேர்த்துக் கொள்வதற்கும், இனிய நாதத்தை உண்டாக்குவதற்கும் இது உதவுகிறது. நீர்மட்டத்தின் மேல் இலேசாகத் தட்டினால் இசைக்கு வேண்டிய கமகங்கள் உண்டாகும். மிக வேகமாகக் கோப்பைகளைத் தட்டி வாசிக்கும்போது, அவை புரண்டுவிடாமல் இருக்கவும் அவற்றிலுள்ள நீர் உதவுகிறது.
ஜலதரங்கத்தை அருமையாக வாசிக்கும் சங்கீத வித்வான், நடனக் கலைஞர், ஜலதரங்க கலைஞர், ஆசிரியர் மற்றும் ப்ரசன்னாலயா அகாடமி ஆஃப் மியூசிக் நடன அமைப்பின் நிறுவனராகத் திகழ்பவருமாகிய கலா ஸ்ரீனிவாசன் பகிர்ந்த சில விவரங்கள்:
"நான் மறைந்த கலைமாமணி திருமதி சீதா துரை ஸ்வாமியின் புதல்வி. என்னுடைய முதல் மற்றும் ஒரே குரு தாயார்தான். அந்தக் காலத்திலேயே, மியூசிக் அகாடமியில் தங்கப் பதக்கம் பெற்றவர்.
2001 ஆம் ஆண்டில் கலைமாமணி விருது பெற்றவர். ஜலதரங்கத்தைக் கற்று அருமையாக வாசித்தவர். 1977 ஆம் வருடம் தாயாருடன் சேர்ந்து ஜலதரங்கம் வாசித்தேன். இது என்னுடைய 49 ஆவது வருடம்.
ஆய கலைகள் 64 -இல் ஒன்றாகிய ஜலதரங்கம், இந்திய தாள இசைக் கருவியாக விளங்குகிறது. இதற்கு உபயோகப் படுத்தப்படும் பீங்கான் கிண்ணம், ஒலி ஊடுருவக்கூடிய தன்மை கொண்ட கலவையுடன் இருப்பது அவசியம். அளவு, வடிவம், கப் கவரின் தடிமன், விளிம்பின் அளவு போன்றவைகள் குணங்களாகும். வாங்குகையில், ஒலியின் தரம், அதிர்வு என எல்லாவற்றையும் பரிசோதித்து வாங்க வேண்டும்.
இசைக் குடும்பத்தில் பிறந்ததால், சிறு வயதிலேயே, தாயாரின் வழிகாட்டலில், ஜலதரங்கம் வாசிக்க ஆரம்பித்தது இறையருள் எனலாம். எங்கள் மகன், மகள், என்னுடைய பெரிய சகோதரர் மற்றும் என்னுடன் இரட்டையாகப் பிறந்த சகோதரி ஆகி நால்வரும் ஜலதரங்கம் வாசித்து வருவது பெருமைக்குரிய விஷயமாகும். ஜலதரங்கக் கலையை பாதுகாத்து மேலும் மேலும் வளர்க்கவேண்டும்".
ஜலதரங்கம் என்பது ஒரு தாள மற்றும் சுருதி சார்ந்த வாத்தியம் என்பதால், இதற்கு கர்நாடக இசையின் அடிப்படை மிக முக்கியம். அடிப்படைக் கோட்பாடுகளாகிய கர்நாடக இசையின் ஸ்வரங்கள் மற்றும் தாள வரிசைகள் தெரிந்திருப்பது அவசியம்.
கிண்ணங்களில், நீரின் அளவைக் கூட்டியோ அல்லது குறைத்தோ சரியான சுருதியை கொண்டு வரும் நுட்பம் கற்க வேண்டும். மூங்கில் அல்லது மரக்குச்சிகளைப் பயன்படுத்தி கிண்ணங்களின் விளிம்புகளில் மென்மையாகத் தட்டி நாதத்தை எழுப்பும் முறை, கமகம் மற்றும் கீர்த்தனைகள், எளிய பாடல்கள் முதல் கடினமான கமகம் நிறைந்த கர்நாடக இசை கீர்த்தனைகளை வாசிக்கும் பயிற்சி ஆகியவைகளைப்பெற குறைந்த பட்சம் 3 - 4 ஆண்டுகள் தேவைப்படும்.