குடுமியான்மலை இசைக் கல்வெட்டு: 1300 ஆண்டு பழமையான பல்லவர் கால இசை அதிசயம்!

புதுக்கோட்டை குடுமியான்மலையில் 1,300 ஆண்டுகளாக உறைந்திருக்கும் பல்லவர் கால இசைக் கல்வெட்டின் வியப்பூட்டும் ரகசியங்கள்.
இசைக் கல்வெட்டு - Kudumiyanmalai Music Inscription,
இசைக் கல்வெட்டு - Kudumiyanmalai Music Inscription,
ஷாராஜ்

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 7 சிறுகதைத் தொகுப்புகள், 6 நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூல், ஒரு கட்டுரை நூல், ஒரு ஆய்வுக் கட்டுரை நூல், 5 சிறார் கதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. சிறுகதை மற்றும் நாவல் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். பொருளாதாரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் இவரது கட்டுரைகள் மற்றும் சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கல்கி ஆன்லைனில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

Updated on: 

இசை என்பது காற்றில் தவழ்ந்து செவிகளை நிறைத்து, மறுகணமே கரைந்து போகக்கூடிய சூட்சுமக் கலை. ஒலிப்பதிவுக் கருவிகளோ, அச்சு இயந்திரங்களோ, காகித ஆவணங்களோ கண்டுபிடிக்கப்படாத பண்டைய காலத்தில் அந்த இசை ஒலிகளைக் கருங்கல் பாறையில் செதுக்கி, தலைமுறை கடந்து நிலைக்க வைத்த ஒரு வரலாற்று அதிசயம் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கிறது என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா?

புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில், பச்சை வயல்வெளிகள் கொண்ட கிராமியச் சூழலுக்கிடையே கம்பீரமாக உயர்ந்து நிற்கும் ஒற்றைக் கல் மலைக் குன்றான குடுமியான்மலையில்தான் அந்தக் காலப் பெட்டகம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மண்ணின் வரலாற்று அடையாளங்களாக திருமயம் கோட்டையும், கொடும்பாளூர் மூவர் கோயிலும் திகழ்வது தமிழக அளவில் முக்கியமானது. அவ்வூரில் உள்ள சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் உலகக் கலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அதற்கு அடுத்தபடியாக அற்புதமான சிற்பக் கலைச் சிறப்புகள் கொண்டது குடுமியான்மலை. அதோடு, உலக இசை வரலாற்றில் தமிழ் மண்ணுக்குத் தனித்துவமான அரியணையைப் பெற்றுத்தந்த தனிச்சிறப்பும் அதற்கு உண்டு.

சுமார் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் இசை மரபின் இலக்கணத்தையும், ஸ்வரக் கோர்வைகளையும் பாறையில் செதுக்கி வைத்திருக்கும் இசைக் கல்வெட்டு இங்குள்ளது. இது இந்தியத் துணைக்கண்டத்திலேயே வேறெங்கும் காணக் கிடைக்காத ஒப்பற்ற பொக்கிஷம்.

இதையும் படியுங்கள்:
இறந்த உடலையும் உயிர்ப்புடன் வைக்கும் 'பறை' - ஆதி தமிழன் தந்த இசை!
இசைக் கல்வெட்டு - Kudumiyanmalai Music Inscription,

பாறையில் உறைந்திருக்கும் பல்லவர் கால நாதம்

குடுமியான்மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பிரம்மாண்டமான சிகாகிரீஸ்வரர் திருக்கோயிலுக்குப் பின்புறம், மலையின் சரிவில் 'மேலக்கோயில்' எனப்படும் பழமையான குடைவரைக்கோயில் அமைந்துள்ளது. இதன் அருகே, பாறையில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப் பட்டுள்ள நான்கு அடி உயர இடம்புரி விநாயகருக்குப் பக்கத்தில்தான் அந்த இசைக் கல்வெட்டு காட்சியளிக்கிறது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவப் பேரரசன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் இக்கல்வெட்டு செதுக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிப் படுத்துகின்றனர். கலைகளின் காதலனாக விளங்கிய மகேந்திரவர்மன் 'சித்திரகரபுலி' (ஓவியர்களில் சிறந்தவன்) மற்றும் 'விசித்திரசித்தன்' என்ற பட்டங்களுடன் அழைக்கப்பட்டவன்.

அவனது இசை குருவான ருத்ராச்சாரியாரின் வழிகாட்டுதலில், வருங்காலத் தலைமுறையினர் இசை இலக்கணத்தைத் தவறின்றிப் பயில வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இக்கல்வெட்டு உருவாக்கப் பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டின் தொடக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ள மங்கள வாசகத்தில், "மகேசுவரனுக்கு மகா பக்தனாகவும், ருத்ராச்சாரியாரின் சீடராகவும் இருந்த மன்னனால், இசை கற்போரின் நலனுக்காக இவ்விசைக்குறிப்புகள் தொகுக்கப்பட்டன" என்று குறிப்பிடப்பட்டிருப்பது, அக்காலத்தில் இசைக்கு அளிக்கப்பட்ட தெய்வீக அந்தஸ்தைப் பறைசாற்றுகிறது.

இசைக் கல்வெட்டு - Kudumiyanmalai Music Inscription,
இசைக் கல்வெட்டு - Kudumiyanmalai Music Inscription,

ஏழு பிரிவுகளும் நுண்ணிய சுருதி ரகசியங்களும்

பல்லவ கிரந்த எழுத்துகளில், சமஸ்கிருத மொழியில் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு, மொத்தம் ஏழு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இன்றைய கர்நாடக மற்றும் இந்துஸ்தானி இசைகளுக்கு ஆதாரமாக விளங்கும் 'ச, ரி, க, ம, ப, த, நி' என்னும் ஏழு சுவரங்களின் பண்டைய வடிவங்களும், அவற்றின் நுட்பமான அசைவுகளும் நான்கு நான்கு ஸ்வரங்களாகக் கட்டம் கட்டி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் வியப்பூட்டும் இசை அறிவியல் நுட்பம் ஒன்று ஒளிந்துள்ளது. ஒவ்வொரு ஸ்வர எழுத்துடனும் 'அ, இ, உ, எ' ஆகிய உயிரெழுத்துகள் இணைக்கப்பட்டிருப்பதோடு, சில எழுத்துகளின் மேல் புள்ளிகளும் இடப்பட்டுள்ளன.

ஸ்வரத்தின் ஒலிப்பு நிலையையும், அதன் மாற்றத்தையும் குறிக்கும் குறியீடுகளே இவை. இன்றைய மேற்கத்திய இசையில் பயன்படுத்தப்படும் 'ஸ்டாஃப் நொடேஷன்' (Staff Notation) முறை உருவாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஒலியின் நுண்ணிய அலைவரிசைகளை எழுத்துகளாலும் புள்ளிகளாலும் பாறையில் பதிவு செய்த தமிழர் அறிவு பிரமிக்க வைக்கிறது.

பண்டைய இந்திய இசை மரபில் 'கிராமம்' எனப்படும் அடிப்படை ஸ்ருதி நிலைகள் வழக்கில் இருந்தன. மத்திம கிராமம், ஷட்ஜ கிராமம், சாதாரித கிராமம், பஞ்சம கிராமம், கைசிக மத்திமம், ஷாடவம், கைசிகம் ஆகிய ஏழு வகையான ஸ்வரகாமங்களுக்குரிய ஸ்வரக் கோர்வைகள் இதில் துல்லியமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. பரதரின் நாட்டிய சாஸ்திரம் மற்றும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பண்டைய இசை நுணுக்கங்களுக்குக் கிடைத்த நேரடிக் கல்வெட்டுச் சான்றாக இது திகழ்கிறது.

பரிவாதினி வீணையும் பழந்தமிழ் முத்திரையும்

இக்கல்வெட்டின் மற்றொரு வியப்பூட்டும் சிறப்பு, இது வெறும் வாய்ப்பாட்டுக்கான குறிப்புகளாக மட்டும் அமையாமல், வாத்திய இசைக்கான பயிற்சிக் கையேடாகவும் இருப்பதுதான். குடைவரைக் கோயிலின் கருவறைக்கு அருகிலும், வெளிச்சம் குறைவாக உள்ள உட்பகுதியிலும் 'பரிவாதினி' எனப்படும் பண்டைய ஏழு நரம்புகள் கொண்ட வீணையை வாசிப்பதற்கான பிரத்யேக இசைக்குறிப்புகள் செதுக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
மூர் மார்க்கெட் முதல் பட்டாணி சுண்டல் வரை... மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!
இசைக் கல்வெட்டு - Kudumiyanmalai Music Inscription,

பகலிலும் இருளடைந்து காணப்படும் குடைவரைவகத்துக்குள், இந்த நுட்பமான ஸ்வரக் கோர்வைகளைச் சிற்பிகள் எப்படிப் பாறையில் வடித்திருக்கக் கூடும் என்கிற ஆச்சரியம் சிலருக்காவது எழும். அக்காலத்தில், எண்ணெய் விளக்குகள் மற்றும் பந்தங்களின் வெளிச்சத்தில்தான் இதைச் செய்திருக்க முடியும்.

சமஸ்கிருத மொழியில் கிரந்த எழுத்துகளில் அமைந்த இக்கல்வெட்டின் இறுதியில், "பரிவாதினிக்கு உரியவை" என்ற பொருள்படும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. ஏழு நரம்புகள் கொண்ட பரிவாதினி வீணைக்கும், எட்டு ஸ்வர நிலைகளுக்கும் (சப்த ஸ்வரங்கள் மற்றும் மேல் சட்ஜம்) இந்த இசைக்குறிப்புகள் உரியவை என்பதைத் தெளிவுபடுத்தும் இந்த வரி, பல்லவர் காலத்தில் தமிழ் இசை பெற்றிருந்த உன்னத இடத்தைப் பறைசாற்றுகிறது.

இக்கல்வெட்டு அமைந்துள்ள இந்தப் பாறைப் பகுதி, அக்காலத்தில் மாணவர்கள் பாறைக் குறிப்புகளைப் பார்த்து இசை பயிலும் ஒரு திறந்தவெளி இசைப் பள்ளியாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் கணிப்பு.

இதே காலகட்டத்தில், அருகிலுள்ள திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் பாறையிலும் இதேபோன்றதொரு இசைக் கல்வெட்டு வெட்டப் பட்டதாகவும், 13-ஆம் நூற்றாண்டில் அழிக்கப் பட்டதாகவும் வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அந்த வகையில், சிதையாமல் முழுமையாக எஞ்சியிருக்கும் ஒரே வரலாற்று ஆவணம் குடுமியான்மலை மட்டுமே.

மேலும், கோயிலின் சௌந்தரநாயகி அம்மன் சன்னதி மண்டபத்தில் நாட்டிய நிகழ்வுகள் நடந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகளும், இத்தலம் ஒரு முழுமையான இசை மற்றும் நாட்டியக் கலைக்கூடமாக விளங்கியதை உறுதிப்படுத்துகின்றன.

சிற்பக் கலையின் உச்சம் காட்டும் சிகாகிரீஸ்வரர் ஆலயம் இசை வரலாற்றுக்கு அப்பால், சிற்பக் கலையின் உச்சத்தைக் காண விரும்புவோருக்கும் குடுமியான்மலை ஒரு கலைப் பெருவிருந்து. பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர் மற்றும் விஜயநகரப் பேரரசுகளின் கட்டடக் கலைச் சங்கமமாக இங்குள்ள சிகாகிரீஸ்வரர் கோயில் விளங்குகிறது.

இசைக் கல்வெட்டின் அருகே, மலையைச் சுமார் முப்பது அடி ஆழத்திற்குக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலின் கருவறையில் சதுர வடிவ ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமும், மலையிலேயே குடையப்பட்ட நந்தியும் அமைந்துள்ளன. இக்குடைவரை வாயிலில் நிற்கும் துவாரபாலகர்களில் ஒருவர் புன்முறுவலோடும், மற்றொருவர் உக்கிரமான கோபத்தோடும் செதுக்கப்பட்டிருப்பது சிற்பிகளின் கற்பனை வளத்திற்குச் சான்று.

கோயிலின் இருபுறமும் துல்லியமான சமச்சீர் அமைப்புடன் கூடிய ஆயிரங்கால் மண்டபங்களும், இருபத்து நான்கு கலைநயமிக்க தூண்களைக் கொண்ட சொக்கட்டான் மண்டபமும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

சிவாலயமாக இருந்தபோதிலும், இங்குள்ள பதினான்கு தூண்களில் ஆளுயர அளவில் செதுக்கப்பட்டுள்ள திருமாலின் தசாவதாரச் சிற்பங்கள் கண்களைக் கவர்கின்றன. மச்ச, கூர்ம, வராக அவதாரக் காட்சிகளும், ராமாயணக் கதாபாத்திரங்களான அனுமன், வாலி, சுக்ரீவன் சிற்பங்களும், தூண்களைத் தாங்கும் உத்தரம் வரை அரை அடி அளவிலான நுண்ணிய வேலைப் பாடுகளும் சமய நல்லிணக்கத்தையும் சிற்ப நுட்பத்தையும் ஒருசேரப் பறைசாற்றுகின்றன.

வரலாறு சுமக்கும் மலைச்சிகரங்கள்

மலையின் உயரமான பாறையில் நந்தி வாகனத்தில் சிவபெருமானும் பார்வதியும் அமர்ந்திருக்க, அவர்களின் இருபுறமும் தலா முப்பத்திரண்டு வீதம் அறுபத்து நான்கு நாயன்மார்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருப்பது வேறெங்கும் காண முடியாத அற்புதக் காட்சியாகும்.

கோயிலின் மதில் சுவர்களில் காணப்படும் சோழர் காலத்தைச் சேர்ந்த நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் அக்காலச் சமூக, பொருளாதார வரலாற்றைப் பேசுகின்றன. மலை உச்சியில் முருகன் மற்றும் விநாயகர் சன்னதிகளும், மலை முகப்பில் பண்டைய சமண முனிவர்கள் தங்கியிருந்த கற்படுக்கைகளும் இப்பகுதியின் பன்முக வரலாற்றிற்குச் சாட்சியாக நிற்கின்றன.

இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் குடுமியான்மலை, வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல; அது பழந்தமிழ் இசையின்

இலக்கணத்தையும், சிற்பக் கலையின் உச்சத்தையும் கருங்கல்லில் செதுக்கி வைத்திருக்கும் மகத்தான காலப் பெட்டகம்.

இதையும் படியுங்கள்:
நம்ப முடியாத தெய்யம் சடங்குகள்: முகமூடிக்கு பின்னால் நடக்கும் அந்த ஆன்மிக மாற்றம் என்ன?
இசைக் கல்வெட்டு - Kudumiyanmalai Music Inscription,

சான்று இணைப்புகள்:

https://www.sahapedia.org/kudumiyanmalai-inscriptions https://puratattva.in/kudumiyanmalai-the-lord-with-pony-tail/ https://www.news18.com/news/india/study-uncovers-details-of-cave-temple-architecture-351225.html https://ecoheritage.cpreec.org/kudumiyanmalai-rock-cut-cave-temple/ https://roampedia.com/india/tamil-nadu/guides/kudumiyanmalai-musical-inscription-story