

கேரளக் கலை என்றதுமே பெரும்பாலானோரின் நினைவுக்கு வருவது வண்ணமயமான கதகளி நடனமும், மோகினியாட்டமும்தான். இவை மேடை சார்ந்த, சாஸ்திரீயக் கலைகளாக சர்வதேச அளவில் அறியப்பட்டவை.
ஆனால், கதகளியின் ஒப்பனைகளுக்கும் வண்ணங் களுக்கும் பின்னால் மறைந்திருக்கும் உண்மையான கேரளத்தின் ஆன்மாவைக் காண வேண்டுமெனில், நாம் வட மலபார் பகுதிக்குச் செல்லவேண்டும். அங்குதான் 'தெய்யம்' (Theyyam) எனும் சடங்குசார்ந்த, தாந்திரீகக் கூறுகள் நிறைந்த பழங்குடி வழிபாட்டுக் கலை உயிர்ப்போடு இயங்கிக்கொண்டிருக்கிறது.
கதகளி என்பது பார்வையாளர்களுக்காக மேடையில் நிகழ்த்தப்படும் நடனக் கலை; தெய்யம் என்பது பார்வையாளர்களைக் கடவுளின் முன் நிறுத்தும் இறையியல் மற்றும் வாழ்வியல் சடங்கு. இது நடனம், இசை, சைகை, நாட்டுப்புறக் கதைப்பாடல் ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு சமூக–மதச் சடங்கு; இது தலைமுறை தலைமுறையாக கிராமச் சமூகத்தின் நம்பிக்கை, நினைவு, நீதியுணர்வு ஆகியவற்றைக் கடத்தி வருகிறது.
தெய்யம் என்றால் என்ன?
'தெய்வம்' என்ற சொல்லின் மலையாள உருத்திரிபே 'தெய்யம்'. மனிதன் தன் உடலையும் ஆன்மாவையும் தெய்வத்திற்கு ஒப்படைத்து, தெய்வமாகவே மாறும் தாந்த்ரீகச் சடங்கு முறை இது.
இங்கு மனிதன் கடவுளைப்போல் வேடமிடுவதில்லை; மாறாக, குறிப்பிட்ட சடங்குகளுக்குப் பிறகு அந்த மனிதனே தெய்வமாக ஆவாஹனம் செய்யப்படுகிறான்.
இந்த நிகழ்வை மலையாளத்தில் ‘தெய்யாட்டம்’ அல்லது ‘திரயாட்டம்’, ‘களியாட்டம்’ என்று அழைப்பார்கள். தெய்யம் என்பது தெய்வத்தின் ஆட்டம் மட்டுமல்ல; தெய்வம் மனிதன் வழியாக சமூகத்தின் முன் வரும் நிகழ்வு.
எங்கு, எப்போது நடத்தப்படுகிறது?
தெய்யக் கலை கேரளா முழுமைக்கும் பொதுவானதல்ல. இது பிரத்யேகமாக வட மலபார் பகுதிகளான கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களின் கிராமப்புறங்களில் மட்டுமே கொண்டாடப்படுகிறது.
இவை பெருந்தெய்வ ஆலயங்களில் நடைபெறுவதில்லை. பெரும்பாலும் கிராமச் சிறுதெய்வக் கோயில்கள், ‘காவுகள்’ (தெய்வம் குடிகொண்டிருக்கும் புனிதக் காடுகள்) மற்றும் ‘தறவாடு’ (பரம்பரை) வீடுகளின் முன்றில்களில் நடைபெறுகின்றன. மரங்கள், கற்கள், பாம்புக் கடவுளர், குலதெய்வங்கள் சார்ந்த இந்தக் காவுகள்தான் தெய்யத்தின் உண்மையான சடங்குக் களங்கள்.
பொதுவாக நவம்பர் தொடக்கம் மே வரை - தெய்யக் காலம் நடைபெறுகிறது. எனினும், குறிப்பிட்ட காவுகள், குலங்கள், தெய்யங்களைப் பொறுத்து நிகழ்வுத் தேதிகள் மாறும்.
ஜாதியமைப்பும் சமூக முரண்நகையும்: யார் இந்தத் தெய்வங்கள்?
தெய்யத்தின் மிக முக்கியமான, நுட்பமான அம்சம் அதன் சமூகக் கட்டமைப்பு ஆகும்.
கேரளத்தின் ஜாதியக் கட்டமைப்பில் ஒடுக்கப்பட்டவர் களாகவும், தீண்டத் தகாதவர்களாகவும் ஆக்கப்பட்ட மலையன், வண்ணான், வேலன், பாணன், மாவிலன், அஞ்சுத்தன், கோபாலன், கோலத்தரி போன்ற சமூகங்களைச் சேர்ந்த ஆண்களே தெய்யக் கலைஞர்களாக இயங்குகிறார்கள். இவர்களில் பலர் பட்டியல் சாதியினராகவும், சிலர் பழங்குடி மரபுடன் தொடர்புடையவர்களாகவும் அடையாளம் காணப் படுகிறார்கள். பாரம்பரியமாக இது அவ்வினத்தாருக்கு மட்டுமே உரியது.
இங்குதான் ஒரு தலைகீழ் சமூக மாற்றம் நிகழ்கிறது:
· சமுதாயத்தில் எந்த உயர்த்தப்பட்ட சாதியினர் இந்த மனிதர்களை ஒதுக்கி வைத்தார்களோ, அதே உயர்த்தப்பட்ட சாதியினரும் நிலப்பிரபுக்களும் தெய்யக் காலத்தில் இந்த ஒடுக்கப்பட்ட மனிதர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெறுகிறார்கள். தெய்யக் கலைஞன் அந்தக் கணத்தில் ஒரு நடனக் கலைஞன் மட்டுமல்ல; சமூகத்தின் அச்சம், நம்பிக்கை, குற்றவுணர்வு, நீதியின் குரல் ஆகியவற்றைச் சுமக்கும் தெய்வமாகிறான்.
· தெய்யக் கலைஞன் தலையில் 'முடி' (பிரமாண்ட கிரீடம்) சூடியவுடன், அவன் தன் மனித அடையாளத்தை இழந்து தெய்வமாக மாறுகிறான். அவன் பேசும் சொல் 'தெய்வ வாக்கு' (தோற்றம்) ஆகக் கருதப்படுகிறது.
· நிலப்பிரபுத்துவ சமூகத்தின் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி உயிர் துறந்த அடித்தட்டு மனிதர்கள், வீரர்–வீராங்கனைகள், அநீதியை எதிர்த்துக் குரல் கொடுத்ததால் கொல்லப்பட்டவர்கள், முன்னோர்கள், இயற்கைத் தெய்வங்கள், பாம்பு வழிபாட்டுத் தெய்வங்கள், பக்தி மரபைச் சேர்ந்த தெய்வங்கள் ஆகியோரும் தெய்யத்தின் தெய்வங்களாக வழிபடப்படுகிறார்கள். பொட்டன் தெய்யம், முத்தப்பன், கதிவனூர் வீரன், விஷ்ணுமூர்த்தி, முச்சிலோட்டு பகவதி, ரக்தசாமுண்டி போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள்.
பொட்டன் தெய்யத்தின் தத்துவம்: "உன்னை வெட்டினாலும் ரத்தம் வரும்; என்னை வெட்டினாலும் ரத்தம் வரும். பின் எங்கே இருக்கிறது ஜாதி?" என்ற புகழ்பெற்ற உரையாடல், பொட்டன் தெய்யத்தின் 'தோற்றம் பாட்டில்' இடம் பெறுகிறது.
சடங்கின் படிநிலைகள்: மனிதன் தெய்வமாகும் மாற்றம்
தெய்யம் என்பது வெறுமனே அதற்குரிய ஆடை, அணிகலன்கள் அணிந்து, அலங்காரங்கள் செய்து கொண்டு ஆடும் நடனம் சாதாரணக் கலை அல்ல. இதற்குக் கடுமையான விரத முறைகள் உண்டு.
விரதம்: கலைஞர்கள் சடங்குக்கு முன் அசைவ உணவு தவிர்த்து, பிரம்மச்சரியம் காத்து, மனதையும் உடலையும் தூய்மைப்படுத்துவார்கள்.
தோற்றம் பாட்டு: சடங்கின் முதல் கட்டமாக, குறைந்த ஒப்பனையுடன் கலைஞன் எந்தத் தெய்வத்தின் அருள் பெறப்போகிறானோ, அந்த தெய்வத்தின் வரலாற்றையும் தோற்றத்தையும் பாட்டாகப் பாடுவான்.
முகத்தெழுத்து: மஞ்சள், அரிசி மாவு, கரித்தூள், சுண்ணாம்பு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட இயற்கைச் சாயங்களால் முகத்தில் மிக நுணுக்கமான தாந்திரீக வரைகலைகள் வரையப்படும். ஒவ்வொரு தெய்யத்திற்கும் அதன் சொந்த வண்ண அமைப்பும் வரி வடிவமும் உண்டு.
முடியேற்றுதல்: இறுதியாக, மரத்தாலும் குருத்தோலையாலும் செய்யப்பட்ட பல அடிகள் உயரமுள்ள பிரமாண்ட கிரீடத்தை (முடி) தலையில் வைக்கும் கணம், கலைஞன் மெய்மறந்து, Trance எனப்படும் வகையிலான தெய்வீகநிலையை அடைகிறான். இந்த நிலையில் அவன் வெளிப்படுத்தும் பேச்சு, ஆசீர்வாதம், எச்சரிக்கை ஆகியவை சமூகத்தால் தெய்வவாக்காக ஏற்கப்படுகின்றன.
தாந்த்ரீக மற்றும் ஆன்மிகக் கூறுகள்
தெய்யம் சிறுதெய்வ மரபு, முன்னோர் வழிபாடு, சாக்த மரபு, வீர வழிபாடு, இயற்கை வழிபாடு ஆகியவற்றின் கலவையாகும். இதில் தாந்த்ரீக மரபுகளின் வெளிப்பாடுகள் வலுவாக இருக்கும்.
தெய்யம் தெய்வத்தின் ஆடைகள், அலங்காரங்களில் சிவப்பின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதைக் காணலாம். சிவப்பு மற்றும் வெண்மை ஆகிய இரு நிறங்கள் மாறி மாறி இடம்பெறும். தாந்த்ரீகத் தத்துவார்த்த ரீதியில் இதிலுள்ள சிவப்பு நிறம் பெண் சக்தியையும், வெண்மை நிறம் ஆண் சக்தியையும் குறிக்கும். இது தவிர பொது வகையில் சிவப்பு நிறம் சக்தி, ரத்தம், துணிச்சல், பலியின் நினைவு ஆகியவற்றையும், வெண்மை நிறம் தூய்மை, ஞானம், பாதுகாப்பு ஆகியவற்றையும் குறிக்கும் என்ற மரபான விளக்கம் நிலவுகிறது.
தெய்யத்தின் தத்துவார்த்தச் சிறப்பு
தெய்யம் என்பது நிறுவனமயமாக்கப்பட்ட இந்து மதக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. இது இயற்கை வழிபாடு, முன்னோர்கள் வழிபாடு மற்றும் வீரர் வழிபாட்டின் கலவையாகும்.
இயற்கையின் கோபத்தையும் கருணையையும் ஒருசேரப் பிரதிபலிக்கும் இந்த வடிவத்தில், மனிதனுக்கும் இயற்கைக்கும், மனிதனுக்கும் இறைவனுக்குமான இடைவெளி முற்றிலுமாக அழிந்து போகிறது. எளிய மக்களின் துயரங்களுக்குக் காதுகொடுத்து, அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கும் ஒரு சமூக நீதி மன்றமாகவும் தெய்யக் களம் செயல்படுகிறது. நிலம், குடும்பம், கடன், சாதி, குடும்பப் பிரிவு, சமூக அநீதி போன்ற விவகாரங்களில் தெய்யத்தின் வாக்கு ஒரு வகையான சமூகத் தீர்ப்பாகவும் அங்கீகரிக்கப்படுவது இதன் தனித்தன்மை.
கதகளி போன்ற கலைகள் மேட்டுக்குடி ஆதரவோடும் அரச பரம்பரைகளின் அரவணைப்போடும் வளர்க்கப்பட்டபோது, தெய்யம் மலபாரின் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் கூட்டு நம்பிக்கையினாலும், மண் சார்ந்த ஆன்மிகத்தினாலும் உருவாகி வளர்ந்தது.
இருப்பினும், தெய்யம் முற்றிலும் மேல்தட்டு ஆதரவற்றது என்று கூற முடியாது; கோலத்திரி அரச மரபு, நிலப்பிரபுத்துவக் குடும்பங்கள், கோயில் அமைப்புகள் ஆகியவையும் அதன் வளர்ச்சியில் பங்கு வகித்துள்ளன. ஆனால் அதன் குரல், சடங்கு உரிமை, தெய்வீக அதிகாரம் ஆகியவை ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கைகளிலேயே நீடித்து வருகின்றன.
இன்று சுற்றுலா, மேடை நிகழ்ச்சிகள், ஊடகங்கள் ஆகியவை தெய்யத்திற்குப் புதிய பார்வையாளர்களை உருவாக்கியுள்ளன. ஆனால் தெய்யத்தின் உண்மையான உயிர் அதன் காவுகளிலும், கிராமச் சமூகங்களின் நம்பிக்கையிலும், கலைஞர்களின் பரம்பரை உரிமையிலும்தான் இருக்கிறது. அதை வெறும் காட்சிப் பொருளாக்காமல், அதன் சமூக நீதி, மனித கண்ணியம், சாதியெதிர்ப்பு வரலாறு ஆகியவற்றோடு பாதுகாப்பதே இன்றைய கடமை.